படம் பிளாக்பஸ்டர்: வெந்து தணிந்தது காடு பற்றி ஜெயமோகன்

இன்று படத்தைப் பார்க்கையில் இது பெண்களுக்கான படம் என்றும் படுகிறது.
படம் பிளாக்பஸ்டர்: வெந்து தணிந்தது காடு பற்றி ஜெயமோகன்
Published on
Updated on
2 min read

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதாக அப்படத்தின் கதாசிரியர் ஜெயமோகன் கூறியுள்ளார்.

சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படம் கடந்த வாரம் வெளியானது. இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

இந்நிலையில் இப்படத்தின் கதாசிரியரான ஜெயமோகன், இப்படம் பற்றி தனது இணையத்தளத்தில் எழுதியுள்ளார். அவற்றின் சில பகுதிகள்:

நான் இதுவரை எழுதிய படங்களில் என் எழுத்துக்கு மிகஅணுக்கமாக அமைந்த படம் வெந்து தணிந்தது காடு. ஆகவே அதில் என் ஈடுபாடு சற்று மிகுதி. அதைவிட கௌதம் மேனன் வெல்லவேண்டும் என நான் விரும்பினேன். இனிய மனிதர், மிக அணுக்கமாக நான் உணரும் ஒருவர், முந்தைய படங்களின் சிக்கல்களால் பலவகை நெருக்கடியில் சிக்கி இருப்பவர். ஒரு வெற்றி அவரை மீட்டுவிடும் என நினைத்தேன்.

வெற்றிச்செய்தி காலை எட்டரைக்குப் பல்வேறு திரையரங்குகள், வினியோகஸ்தர்களிடமிருந்து வந்தபோது முதல் எண்ணமே “கௌதம், உங்கள் வெற்றி. உங்கள் விடுதலை” என்றுதான்.

படத்தில் சிம்புவை பார்த்தேன். என் மகனின் வயதுதான். ஆனால் உடலை உருக்கி, உழைத்து, தன்னை நிறுவிக்கொண்டிருக்கும் அந்த அர்ப்பணிப்பு என்னைப் பிரமிக்கச் செய்தது. படம் முழுக்கக் கொண்டுவந்திருக்கும் சீரான உடல்மொழியும், அந்த உடல்மொழி முத்துவின் அகம் மாற மாற அதுவும் மாறிக்கொண்டிருப்பதும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. நீங்கள் படம் பாருங்கள், தொடக்கத்தில் வரும் அந்த முத்துதானா கடைசியில் வரும் அந்த முத்து என. அந்த அர்ப்பணிப்புக்கு ஏற்பு அமைந்தே ஆகவேண்டும் என்ற பதற்றம் வந்தது.

படம் எடுக்கத் தொடங்கும்போது முழுக்கமுழுக்க யதார்த்தமான, மிகையே இல்லாத உலகமாக இருக்கவேண்டும் என நினைத்தோம். நடுவே மீண்டும் கோவிட். ஓராண்டு தாமதம். இந்த இடைவெளியில் நான்கு பெரும்படங்கள் வந்தன. ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப், புஷ்பா, விக்ரம். அவை கதைசொல்லலில் ஒரு பாணியை நிறுவின. மிகமிக வேகமாக மின்னிச்செல்லும் காட்சிகள். எங்கும் எதையும் நிறுவாமல் ஓடிக்கொண்டே இருக்கும் நிகழ்ச்சிகள், மிகப்பயங்கரமான சண்டைக்காட்சிகள்.

அதெல்லாம் இந்தப்படத்தில் இல்லை. அதை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் ஏமாற்றம் அடையலாம். ஆகவே வேண்டுமென்றே இந்தப்படத்தை கொஞ்சம் மெதுவாகச் செல்லும் படம் என்றே சொல்லி நிறுவினோம். உண்மையில் இது வேகமாக செல்லும் திரைக்கதை கொண்ட படம். எந்த இடத்திலும் தொய்வு இருக்காது. ஆனால் விக்ரம் பாணி அல்ல. கண்மண் தெரியாத பரபரப்பு இருக்காது, சீரான ஒற்றை வேகம் இருக்கும். அதற்கும் நான் காணொளிகளில் வந்து சொல்லவேண்டியிருந்தது, ஏனென்றால் நான் அதை எழுதியவன்.

இன்று படத்தைப் பார்க்கையில் இது பெண்களுக்கான படம் என்றும் படுகிறது. சிம்பு மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இனி அதைப்பற்றிப் பேசவேண்டியதில்லை. ஆனால் இரண்டு காட்சிகளில் சித்தி இட்னானி மிகமிக நெருக்கமான பெண்ணாக வந்து நம்மருகே அமர்ந்திருக்கிறார். அத்தனை இயல்பான நடிப்பு.

இப்போது இந்தப் படம் ஒரு ‘பிளாக்பஸ்டர்’ என்று ஆகிவிட்டது. மிகப்பெரிய தொடக்கத்திறப்பு கொண்ட இந்தவகைப் படங்கள் நல்ல எதிர்வினைகளையும் பெற்றுவிட்டால் நேரடியாக நூறுகோடி கிளப் நோக்கித்தான் செல்லும். ஆகவே மானசீகமாக இதிலிருந்து விலகிக் கொள்கிறேன். இனி இது என்னுடையதல்ல. இது சிம்பு – கௌதம் படம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com