தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்கும் அஸ்ஸாம் அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை

மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, அடுத்த நாள் டிக்கெட்டைச் சமர்ப்பித்தால் போதும் எனக் கூறியுள்ளார்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்கும் அஸ்ஸாம் அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அஸ்ஸாம் முதல்வர் அறிவித்துள்ளார். 

1990-ன் தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினா் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவா்களை அங்கிருந்து விரட்டியடித்தனா். பண்டிட் சமூகத்தினா் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா்.

இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தி காஷ்மீா் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோா் நடித்துள்ள இந்த திரைப்படம், மாா்ச் 11-ம் தேதி வெளியானது. இயக்கம் - விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. 

சமூகவலைத்தளங்களில் பலரும் தி காஷ்மீா் ஃபைல்ஸ் படத்தைப் பாராட்டி எழுதியதால் நாளுக்கு நாள் அதன் வசூல் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்தியாவில் இந்தப் படம் ரூ. 60 கோடியை வசூலித்து சாதனை படைத்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூலைப் பார்க்கும்போது மிகச்சிறிய படமாக வெளியான தி காஷ்மீா் ஃபைல்ஸ், எப்படியும் ரூ. 200 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தரப் பிரதேசம், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

அஸ்ஸாமில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று ஹிமந்த விஸ்வ சா்மா முதல்வரானாா். இந்நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை குவாஹட்டியில் உள்ள திரையரங்கில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பார்த்தார் ஹிமந்த விஸ்வ சர்மா. படம் பார்த்த பிறகு ட்விட்டரில் அவர் கூறியதாவது: தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு அரை நாள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படுகிறது. தங்களுடைய மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, அடுத்த நாள் டிக்கெட்டைச் சமர்ப்பித்தால் போதும் எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com