சத்யாவின் மரணத்துக்குப் பிறகாவது திருந்துமா தமிழ் சினிமா ?

தமிழ்த் திரைப்படங்களில் காதல் என்ற பெயரில் ஆதரிக்கப்படும் ஸ்டாக்கிங் 
சத்யாவின் மரணத்துக்குப் பிறகாவது திருந்துமா தமிழ் சினிமா ?

சென்னையில் கடந்த 13 ஆம் தேதி சத்யா என்ற கல்லூரி மாணவி, சதீஷ் என்ற இளைஞரால் மின்சார ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

பள்ளி நாட்களில் சதீஷும் சத்யாவும் காதலித்து வந்துள்ளனர். சதீஷின் நடத்தை சரியில்லாததைக் காரணம் காட்டி சத்யாவிடம் அவரது பெற்றோர் எச்சரித்திருக்கின்றனர். இதனையடுத்து சதீஷுடனான காதலை சத்யா துண்டித்திருக்கிறார். ஆனாலும் விடாமல்  தன்னை காதலிக்குமாறு சத்யாவை, சதீஷ் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்திருக்கிறார். 

சத்யாவுக்கு வேறு நபருடன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இதனை அறிந்த சதீஷ், கல்லூரி செல்வதற்காக ரயில் நிலையம் வந்த மாணவி சத்யாவை
வழிமறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து  காதலிக்க மறுக்கவே உச்சகட்ட கோபத்தில் தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் சத்யாவை, சதீஷ் தள்ளிவிட்டுள்ளார். ரயிலில் சிக்கி, சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. 

முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி, 2021 ஆம் ஆண்டு தாம்பரம் ரயில் நிலையத்தில்
கல்லூரி மாணவி ஸ்வேதா உள்ளிட்டோர் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 

காதலிக்க மறுக்கும் பெண்களின் மேல் ஆசிட் வீசுவது, கொலை செய்வது என நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாத இளைஞர்கள் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த செய்திகளைக் குறிப்பிடும்போது சில ஊடகங்கள் ஒரு தலைக் காதல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். 

பிடிக்காத பெண்ணைப் பின்தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு கூறி துன்புறுத்துவது எப்படி காதலாகும்? 

ஆங்கிலத்தில் இதுபோன்ற செயல்களை ஸ்டாக்கிங் (Stalking) என்கின்றனர். ஸ்டாக்கிங் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையே தேட முயன்றபோது,  'வன்தொடர்' என குறிப்பிடலாம் என்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. 

தமிழ் சினிமா தொடர்ச்சியாக ஸ்டாக்கிங்கை ஆதரித்து வந்திருக்கிறது.  நாயகியின் அழகில் மயங்கும் கதாநாயகன் அவர் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்துவார். துவக்கத்தில் நாயகன் மீது எரிந்துவிழும் நாயகி, ஒரு கட்டத்தில் நாயகன் உண்மையான அன்பை
புரிந்துகொண்டு காதலிப்பதாகக் காட்டப்படும். 

ஒரு பெண்ணுக்குத் தன்னை பிடிக்கவில்லையென்றாலும் அந்தப் பெண் போகும் இடமெல்லாம் பின்தொடர்ந்து காதலிக்க வைத்துவிட்டால் அது ஹீரோயிசம். கெத்து. அது நாயகனின் திறமைக்கு சான்று. சில படங்களில் கதாநாயகர்கள் தங்கள் நண்பர்களுக்கு லவ் குருவாக இருந்து வழங்கும் காதல் அறிவுரை எல்லாம் ஸ்டாக்கிங் ஆகத்தான் இருக்கும்.  

தமிழ் சினிமாவில் ஸ்டாக்கிங் 

கடந்த 90களிலும் 2000 ஆம் ஆண்டின் துவக்கத்திலும் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக காதல் கதைகள் வெளியாகி பெறும் வெற்றிபெற்றன. காதல் கோட்டை, காதல் மன்னன், காதல் தேசம், லவ் டுடே, காதலர் தினம், காலமெல்லாம் காதல் வாழ்க, என்றென்றும் காதல் என படங்களின் பெயர்களிலேயே காதல் இடம்பெற்றிருந்தது. ஆனால் இப்பொழுது யோசித்துப் பார்த்தால் இவற்றுக்கு ஸ்டாக்கிங் மன்னன், ஸ்டாக்கிங் தேசம், காலமெல்லாம் ஸ்டாக்கிங் வாழ்க, ஸ்டாக்கிங் டுடே என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். 

காரணம் மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான படங்களில் நாயகியை துரத்தி துரத்தி கதாநாயகன் காதலிப்பார், நாயகி கதாநாயகனின் காதலை ஏற்றாரா? இல்லையா? என்பது தான் கதையாக இருக்கும். ஒரு வகையில் அப்போதைய காலகட்டத்தை இந்தப் படங்கள் பிரதிபலித்தது எனலாம். 

இப்படங்கள் ஒரு பெண்ணை தொடர்ந்து ஒரு ஆண் வற்புறுத்தினால் ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக்கொண்டுவிடுவாள் என்ற தவறான பொருளை மறைமுகமாக ரசிகர்களுக்கு கடத்தின. இவை பெரும்பாலும் விஜய், அஜித் நடித்த படங்கள். இருவரும் காதல் படங்களில் தொடர்ச்சியாக நடித்துதான் ரசிகர்களின் மனதில் இடம்படித்திருக்கிறார்கள்.  

காதல் ஆண், பெண் இருவருக்கும் இடையே நிகழும் ரசாயன மாற்றம் அல்லது இயல்பாக தோன்றக் கூடிய எண்ணம் என எப்படி வேண்டுமானாலும்
எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இருவருக்கும் நிகழ்ந்தால் மட்டுமே அது காதல்.

இப்பொழுது சமூக வலைதளங்களின் காலகட்டம். ஆண் - பெண் உறவு மிக இயல்பாக மாறியிருக்கிறது. இப்பொழுதும் ஸ்டாக்கிங்கை ஆதரிப்பது
எவ்வாறு சரியாகும்? கடந்த சில ஆண்டுகளாக ஸ்டாக்கிங் என்றாலே சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் பெயர் அடிபடுகிறது. 

விஜய், அஜித் துவங்கி, இப்பொழுது உள்ள இளம் கதாநாயகர்கள் வரை இளைஞர்களிடம் மனதில் இடம்பிடிக்க காதல் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயன் அதிக காதல் படங்களில் நடித்துவருகிறார் அல்லது அவரது படங்களில் காதலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. 

சிவகார்த்திகேயன் படங்களில் ஸ்டாக்கிங் தொடர்ச்சியாக ஆதரிக்கப்பட்டுவருவதாகவே பார்க்க முடிகிறது. எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ கடைசியாக வெளியான டான் வரை அவரது படங்களில் கதாநாயகிகளை ஸ்டாக்கிங் செய்து அவர்களை காதலிக்கவைப்பதாகக் காட்டப்படும். 

அவரது ரெமோ படத்தில் ஒரு பாடலில் கூட ''எனக்கு நீ ஈஸியாலாம் வேணாம். பேசிப்பேசி கரெக்ட் பண்ணுவேன் நான்தான்'' என்ற ஒரு வரி வரும். அதாவது நீ போகும் இடமெல்லாம் பின்னாலேயே வந்து உனக்கு பிடிக்கவில்லையென்றாலும் பேசிப்பேசி துன்புறுத்தி வேறு வழியில்லாமல் நீ என்னை காதலிக்குமாறு செய்வேன் என்பதைப் பெருமையாகச் சொல்கிறது அந்த வரி. 

சிவகார்த்திகேயனின் முன்னோடியான விஜய், அஜித் இப்பொழுது மாறியிருக்கிறார்கள். 'நோ மீன்ஸ் நோ' என தங்களின் படங்களில் பேசத் துவங்கியிருக்கிறார்கள். சிவகார்த்திகேயனும் அவர்களைப் பின்பற்றி ஸ்டாக்கிங்கைக் கைவிட வேண்டும். ஏனெனில் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். 

திரைப்படங்கள் சமூகத்தைத் தான் பிரதிபலிக்கிறது அல்லது சமூகம் திரைப்படங்களைப் பார்த்துதான் தவறாக நடந்துகொள்கிறது என விவாதித்துக்கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். குறைந்தபட்சம் திரைப்படங்கள் ஸ்டாக்கிங் போன்ற மோசமான செயலை ஹீரோயிசம் என்ற பெயரில் ஆதரிக்காமல் இருக்க வேண்டும் - ரசிகர்களும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com