ஜெய் பீம் படத்தில் நடிக்க நான் விடுத்த வேண்டுகோள்: நடிகர் ராவ் ரமேஷ் பேட்டி

எனக்கு நடிக்கும் ஆசையோ, நோக்கமோ இல்லை. எனக்குப் புகைப்படக்கலையின் மீது ஆர்வம்...
ஜெய் பீம் படத்தில் நடிக்க நான் விடுத்த வேண்டுகோள்: நடிகர் ராவ் ரமேஷ் பேட்டி
Updated on
3 min read

த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த படம் - ஜெய் பீம். இந்தப் படத்தில் அட்டர்னி ஜெனரல் ஆக நடித்தவர் ராவ் ரமேஷ். தெலுங்கில் கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் அத்தனை முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

ஜெய் பீம் படத்தில் நடித்தது பற்றி ராவ் ரமேஷ் கூறியதாவது:

நான்தான் அந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பேன் என்று என்னைக் கேட்டதில் எனக்கு ஆச்சரியமான சந்தோஷம். அதில் நடிக்க ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்தேன். நான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு நான்தான் டப்பிங் பேசுவேன் என்றேன். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் எந்த மொழியாக இருந்தாலும் அதில் நாமே நடித்து நம் மாடுலேஷனில் பேசினால்தான் அதற்கு ஜீவன் இருக்கும் - அந்தக் கேரக்டர் மேம்படும் என்கிற கருத்து கொண்டவன் நான். அதனால்தான் அப்படிக் கேட்டேன். அதற்கு அவர் ஒப்புக் கொண்டதும் மகிழ்ச்சியுடன் நடித்தேன்.

அது மட்டுமல்லாமல் தமிழ் ஓர் அழகான மொழி. அதனால்தான் தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் எந்த மாநிலத்தவராக இருந்தாலும் தமிழிலேயே பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

நான் வளர்ந்தது முழுக்க சென்னையில் தான். தியாகராய நகர் ராமகிருஷ்ணாவில் தான் படித்தேன். அதனால் பிறமொழிக் கலப்பு இல்லாமல் சுத்தமாகவும் தமிழ் பேச முடியும். 

தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் ஜெய் பீம் படம் வெளியானது. ரசிகர்கள் என்றில்லாமல் பல துறையினரும் குறிப்பாக சட்டத்துறை நிபுணர்களும் என்னிடம், அட்டர்னி ஜெனரல் என்றால் இப்படித்தான் இருப்பார்கள். எப்படி உங்களால் அப்படி நடிக்க முடிந்தது என்று கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. இதற்குக் காரணம் இயக்குநர் தான். எவ்வளவு சிரிக்க வேண்டும், எவ்வளவு கோபம் வேண்டும் என்றெல்லாம் அந்த அளவு மாறாமல் என்னிடம் நடிப்பை வாங்கினார்.

அந்தக் கதாபாத்திரம் சூர்யாவுக்கு எதிரானவரே தவிர வில்லன் இல்லை. உண்மையில் பொறுப்புள்ள அதிகாரி. அவர் பொறுப்பை அவர் நிறைவாக செய்ய வேண்டும். அவரை நம்பித்தான் ஒட்டுமொத்தக் காவல்துறையின் கௌரவம் காக்கப்பட வேண்டும். மட்டுமல்லாமல் அரசுக்கும் களங்கம் வராமல் அந்த வழக்கை வழி நடத்த வேண்டும். அந்தப் பொறுப்பு அவர் பேசுவதில் இருந்தே வெளிப்பட வேண்டும். அவர் நடத்தையில் தெரிய வேண்டும்.

"நான்தான் இன்னைக்கு ஆஜர் ஆகறேன்னு ஜட்ஜ்கிட்ட சொன்னிங்களா..?" என்று கேட்டு நான் நீதிமன்றத்துக்குள் வரும்போது அத்தனை வழக்கறிஞர்களும் எழுந்து வணக்கம் சொல்வதும், நீதிபதியே நலம் விசாரிப்பதுமான காட்சி அந்தப் பாத்திரத்தின் மேன்மையை அப்படியே சொன்னது. படம் பார்த்த அனைவருமே அந்த நடிப்பில் என்னைப் பாராட்டினார்கள். அப்படி ஒரு காட்சியை அமைத்த இயக்குநருக்குதான் அத்தனைப் பாராட்டுகளும் போய்ச் சேர வேண்டும். அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தபோது அந்த உடல் மொழி தானாகவே எனக்கு வந்தது.

"என் அப்பா, ராவ் கோபால் ராவ் தெலுங்கில் நானூறுப் படங்களுக்கு மேல் நடித்த சாதனையாளர். அவர் அப்போதிருந்த எல்லா கதாநாயகர்களுக்கும் வில்லன் ஆனவர். அந்தத் திறமை என்னுள் இயல்பாகவே இருப்பது உண்மைதான்.

ஆனால், அவர் சொல்லியோ அல்லது அவரைப் பார்த்தோ நான் நடிக்க வேண்டும் என முடிவெடுக்கவில்லை. இன்னும் கேட்டால் எனக்கு நடிக்கும் ஆசையோ, நோக்கமோ இல்லை. எனக்குப் புகைப்படக்கலையின் மீது ஆர்வம் இருந்தது. என் வாழ்க்கையைப் புகைப்பட கலைஞராகத்தான் சென்னையில் தொடங்கினேன். பிறகு உதவி ஒளிப்பதிவாளர் ஆகி பல படங்களில் பணியாற்றினேன். அதை முழுமையாகக் கற்று பிறகு இயக்குநர் ஆகும் எண்ணம் இருந்தது. அப்போதுதான் எதிர்பாராமல் என் அப்பா காலமானார்.

எனக்குக் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு ஏற்பட, அம்மாவிடம் (கமலா குமாரி) இயக்குநராகும் ஆசையைச் சொன்னேன். அம்மாவோ, "உன்னை நம்பி யார் படம் கொடுப்பார்கள்..? அதற்கு நிறைய அனுபவம் வேண்டும். நீ மற்றவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்றால் நீ முதலில் நடிப்பைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். அதை முதலில் கற்றுக்கொள்..!" என்றார்.

அம்மா சொன்னதில் இருந்த நியாயம் புரிந்து நான் நடிக்க ஆரம்பித்தேன். என் நடிப்பைப் பார்த்த அம்மா, " இனிமேல் நீ,  என்னிடம் கூட பேச நேரம் இல்லாத அளவுக்கு பிஸியாக இருப்பாய்..!" என்றார். 5000 மேடைகளில் ஹரிகதா கலாட்சேபம் செய்த அம்மாவின் சத்திய வாக்கு அப்படியே பலித்து இன்றைக்கு பிஸியான நடிகனாக இருக்கிறேன்.

ஜெய் பீம் படத்தில் என் நடிப்பு மிளிர்ந்ததற்குக் காரணம் சூர்யா சாரின் இயல்பான தன்மைதான். ஒரு முன்னணி கதாநாயகன் என்கிற பந்தாவோ, பகட்டோ அவரிடம் இல்லை. படப்பிடிப்புத் தளத்தில் எல்லோருடனும் மிக இயல்பாக மரியாதையுடன் பழகினார். அந்தத் தன்மைதான் என்னை மட்டுமல்லாமல் எல்லோரையும் நன்றாக நடிக்க வைத்தது.

அவர் சிறந்த நடிகர். அது மட்டுமல்லாமல் சிறந்த மனிதர். படப்பிடிப்புத் தளத்தில் அவர் பற்றி பிறர் சொல்லக் கேள்விப்பட்டபோது மலைத்துப் போனேன். அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் உயர் கல்வி பெறுகிறார்கள் என்ற போது பிரமிப்பாக இருந்தது.

இப்போது இந்தப்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராக சமூக மேம்பாட்டுச் செய்தி சொன்னவர், இதில் கிடைத்த லாபத்தில் ஒரு கோடி ரூபாயைப் பழங்குடி இன மக்களின் நல்வாழ்வுக்கு வழங்கி இருக்கிறார். இந்த உயர்ந்த உள்ளம் யாருக்கு வரும்! அவர் குடும்பத்தில் அனைவருமே கண்ணியமானவர்கள்.  

நான் நேசிக்கும் தமிழில்... நான் வளர்ந்த தமிழ்நாட்டில் நடிப்பை தொடர ஆசை உள்ளது. ஜெய் பீம் பார்த்துவிட்டு பெரிய இயக்குநர்கள் பேசி இருக்கிறார்கள். அந்தப் படங்கள் முடிவானதும் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com