ஆபத்தாகும் வெறுப்புப் பிரசாரம்: ரத்தம் திரைவிமர்சனம் 

நடிகர்கள் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரத்தம் திரைப்படத்தை இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார். 
வெறுப்புப் பிரசாரம் விடுக்கும் எச்சரிக்கை: ரத்தம் திரைவிமர்சனம் 
வெறுப்புப் பிரசாரம் விடுக்கும் எச்சரிக்கை: ரத்தம் திரைவிமர்சனம் 

நடிகர்கள் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரத்தம் திரைப்படத்தை இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார். 

விஜய் ஆண்டனியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2, கொலை திரைப்படங்களுக்குப் பிறகு திரைக்கு வந்திருக்கிறது ரத்தம். 

நாட்டின் முன்னணி குற்றப்புலனாய்வு பத்திரிகையாளரான ரஞ்சித் குமார் எனும் விஜய் ஆண்டனி தனது வாழ்வில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்திற்குப் பிறகு தனது பத்திரிகைத் தொழிலை விட்டு வெளியேறி கொல்கத்தாவில் வசித்து வருகிறார். அதேசமயம் விஜய் ஆண்டனியின் நெருங்கிய நண்பனான சக பத்திரிகையாளர் பத்திரிகை அலுவலகத்தில் வைத்தே ஒரு இளைஞனால் கொலை செய்யப்படுகிறார்.

தனது குருவின் வற்புறுத்தலின்பேரில் சென்னை வரும் ரஞ்சித் குமார் சில கொலை சம்பவங்களை புலனாய்வு செய்ய முயலும்போது அவை அனைத்தும் திட்டமிட்டக் கொலை எனத் தெரியவருகிறது. அந்தக் கொலைகள் ஏன் நடந்தன? யார் நடத்தியது? அதற்கான காரணம் என்ன? பத்திரிகையாளராக அவற்றை விஜய் ஆண்டனி எப்படிக் கண்டுபிடித்தார் என்பதே ரத்தம் திரைப்படத்தின் கதை. 

வழக்கமான தனது நடிப்பால் கதையை நகர்த்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி. தனது மனைவியை இழந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழும் இடங்களில் இன்னும் கூடுதலாக அவர் மெனக்கெட்டிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. குதிரை பராமரிப்பாளர் எனும் இடத்திலிருந்து பத்திரிகையாளர் எனும் மாற்றத்திற்கு ஏற்றவாறு நடிக்க முயற்சித்திருக்கிறார். இதுவரை சிரித்துப் பேசி நாயகனை வலம்வந்த மஹிமா நம்பியார் இந்த முறை புதிய ஒன்றை முயற்சித்திருக்கிறார்.

அவரது நடிப்பும்கூட சில இடங்களைத் தவிர்த்து நன்றாகவே திரையில் கடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக தான் மாட்டிக் கொள்ளும் சூழல் ஏற்படும் இடங்களில் கொலை செய்வதும், தனது எதிரி முன்பாக ஆணவத்துடன் அமர்ந்து சவால் விடுவதுமாக சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். இவர்களைத் தவிர நடிகர்கள் நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி என பலர் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். பெரிதாக அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள இயக்குநர் நினைக்கவில்லை போல. 

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்கிறது. ஆரம்பக் காட்சியே கொலையுடன் தொடங்கும் நிலையில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் இவ்வளவு பாதுகாப்பு குறைபாடுகளா என கேள்விகள் எழலாம். அதையும் கூட தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் அடுத்த சில காட்சிகளிலேயே ஒரு சாமியாரின் உதவியாளர் 10 அடியாட்களுடன் வந்து பத்திரிகை அலுவலகத்தை மிரட்டுகிறார். அவரே மீண்டும் வந்து அலுவலகத்தை அடித்து நொறுக்குகிறார். கொலை நடந்த இடத்திற்கு அதுவும் ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு போகிறவர் வருகிறவர் எல்லாம் வந்து மிரட்டிச் செல்லும்படி காட்சிகள் அமைத்திருப்பது இயக்குநரின் கவனக்குறைவா அல்லது அவரின் எழுத்துப் பற்றாக்குறையா என்பது தெரியவில்லை. 

கொலைகளின் பொதுவான தன்மையை அடையாளப்படுத்தியதுவரை இருந்த ஆர்வம் அதன் காரணத்தைத் தேடும்போது ஏனோ அயர்ச்சியைக் கொடுக்கிறது. ஒரு பத்திரிகை அலுவலகம் எப்படி இயங்கும்? ஒரு தகவல் எப்படி செய்தியாக மாறுகிறது? என்பதைக் குறித்தெல்லாம் இன்னும் கொஞ்சம் இயக்குநர் அறிந்து வைத்திருந்திருக்கலாம். தன்னைத் தேடும் பத்திரிகையாளரைக் குறித்து அறிந்து கொண்ட மஹிமா நம்பியார் ஏன் விஜய் ஆண்டனியை மட்டும் கொலை செய்யாமல் தவிர்க்கிறார்? மஹிமாவை மன்னிக்கவா இத்தனை புலனாய்வை மேற்கொண்டார் விஜய் ஆண்டனி எனக் கேட்கத் தோன்றுகிறது. முன்னுக்குப் பின் முரணான பல காட்சிகள் படத்தின் மீதான ரசிகர்களின் கவனத்தைச் சுருக்குகின்றன. 

மஹிமா நம்பியாரின் ஆக்ரோஷமான இடங்களில் எழுந்த பின்னணி இசை ரசிக்கும்படியாக இருந்தது. அதைக் கடந்து மனதில் பதியும்படி பின்னணி இசை அமைக்கப்படவில்லை. 

தனிப்பட்ட பகைகளை மூடி மறைக்க வெறுப்பைத் தூண்டி அவற்றின்அடிப்படையில் கொலைகளை நடத்துபவர்களைத் தேடும் கதாநாயகன் எனும் கதைக்களம் நன்றான ஒன்று. எனினும் அதற்காக இன்னும் கூடுதலாக திரைக்கதை உருவாக்கத்திலும், எழுத்திலும் கவனம் செலுத்தியிருக்கலாம். 

“என் மதத்துக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்க மாட்டேன், என் சாதிக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்க மாட்டேன், என் இனத்துக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்க மாட்டேன்னு மனசுல வெறியை ஏத்தி வச்சிருக்காங்க” மாதிரியான வசனங்கள் நடைமுறை யதார்த்தத்தை எதிரொலிக்கின்றன. 

தனிநபர் மற்றும் நிறுவனங்களின் லாபத்திற்காக வெறுப்புப் பிரசாரம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை இன்னும் ஆழமாகவும், நம்பகத்தன்மையுடனும் காட்டியிருந்தால் ரத்தம் கவனிக்கத்தக்க படமாக மாறியிருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com