அஜித்தை ‘தல’ அந்தஸ்துக்கு உயர்த்திய 10 படங்கள்

கடந்த பத்து வருடங்களாக அதிக வெற்றிப் படங்களில் நடித்துவிட்டார் அஜித்...
அஜித்தை ‘தல’ அந்தஸ்துக்கு உயர்த்திய 10 படங்கள்

2001-ல் வெளியான தீனா படத்தில் இடம்பெற்ற ஒரு சிறிய கதாபாத்திரம், அஜித்தை தல என்று அழைப்பார். அதிலிருந்து ரசிகர்களுக்கு தல-யாக மாறினார் அஜித். இந்த அந்தஸ்து ஒருநாளில் வந்ததில்லை.

இன்று, அஜித்தின் 51-வது பிறந்தநாளைக் கோலாகலமாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகப் பிரபலங்களும் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழின் முன்னணி நடிகர்களில், முதல் மூன்று நடிகர்களில் ஒருவராக உள்ளார் அஜித். இதற்கான இடம் அவருக்கு ஓரிரு நாளில் கிடைக்கவில்லை. ஏராளமான தோல்விப் படங்களில் நடித்து பல சறுக்கல்களைச் சந்தித்து, அதன் வழியாகப் பாடங்களைக் கற்றுக்கொண்டு இந்த இடத்துக்கு உயர்ந்துள்ளார் அஜித். இந்த நிலைக்கு அஜித்தை உயர்த்தியதில் இந்தப் பத்து படங்களுக்கும் இடமுண்டு.

அமராவதி

படிப்பில் ஆர்வம் இல்லாததால் மாடலிங், கார் ரேஸிங், ஏற்றுமதி தொழில் எனப் பலவற்றிலும் ஈடுபட்டார் அஜித். 20 வயதில் ஆயத்த ஆடை ஏற்றுமதித் தொழிலில் நுழைந்து நஷ்டப்பட்டார். மாடலிங்கில் சம்பாதித்த பணத்தை பைக்குக்குச் செலவிட்டார்.

மாடலிங் உலகில் நுழைந்துவிட்டால் நிச்சயம் ஒரு திருப்புமுனை ஏற்படும். இயக்குநர், தயாரிப்பாளர் கண்ணில் பட்டு வாழ்க்கை திசை மாற ஒரு வழி பிறக்கும். முதல் வாய்ப்பு, தெலுங்குப் படத்தில் கிடைத்தது. அதன் வழியாகத் தமிழ்த் திரையுலகுக்குள் நுழைந்தார் அஜித்.

செல்வா இயக்கிய அமராவதி, அஜித்தின் முதல் தமிழ்ப் படம். அமராவதி கதையை பாடகர் எஸ்பிபியிடம் முதலில் சொல்லியிருக்கிறார் செல்வா. கதாநாயகன் வேடத்தில் நடிக்கப் புதுமுகம் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டுள்ளார். அமராவதிக்கு முன்பு தெலுங்குப் படமொன்றில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார் அஜித். அந்தப் படத்தில் அஜித்தைப் பார்த்திருந்த எஸ்.பி.பி., செல்வாவிடம் பரிந்துரைத்தார். உடனே தெலுங்குப் படக் குழுவினரிடம் அஜித்தைப் பற்றி விசாரித்தார் செல்வா. பிறகுதான் தெரிந்தது, அப்படத்தின் கதாநாயகன், சென்னை மந்தைவெளியில் வசிக்கிறார் என்று. உடனே அஜித்தைச் சந்தித்து படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டார்.

அமராவதி அஜித்தின் ஹிட் படங்களின் வரிசையில் இடம்பெறாது. ஆனால் அஜித் என்கிற ஒரு நடிகரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம்  செய்த ஒரு காரணத்துக்காகவே அஜித் திரை வாழ்க்கையில் அமராவதிக்கும் ஒரு முக்கிய இடமுண்டு.

முதல் படத்துக்குப் பிறகு விபத்தை எதிர்கொண்டதால் பைக் ரேஸிங்கை மூட்டைக் கட்டி வைத்துவிட்டார் அஜித். மூன்று அறுவை சிகிச்சைகளை எதிர்கொண்டு ஒன்றரை வருடங்கள் படுக்கையில் கிடந்தார். இதனால் ஏற்பட்ட நஷ்டங்களைச் சரிகட்ட தொடர்ந்து படங்களில் நடித்தார் அஜித், எந்த இலக்கும் இன்றி. அப்போதுதான், தொடர்ந்து நடிக்க ஆசையா எனக் கேட்டு வந்தார் இயக்குநர் வசந்த், ஆசை படத்துக்காக.

ஆசை

திரைப்படத் துறையில் தொடர்ந்து இயங்கலாம், மற்ற ஆர்வங்களையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிடலாம் என அஜித்தை எண்ண வைத்த படம். அஜித் நடித்த ஆறாவது படம். தனது கடனை அடைக்கும்வரை படங்களில் நடிக்கலாம் என்கிற எண்ணத்தில் இருந்த அஜித்தை இனிமேல் இதுதான் உன் வாழ்க்கை என்று நெற்றிப்பொட்டில் அடித்துச் சொன்ன படம்.

கிரிக்கெட், என்சிசியில் அஜித்தால் நினைத்ததைச் செய்யவில்லை. ஆயத்த ஆடை ஏற்றுமதித் தொழிலிலும் நஷ்டம், பைக் ரேஸிங்கிலும் நினைத்த உயரத்தை எட்ட முடியவில்லை. இளம் வயதில் பல சறுக்கல்களைச் சந்தித்த அஜித்துக்கு ஆசை படத்தின் வெற்றி தான் பெரிய நம்பிக்கையை அளித்தது.

ஆசை படம் வெளியாகும்வரை வெற்றி என்றால் அது எப்படியிருக்கும் என்பதை உணராதவர் அஜித். மணி ரத்னம் தயாரிப்பு, வசந்த் இயக்குநர் என்பதால் ஒப்புக்கொண்ட படம் இது.

காதல் கதை தான் என்றாலும் அதைப் பரபரப்பான காட்சிகளின் மூலம் திரைக்கதை அமைத்திருந்தார் வசந்த். பிரகாஷ் ராஜின் வில்லத்தனத்தை அஜித் எதிர்கொள்ளும் விதமும் தேவாவின் அட்டகாசமான பாடல்களும் படத்தை சூப்பர் ஹிட்டாக்கின. அஜித்துக்கு முதல்முதலாக ரசிகர் படை உருவானது. முக்கியமாக முதலில் ரசிகைகள் தான் அதிகம் கிடைத்தார்கள்.

புதுக்கதாநாயகன் ஒருவன் வந்துவிட்டான் என்று தமிழ்த் திரையுலகினருக்குத் தெரிவித்த படமாக ஆசை அமைந்தது.

ஆசை படத்துக்குப் பிறகு இஷ்டத்துக்குப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜித். கதையை விடவும் இயக்குநர்களை நம்பினார். ஆனால் இது தவறான முடிவு என்பதை உணர்வதற்குள் தோல்விகள் வரிசைக்கட்டி நின்றன. உல்லாசம் படம் தோல்வியடைந்தபோது அஜித் படம் தோல்வி என்று ரசிகர்கள் கூறியபோதுதான் தன்னுடைய தவறை உணர்ந்தார் அஜித். அப்போது விஜய் அதிக வெற்றிகளைப் பெற்றிருந்த நேரம். சுதாரித்துக்கொண்டார் அஜித்.

காதல் கோட்டை

தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடிக்கும் ஒரு படத்தில் தான் நடிக்கப் போகிறோம் என்றெல்லாம் எண்ணி அஜித் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அகத்தியன் மீதுள்ள மரியாதை மற்றும் அவர் சொன்ன கதை போன்ற காரணங்களால் ஒப்புக்கொண்டார்.

சந்திக்காமல் கடிதங்கள் வழியாகக் காதல் உணர்வை வளர்த்துக்கொள்ளும் இருவர் என்கிற கதையே ரசிகர்களுக்குப் புதிதாக இருந்தது. 2-ம் பாதியில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டாலும் அடையாளம் தெரியாமல் முட்டிக்கொள்வதும் ரசிகர்களுக்குப் பரபரப்பை உண்டாக்கியது.

முதல் காட்சியில் படம் பார்த்தவர்கள் வியப்புடன் திரையரங்கை விட்டு வெளியே வந்து படத்தின் விளம்பரத் தொடர்பாளர்களாக மாறினார்கள். வாட்சப், ஃபேஸ்புக் எல்லாம் இல்லாத காலத்திலேயே படம் பற்றிய நல்ல விமரிசனங்கள் மக்களிடையே பரவியது. எதிர்பாராதவிதமாகப் படம் சூப்பர் ஹிட்டானது. 2-வது வெற்றியை அடைந்த அஜித், புதிய நட்சத்திரமாக உருவானார்.

எனினும் ஆசை, காதல் கோட்டை படங்களின் அட்டகாச வெற்றிகளுக்குப் பிறகு வாழ்க்கை வசந்தமாகவில்லை. தொடர்ந்து ஐந்து படங்கள் தோல்வியைத் தழுவின. இரண்டு வாரங்கள் கூட ஓடவில்லை என்று ஒரு பேட்டியில் அப்போதைய நிலைமையை விவரிக்கிறார் அஜித். ஆனால் 1999-ம் வருடத்தில் இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் அஜித்துக்கு அமைந்தன.

வாலி

நவம்பர் 1998ல் ஒரு அறுவை சிகிச்சையும் 1999 ஜனவரியில் மற்றொரு அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார் அஜித். இதனால் உடைந்து போய்விடக்கூடாது என்று வாலி மற்றும் உன்னைத் தேடி படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

ரசிகைகள் என் அழகுக்காக என்னை ரசிக்கக்கூடாது. நடிப்பைத்தான் அவர்கள் விரும்பவேண்டும் என்பார் அஜித். அந்த ஆசையை நிறைவேற்றிய படம் வாலி.

வாலிக்கு முன்பு காதல் கோட்டைக்குப் பிறகு அஜித் நடித்த படங்கள் - நேசம், ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு, காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உயிரோடு உயிராக, தொடரும், உன்னை தேடி....

என்ன, சில படங்களின் பெயர்களைப் பார்த்தால் பீதி கிளம்புகிறதா? இவற்றில் ஒரு சில படங்களைத் தவிர மற்றதெல்லாம் அட்டர் பிளாப்.

இதற்கு முன்பு ஆசை, காதல் கோட்டை என இரு படங்களில் மட்டுமே வெற்றியைக் கண்ட அஜித்துக்கு மிரட்டலான வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் பெயர் வாங்கிக் கொடுத்த படம் - வாலி.

ஆசை, உல்லாசம் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதால் எஸ்.ஜே. சூர்யாவுக்கு அஜித் நல்ல நண்பராக இருந்தார். அவர் சொன்ன கதை அஜித்துக்குப் பிடித்ததால் உடனே ஒப்புக்கொண்டார். இரட்டை வேடங்களில் நடிப்பது என்பதே அஜித்துக்குப் புதிதாக இருந்தது.

அண்ணன், தம்பி என இரு வேடங்கள். மிரட்டலான அண்ணன் வேடத்தில் வெளிப்பட்ட அஜித்தின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அஜித்தின் நடிப்புக்குத் திரையரங்குகளில் கைத்தட்டல் அள்ளியது. அஜித் எத்தனை வெற்றிகள் பெற்றாலும் வாலி போல வருமா என்று இன்றைக்கும் எண்ணும் அளவுக்கு மகத்தான படமாக அமைந்தது.     

அமர்க்களம்

அமர்க்களம் படம் அஜித்துக்கு இரு திருப்புமுனைகளை அளித்தது.

ஒரு ஆக்‌ஷன் நடிகராக அஜித்தை முன்னேற வைத்ததில் அமர்க்களம் படத்துக்கு முக்கியப் பங்குண்டு.

அஜித்தின் 25-வது படம், 25 வாரங்கள் ஓடி அஜித்தின் திரை வாழ்க்கையை மாற்றியமைத்தது.

1996-ல் காதல் கோட்டை படம் வெற்றி பெற்ற பிறகு நிறைய காதல் படங்களில் நடித்து வந்தார் அஜித். இந்நிலையில் 1999-ல் வெளியான சரண் இயக்கிய அமர்க்களம் படம் ஒரேடியாக அவருடைய அந்தஸ்த்தை உயர்த்தியது. காதல் படங்களில் நடித்தது போதும், ஆக்‌ஷன் படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள், அந்தப் படங்கள் தான் வசூலில் சாதனை படைக்கின்றன என அஜித்துக்குத் தெரிவித்த படம் இது. ரசிகர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து இன்றுவரை ஆக்‌ஷன் படங்களில் அஜித் தொடர்ந்து நடித்து வருவதற்குத் தொடக்கப் புள்ளி, அமர்க்களம் தான்.

சினிமாவில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் அஜித்துக்குப் புதிய அத்தியாயத்தை எழுதியது. இந்தப் படத்தில் நடித்தபோதுதான் அஜித்தும் ஷாலினியும் காதலித்து பிறகு 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்துகொண்டார்கள்.

பில்லா

1980-ல் வெளியான பில்லா படத்தின் மறு உருவாக்கம். ஸ்டைலான உருவாக்கத்தில் விஷ்ணுவர்தன் அசத்திய படம். அஜித்தை இதுபோல இதற்கு முன்பு பார்த்ததில்லையே என்று எண்ணவைத்த படம்.

அறிந்தும் அறியாமலும், பட்டியல் என இரு வெற்றிகளைக் கொடுத்த விஷ்ணு வர்தன், அஜித்துக்காக ஒரு கதையைத் தயார் செய்துகொண்டிருந்த நேரத்தில் அஜித் சொன்னார் - பில்லாவைக் கையில் எடுங்கள்.

அதிகப் பொருட்செலவில் உருவான படம் நல்லவேளையாக ரசிகர்களை ஏமாற்றவில்லை. ஸ்டைலான அஜித்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினார்கள். 2010களில் அஜித்தின் படங்களைப் பிரமாண்டமாக உருவாக்க பில்லாவின் வெற்றி முக்கியக் காரணமாக அமைந்தது

மங்காத்தா

இன்றைக்கும் இந்தப் படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் சமூகவலைத்தளங்களில் ஒரு பரபரப்பு ஏற்படும்.

அஜித் ரசிகர்கள் கொண்டாடிய இன்னொரு படம். திரையரங்குகளைத் திருவிழாவாக மாற்றிய படம்.

2010களுக்குப் பிறகு அஜித் அதிக வெற்றிகளைப் பெற்றுவருகிறார். அதன் தொடக்கம் - மங்காத்தா. ஏகன், அசல் என இரு படங்களால் மிரண்டு போயிருந்த அஜித் ரசிகர்களைக் குளிரவைத்த படமும் இதுதான்.

சால்ட் அண்ட் பெப்பர் வேடத்தில் தன் வயதை, தோற்றத்தை மறந்து இன்னும் சொல்லப் போனால் அதையே கதாபாத்திரத்தின் அழகுகளில் ஒன்றாக மாற்றிக் காட்டினார் அஜித். ரஜினி போல வில்லத்தனமான வேடங்களில் அஜித் அசத்திய படம். தமிழ் சினிமாவின் நவ இயக்குநர்களில் ஒருவராகப் பெயர் பெற்றுள்ள வெங்கட் பிரபு, அஜித்துக்குப் பெரிய வெற்றியை அளித்து அஜித் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படமாக மங்காத்தை உருவாக்கினார். மங்காத்தாவுக்குப் பிறகு அஜித் மார்க்கெட் உச்சத்துக்குச் சென்றுவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

வீரம்

ஒரு மகத்தான கூட்டணியின் ஆரம்பம். வீரம் படம் உருவாகும்போது அஜித்துடன் அடுத்தடுத்த படங்களை சிவா தான் இயக்குவார் என யாரும் அறியவில்லை.

சிவா இப்படியெல்லாம் ஒரு பெரிய நடிகரை வைத்துப் படமெடுப்பார் என யாரும் அறிந்திராத நேரம் அது. அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றம் இந்தப் படத்திலும்  தொடர்ந்தது. கிராமத்துப் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ அவை அனைத்தும் இந்தப் படத்தில் இருந்தன. அஜித், தமன்னா மட்டுமல்லாமல் படத்தில் அற்புதமான துணைக் கதாபாத்திரங்கள் அமைந்தன. ஆக்‌ஷன்களுக்கு இணையாக இருந்த நகைச்சுவைக் காட்சிகளை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.

ஆரம்பம் முதல் கடைசி வரை பரபரவென்று காட்சிகள் நகர்ந்ததால் படம் சூப்பர் ஹிட்டானது. சிவா மீது அஜித் எந்தளவுக்கு மரியாதையும் நம்பிக்கையும் வைத்துள்ளார் என்பது போகப் போகத்தான் தெரிந்தது. அதற்குக் காரணம், வீரம் கொடுத்த மகத்தான வெற்றி.

வேதாளம்

வீரம் படத்துக்குப் பிறகு என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அது மோசமான படமில்லையென்றாலும் வீரம் படத்தின் வெற்றி, சிவா மீது அஜித்திடம் அதிக நம்பிக்கையை உருவாக்கியது. சிவாவை நம்பினால் தோல்வி இருக்காது என உணர்ந்தார் அஜித்.

வழக்கமான வில்லன்களுக்கு எதிரான காட்சிகள் படத்தில் இருந்தாலும் அண்ணன் - தங்கை இடையிலான காட்சிகள் தான் இதர அஜித் படங்களிலிருந்து வேதாளத்தை வித்தியாசப்படுத்தியது. அனிருத்தின் ஆலுமா டோலுமா பாடல், படத்தின் கொண்டாட்டத்தை அதிகரித்தது. அனிருத்துக்கும் மகத்தான பாடலாகவும் அமைந்தது.

விஸ்வாசம்

அஜித் - சிவா கூட்டணி இரு வெற்றிகளுக்குப் பிறகு விவேகம் படத்தில் சறுக்கியது. வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் இயக்குநரை ஒரேடியாகக் கழற்றிவிடுவார்கள் கதாநாயகர்கள். ஆனால் அஜித் அப்படிச் செய்யவில்லை. சிவாவுடன் இணைந்து உடனே ஒரு வெற்றியை அளிக்கவேண்டும் என முடிவெடுத்தார். தமிழ்த் திரையுலகில் இதுபோன்ற உணர்வுபூர்வமான முடிவுகளுக்கு இடமில்லை. ஆனால் ஒரு படத்தின் தோல்வி, சிவாவின் திறமையை மறைத்துவிடாது என திடமாக நம்பினார். தோல்வியுடன் சிவாவைப் பிரியக்கூடாது, ஒரு வெற்றியுடன் தான் அவர் மற்ற கதாநாயகர்களை இயக்கவேண்டும் என எண்ணினார்.

வேதாளம் போல மற்றுமொரு உணர்வுபூர்வமான கதையைக் கையில் எடுத்தார் சிவா. தனக்குப் பாதுகாவலராக இருப்பவர் தனது தந்தை தான் என்பதை அறியாத மகள் என்கிற கதை அமைப்பு, ரசிகர்களின் மனத்தைக் கரைய வைத்தது. கடைசிக்காட்சியில் தனக்காக அடி வாங்குபவர் தனது தந்தை தான் என்பதை மகள் அறிந்தபோது திரையரங்குகளைக் கண்ணீரால் நனைத்தார்கள் ரசிகர்கள்.

2019 பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துடன் போட்டியிட்ட விஸ்வாசம், தமிழ்நாட்டில் அதிக வசூலை அள்ளி சாதனை செய்தது. அஜித் எண்ணியது போலவே, ஒரு வெற்றிக்குப் பிறகு அஜித்தை விட்டு விலகி அடுத்ததாக ரஜினியை இயக்கினார் சிவா.

*

கடந்த பத்து வருடங்களாக அதிக வெற்றிப் படங்களில் நடித்துவிட்டார் அஜித். தனக்கேற்ற சரியான இயக்குநர்களை அவர் தேர்வு செய்ததுதான் இதற்கு முக்கியக் காரணம். அஜித்தின் பயணத்தில் அடுத்தப் பத்து வருடங்களில் இன்னும் அதிகமான வெற்றிப் படங்கள் இணையுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.