ஹிந்தி படங்களின் நிலை தென்னிந்திய படங்களுக்கும் ஏற்படுமா?

ஹிந்தி படங்களின் நிலை தென்னிந்திய படங்களுக்கும் ஏற்படுமா?

ஹிந்தி படங்களின் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஒரு அலசல் 

ஹிந்தியில் வெளிவரும் படங்கள் எல்லாம் அடுத்தடுத்துத் தோல்வியைச் சந்தித்துவரும் நிலையில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக இருந்த ஒரு ஹிந்திப் படம் கைவிடப்பட்டிருக்கிறது. திணறும் ஹிந்தித் திரையிலகில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது?

ஆமிர் கானின் 'லால் சிங் சத்தா' படம் ரூ. 180 கோடி பொருட்செலவில் உருவாகியிருந்தது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியான இந்தப் படம் ரூ. 127 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

லால் சிங் சத்தா படம் வெளியானபோது, பாய்காட் லால் சிங் சத்தா என்ற ஹேஷ்டேக்கை ஹிந்தி ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்தனர். காரணம் ஆமிர்கான் தனது பிகே படத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாகக்  கூறி, அவரது லால் சிங் சத்தா படத்தைப் புறக்கணியுங்கள் என்று பதிவிட்டனர். இதன் விளைவாகவோ அல்லது ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போனதாலோ என்னவோ இந்தப் படம் படு தோல்வியைச் சந்தித்தது. 

சமீப காலங்களாக ஹிந்தித் திரையுலகம் இஸ்லாமியர்களாலும், வாரிசு நடிகர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற எண்ணம் ஹிந்தி  ரசிகர்களிடையே நிலவுகிறது. குறிப்பாக, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு நடிகர்களால் அவருக்குப் பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக ஹிந்தி ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

அக்ஷய் குமார் நடிப்பில் ரூ.70 கோடி பொருட் செலவில் உருவான ரக்ஷா பந்தன் வெறும் ரூ. 60 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. மாதம் ஒரு படம் என்ற ரீதியில் வெளியாகும் அக்ஷய் குமாரின் படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்துவருகின்றன. உதாரணமாக அக்ஷய் குமார் நடிப்பில் ராட்சசன் பட ஹிந்தி ரீமேக்கான கட்புட்லி சமீபத்தில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

கரண் ஜோகர் தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' படம் ரூ. 140 கோடி பொருட் செலவில் உருவாகியிருந்தது. ஆனால், இந்தப் படம் வெறும் ரூ.47 கோடி மட்டுமே வசூலித்து படுதோல்வியை சந்தித்துள்ளது. பாய்காட் லைகர் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாவது குறித்து கேட்டபோது, என் படத்தைப் பிடித்தால் பாருங்கள் என விஜய் தேவரகொண்டா பேசியதே, ரசிகர்கள் அவரது படத்தைப் புறக்கணிக்கக் காரணம் என கூறப்படுகிறது. 

தென்னிந்திய படங்களின் வரவேற்புக்கு காரணம்?

ராஜமௌலியின் பாகுபலி படம் ஹிந்தியில் பெரும் வெற்றிபெற்று தென்னிந்திய படங்களுக்கான கதவுகளைத் திறந்ததுவைத்தது.  அதற்கு முன்னதாகவே தமிழ், தெலுங்கு படங்களின் ஹிந்திப் பதிப்பு யூடியூபில் வெளியாகி சர்வசாதாரணமாக 100 கோடி பார்வையாளர்களைப் பெற்றன.

இதன் காரணமாக ஹிந்தி தயாரிப்பாளர்கள் தமிழ், தெலுங்கு படங்களை வாங்கி அதனை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து யூடியூபில் பதிவேற்றி லாபம் பார்த்துவந்தனர். காரணம் தமிழ், தெலுங்கு படங்கள் அதிரடி  சண்டைக் காட்சிகள், குத்துப் பாடல்கள், நகைச்சுவை, சென்டிமென்ட் என அனைத்து தரப்பினரையும் கவரக் கூடிய படங்களாக இருந்தன. இதன் விளைவே தற்போது பிரம்மாண்டமாக எடுக்கப்படும் தென்னிந்திய படங்கள் ஹிந்தியில் வெற்றிபெற்று வருகின்றன. 

மற்றொருபுறம் ஹிந்திப் படங்களும், ஹிந்தி நட்சத்திரங்களும் இந்துக்  கலாசாரத்தை இழிவுபடுத்துவதாகவும் தென்னிந்திய படங்கள் இந்துக் கலாசாரத்தை மதிப்பதாகவும் ஹிந்தி ரசிகர்களிடையே ஒரு நம்பிக்கை  உருவாகியிருக்கிறது.

மிகக் குறைந்த பொருட் செலவில் உருவான தெலுங்கு படமான கார்த்திகேயா 2 ஹிந்தியில் நல்ல வசூலைப் பெற்றது. கார்த்திகேயா 2 படம் இந்து கடவுளான கிருஷ்ணர் குறித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது துல்கர் சல்மான் நடித்த தெலுங்குப் படமான சீதா ராமம் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்துவெளியாகியுள்ளது. 

ஹிந்தியில் ரீமேக்காகும் தென்னிந்திய படங்கள் 

இதன் விளைவு, தற்போது தென்னிந்திய படங்களின் ரீமேக்கில் ஹிந்தி  நடிகர்கள் நடிக்கத் துவங்கியிருக்கிறார்கள். தமிழில் வெற்றிபெற்ற விக்ரம் வேதா படம் தற்போது ஹிருத்திக் ரோஷன், சயீஃப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ளது.

சூர்யாவின் சூரரைப் போற்று ரீமேக், மலையாளத்தில் வெற்றிபெற்ற டிரைவிங் லைசென்ஸ் பட ரீமேக் எனத் தொடர்ச்சியாகத் தென்னிந்திய பட ரீமேக்குகளில் அக்ஷய் குமார் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் தமிழ் ராட்சசன் பட ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்த கட்புட்லி திரையரங்கில் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை ஹிந்தியில் ஜான்வி கபூர் நடிப்பில் குட் லக் ஜெர்ரி என்ற பெயரில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் அஜய் தேவ்கன் நடிப்பில் போலா என்ற பெயரில் உருவாகிவருகிறது. ஏற்கெனவே மலையாள படமான திரிஷ்யம் ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். 

தென்னிந்திய படங்களை ஹிந்தி நடிகர்கள் ரீமேக் செய்வது முன்பிருந்தே இருக்கிறது. உதாரணமாக, தமிழில் சூர்யா நடித்த கஜினி படத்தை ஆமிர் கான் அதே பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்தார். தெலுங்கு படமான போக்கிரி (தமிழில் விஜய்யின் போக்கிரி) சல்மான் கான் வான்டட் என்ற பெயரில் ரீமேக் செய்தார். சிறுத்தை படத்தை ரவுடி ரத்தோர் என்ற பெயரில் அக்ஷய் குமார் ரீமேக் செய்தார். 

இப்பொழுது பிரச்னை என்னவென்றால் ஓடிடியின் தயவால் மேற்சொன்ன  படங்களை ஹிந்தி ரசிகர்கள் பாத்திருப்பார்கள். அதனால் ரீமேக் என்பது ஹிந்தித் திரையுலகுக்கு மீண்டும் எதிர்பார்க்கும் புத்துணர்வை அளிக்குமா என்பதைப்  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரு பேட்டியில் சமீபத்தில் ஹிந்தி படங்களின் தொடர் தோல்விகள் குறித்த கேள்வியொன்றுக்குப் பதிலளித்த நடிகர் அனுபம் கெர், தென்னிந்திய படங்கள் கதைகளைச் சொல்கின்றன, நாம் (ஹிந்தி சினிமா) நட்சத்திரங்களை  விற்கிறோம் என்று குறிப்பிட்டிருப்பதும் நிலைமையைத் தெளிவாக்குகிறது. 

தடுமாறும் தென்னிந்திய படங்கள் 

தென்னிந்தியாவிலும்கூட நிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லைதான்.

தெலுங்கில் சமீபத்தில் புஷ்பா, ஆர்ஆர்ஆர், கன்னடத்தில் கேஜிஎஃப், தமிழில்  விக்ரம் ஆகிய படங்களைத் தவிர பிற படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தெலுங்குப் படமான அன்டே சுந்தரனாக்கி படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், அந்தப் படம் வசூல் ரீதியாக தோல்விப் படமாக அமைந்தது. ஆனால் அந்தப் படம் ஓடிடியில்  வெளியான பிறகு ரசிகர்கள் கொண்டாடினர். இதே நிலைதான் தமிழ்ப்  படமான சாய் பல்லவியின் கார்கிக்கும் நடந்தது. 

தமிழில் பெரும் பொருட்செலவில் உருவான ரஜினிகாந்த்தின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்  போன்ற படங்கள் எல்லாம்கூட எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 

திரையரங்குகளுக்கு வர மறுக்கும் மக்கள்?

மக்கள் அனைத்து அம்சங்களும் நிறைந்த பிரம்மாண்டமான படங்களை மட்டுமே திரையரங்கில் காண ஆர்வம் காட்டுகின்றனர். டிவி, ஓடிடி, சமூக வலைதளங்கள் என மக்களுக்கு பொழுதுபோக்கப் பல விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக கரோனா ஊரடங்குக்கு பிறகு படங்களை ஓடிடியிலேயே பார்த்து பழகிவிட்டனர். திரையரங்குகளில் பார்த்தால் செலவும் அதிகம் என்ற எண்ணம் மக்களிடையே உருவாகியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் சில அதிரடி முடிவுகளை எடுத்தது. அதன்படி இனி ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும், நடிகர்களின் தனிப்பட்ட செலவுகளை ஏற்க மாட்டோம் என சில முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். 

தொலைக்காட்சிகள் அறிமுகமான புதிதில்  திரையரங்குகளுக்கு சென்று மக்கள் படம் பார்க்க மாட்டார்கள் என தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் கவலைப்பட்டனராம். ஆனால் இன்றளவும் ரசிகர்கள் திரையரங்கில் சென்று படம் பார்ப்பது குறையவில்லை.

குறிப்பாக பிரம்மாண்ட படங்கள் மட்டும் திரையரங்குகளில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுவரும் நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து திரையுலகினரிடையே புது நம்பிக்கையளித்திருக்கிறது.

இன்றைய நிலவரமும் ரசிகர்களின் மனநிலையும் திரையுலகம் மீண்டும் மீண்டும் காலத்துக்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது, வெற்றி என்பது அவ்வளவு எளிதல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com