உனக்கு செட்டே ஆக மாட்டேன்: தடாலடித்த லேடி சூப்பர் ஸ்டார்!

இது பலராலும் பல வேளைகளில் உண்மையிலேயே காதலை நிராகரிக்கும் போதுகூட பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 
நான் உனக்கு செட்டே ஆக மாட்டேன்: பகிரங்கமாக சொன்ன லேடி சூப்பர் ஸ்டார்
நான் உனக்கு செட்டே ஆக மாட்டேன்: பகிரங்கமாக சொன்ன லேடி சூப்பர் ஸ்டார்

நான் உனக்கு செட்டே ஆக மாட்டேன் என்பது ராஜா ராணியில் நயன்தாராவின் டயலாக். ஜெய் தனது காதலைச் சொல்லும் அழகான தருணத்தில்தான் நயன்தாரா இதனைச் சொல்லியிருப்பார். இது பலராலும் பல வேளைகளில் உண்மையிலேயே காதலை நிராகரிக்கும் போதுகூட பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 

காதல் தோல்வியே வாழ்வின் இறுதியல்ல... காதல் தோல்விக்குப் பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்பதை இளசுகளுக்குப் புரியும் வகையில் சொன்னது இப்படம்.

புதுமுக இயக்குநராக அட்லீ எழுதி, இயக்கி, 2013ஆம் ஆண்டு வெளியான மிக ஜாலியான காதல் திரைப்படம் ராஜா ராணி. படத்தில் நயன்தாரா, நஸ்ரியா, ஆர்யா, ஜெய், சத்தியராஜ், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

மௌன ராகத்தின் இரண்டாம் பதிப்பாக, ஆனால் ஆர்யாவுக்கும் ஒரு அழகிய காதலியை சேர்த்து, இந்தத் தலைமுறைக்குப் பிடிக்கும் வகையில் மிகத் துள்ளலோடு வெளியான ராஜா ராணியில் ஜெய்யின் காதலியாகவும் ஆர்யாவின் மனைவியாகவும் ரெஜினா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நயன். 

இந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை நயன்தாரா பெற்றிருந்தார். இப்படம் ஃபிலிம்பேர் மற்றும் தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகளையும் வாரிக் குவித்திருந்தது.

ராஜா ராணி படத்தின் துவக்கமே ஆர்யா - நயன் திருமணம் தான். தங்களது மனதில் ஆறா வடுவாக மாறிய முதல் காதலால், திருமண உறவில் இணைய முடியாமல் தவிக்கும் இருவரும், மற்றவர்களின் காதல் தோல்வி எனும் சோகக் கதையை தெரிந்து கொண்டு மனம் மாறுவதும் ஆனால் இருவருக்கும் இருக்கும் அந்த ஈகோ அவர்களை சேர விடாமல் தடுப்பதும் அதை வழக்கமான சுபம் போட்டு முடிப்பது கதை.

 இருவருமே ஒருவரை ஒருவர் வெறுக்கும் காட்சிகளாகட்டும், ஆர்யாவின் காதலைப் பற்றி தெரிந்து கொண்டு, மனதை மாற்றி, தனது திருமண வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற ஆசையோடு ஆர்யாவை நெருங்கும் காட்சிகளாகட்டும் நயன்தாராவின் முகபாவனைகள் அடுத்தடுத்து மாறுவது சபாஷ் பெற வைத்தது. 

நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் தனித்தனியே, அழகான காதலுடன் தொடங்கி அழுகையை அடக்க முடியாமல் தவிக்க வைக்கும் முடிவோடு பிளாஷ்பேக் விரிகிறது.  

காதலியின் மரணத்தை கண்முன் பார்த்த ஆர்யாவே, மனதைத் தேற்றிக் கொண்டு புது வாழ்க்கைக்குத் தயாராகும் போது, தன் காதலன் செத்துவிட்டான் என்று தொலைபேசியில் கேட்டுவிட்டு தவித்துக் கொண்டிருக்கும் தான், ஏன் மாறக் கூடாது என்று சமாதானம் சொல்லும் நயன்தாராவை தடுத்தது அந்த ஒரு ஈகோமட்டும்தான். 

தனது காதலன் இறந்துவிட்டதாக வரும் போன் அழைப்பின் போது கண்கள் இருண்டு என்ன நடக்கிறது என்று புரியாமல் தடுமாறும் நயன்தாராவுக்கு வலிப்பு வந்து துடிக்கும் போது உண்மையில் அவரது ரசிகர்களும் துடித்துதான் போயிருப்பார்கள். 

அதாவது இரண்டு காதல், ஒரு திருமணம் என பின்னப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜெய் - நயன்தாரா, காதலில் விழுவதற்கு முன்பு, அப்பட்டமான ஒரு துணிச்சல் நிறைந்த கல்லூரி மாணவியாக துள்ளலோடு நடித்திருப்பார்.  ஜெய் வேலை செய்யும் செல்லிடப்பேசி சேவை நிறுவனத்தை உண்டு இல்லை என்று ஆக்கும் காட்சிகளில் அவரது குறும்புத்தனம் அழகாக வெளிப்படும். அதேப்போல தனக்கு நேர் எதிரான, பயந்தாங்கோலியான ஜெய் மீது காதல் கொள்கிறார். உனக்கு நான் செட்டே ஆக மாட்டேன்.. எங்கயாவது தேன்மொழி, கனிமொழி என்று வாய்க்கா வரப்பில் இருப்பா அவள தேடித் தேடி லவ் பண்ணுனு சொல்லும் வசனமும், அதிகம் கவர்ந்தன. 

தந்தைக்கு செல்ல மகளாக இருந்தும், திருட்டுக் கல்யாணம் செய்து கொள்ள திருமணப் பதிவு மையத்தில் காலையில் ஒரு குதூகலத்துடன் நின்றிருக்கும் அந்த அழகிய மணப்பெண் நயன்தாரா, இரவு வரை ஜெய் வராததால் தவிப்புடன் நின்றிருக்கும் நயன்தாரா என நடிப்பில் இரண்டு சிகரங்களையும் தொட்டிருப்பார்.

மௌன ராகம் திரைப்படத்தில் ரயில் நிலையத்தில் க்ளைமாக்ஸ். இந்தப் படத்திலோ விமான நிலையத்தில்.

இறந்துவிட்டதாக நினைத்திருக்கும் ஜெய்-யை விமான நிலையத்தில் பார்த்ததும் தான் க்ளைமாக்ஸ் சூடுபிடிக்கத் தொடங்கும். நயன்தாரா சொல்ல வருவதை வழக்கம்போல அரைகுறையாகப் புரிந்து கொண்டு சென்ற அர்யாவிடம், அழுதுகொண்டே பேசுவார். தான் ஒவ்வொரு முறையும் காதலைச் சொல்ல வரும்போதெல்லாம் முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டுவந்து பேசியே காரியத்தைக் கெடுக்கும் ஆர்யாவிடம் நான் என்ன சொல்ல வர்றேனு ஒரு முறை கூட கேட்க மாட்டீயா என கண்ணீர் சிந்தும் நயன்தாராவைப் பார்க்கும் பலரும் எதிரே, ஆர்யாவைப்போலவே குற்ற உணர்ச்சியில் நின்றிருப்பதாகவே உணர்ந்திருப்பார்கள். 

மௌன ராகத்தில் விவாகரத்துப் பத்திரத்தைக் கிழித்து மோகன் கையில் கொடுக்கும் ரேவதியைப் போல, தான் கொடுத்துப் பிரித்துப் பார்க்காமலேயே விட்டுப் போன பரிசை ஆர்யாவின் கையில் திணிக்கிறார்.

படத்தில், சத்தியராஜ் தவிர்த்து முக்கிய கதாபாத்திரங்கள் ஐந்து. அதில், அனைவருமே தங்களது பங்கினை வெகுச் சிறப்பாக செய்திருப்பார்கள். ஆனால், படம் முழுக்க நிறைந்திருக்கும் நயன்தாரா அதற்கான நியாயத்தையும்  செய்திருப்பார்.

'உனக்கு நான் செட்டே ஆக மாட்டேன்', 'சொல்லுங்க.. சார் அப்படி என்னதான் சொல்றீங்கனு பார்க்கலாம்?' போன்ற நயன்தாரா பேசிய வசனங்கள் பட்டையைக் கிளப்பின. இன்னும் பலராலும் இந்த வசனங்கள் பேசப்படுகின்றன.

மௌன ராகம் படத்தில் கொலுசு போட்டுக் கொண்டு மோகனிடம் வரும் ரேவதியை, தனது கணவர் ஆர்யாவிடம், மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று தெரிவிக்கும் பரிசுப் பொருளைக் கொடுத்து ஏமாறும் நயன்தாராவிடம் பார்க்க முடிந்தது.

இந்தப் படம் திரையுலகில் வசூலிலும், ரசிகர்களின் வரவேற்பிலும் ஏகபோக வெற்றி பெற்றதோடு, 2014 - 15ஆம் ஆண்டில் எடிசன் விருதுகள், நார்வே தமிழ்த் திரைப்பட விருதுகள், விஜய் விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள், தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகளையும் வென்றது.

நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க முக்கிய காரணமாக இருந்த படமாகக் கூட இதைச் சொல்லலாம். உண்மையில் ராஜாவின் ராணியாகவே மிளிர்ந்தார் நயன்தாரா எனும் லேடி சூப்பர் ஸ்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com