2 வாரம் ஓய்வெடுக்க நடிகர் சூர்யா முடிவு

படப்பிடிப்பின்போது காயமடைந்த நடிகர் சூர்யா, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 2 வாரம் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க முடிவுவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

படப்பிடிப்பின்போது காயமடைந்த நடிகர் சூர்யா, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 2 வாரம் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க முடிவுவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் புதன்கிழமை இரவு படமாக்கப்பட்டது. இந்த சண்டைக் காட்சி படம் ரோப் கேமரா மூலம் படமாக்கப்பட்டது. அப்போது ரோப் கேமராவின் ஒரு பகுதி திடீரென அறுந்து நடிகர் சூர்யாவை நோக்கிச் சென்றது. இதைப் பார்த்த சண்டைப் பயிற்சியாளர் மற்றும் சக சண்டை கலைஞர்களும் சப்தம் போட்டு சூர்யாவை பிடித்து இழுத்தனர். 

ஆனாலும் சூர்யாவின் தோள் மீது கேமரா தாக்கியதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த ரோப் கேமரா சுமார் 80 கி.மீ. வேகத்தில் வந்து, அவரது தோள் பட்டையில் தாக்கியதாகவும், அவரது தலையில் பட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் எனவும் நூலிழையில் நடிகர் சூர்யா உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. தற்போது சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த நசரத்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 

ஏற்கெனவே இந்த பிலிம் சிட்டியில் இந்தியன் -2 படபிடிப்பின் போது கிரேன் விழுந்ததில், 2 ஊழியர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். அதேபோல நடிகர் விஜய் நடித்த பிகில் படப்பிடிப்பின் போது, கிரேனில் இருந்து மின் விளக்கு விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். காலா படப்பிடிப்பின் செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மார்க் ஆண்டனி படப்பிடிப்பின் போது, வாகனம் நிற்காமல் வேகமாக மோதியதில் நடிகர் விஷால் தப்பியது என தொடர்ந்து படப்பிடிப்புகள் நடக்கும் போதெல்லாம், இந்த படப்பிடிப்பு தளத்தில் விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. 

இதனையடுத்து, ஈவிபி பிலிம் சிட்டியில் வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீஸாரும் கண்காணித்து தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதனிடையே படப்பிடிப்பில் லேசான காயமடைந்த நடிவர் சூர்யா மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 2 வாரம் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க முடிவுவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, நடிகர் சூர்யா இடம்பெறாத காட்சிகளை தொடர்ந்து படமாக்கிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com