விஷால் கருத்தில் என்ன தவறு?

சிறிய பட்ஜெட் திரைப்படங்களைத் தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் குறித்து விஷால் கூறிய கருத்து வைரலானது.
விஷால் கருத்தில் என்ன தவறு?

மார்க் அண்டனி திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, சமீபத்தில் படக்குழுவினர் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர். நிகழ்வில், படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

அப்போது, நடிகர் விஷால் பேசியபோது, “ரூ.1 கோடியிலிருந்து ரூ.4 கோடி வரை சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் 2 ஆண்டுகளுக்கு சினிமாவிற்குள் வர வேண்டாம். காரணம், அப்படி உருவான 120க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வராமல் இருக்கிறது. பணம் இருந்தால் பத்திரமாக வைத்திருங்கள். நான் சொல்வதை தவறாகக் கூட எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒரு அறிவுரையாகவே இதை சொல்கிறேன்” எனக் கூறியிருந்தார். 

ஆனால், ஒரு செய்தித்தளம் விஷால் கூறியதைத் திரித்து, “சிறிய படங்களை எடுக்க யாரும் திரைத்துறைக்கு வர வேண்டாம் என்று நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார்” என எழுதியுள்ளது. இதனைக் கண்ட சிலர், செய்தியின் உண்மைத் தன்மையை உறுதிசெய்யாமல் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் அச்செய்தியை வேகமாகப் பரவி விஷாலைக் கண்டிக்க துவங்கினர். 

பகிரப்படும் செய்திப்படம்
பகிரப்படும் செய்திப்படம்

குறிப்பாக,  ‘எனக்கு எண்டே கிடையாது’ படத்தின் தயாரிப்பாளர் தன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, “சிறிய படங்களை எடுக்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.” எனக் காட்டமாக பதிலளித்துள்ளார். 

மேலும், இறுகப்பற்று படத்தின் நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “சிறிய முதலீட்டுப் படங்களை நம்பியே பல கலைஞர்களின் வாழ்க்கை இருக்கிறது. வெற்றி வாய்ப்புக் குறைவாக இருந்தாலும் சிறு பட்ஜெட் படங்களே இத்துறையின் முதுகெழும்பு. எதிர்மறையாக பேசாமல் சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பதால் ஏற்படும் சிரமங்களைக் கூறலாம்” என்றார்.

ஒருபுறம் ரசிகர்களும் மறுபுறம் தயாரிப்பாளர்களும் இக்கருத்துக்கு பதிலளித்து வந்தாலும் விஷால் சொன்ன, ‘அந்த 2 ஆண்டுகள்’ குறித்து யாரும் பேசவில்லை. தமிழில் ஆண்டிற்கு 150க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட்  படங்கள் வெளியானாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே வெற்றி பெறுகின்றன. அதற்கு படத்தின் கதை, புதுமை, படத்திற்கு வழங்கப்படும் திரைகளின் எண்ணிக்கை போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. வெறும் உழைப்பிற்கு மட்டும் திரைப்படங்கள் வெற்றியைப் பெறுவதில்லை.

அதேநேரம், சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நம்பியிருக்கும் உதவி இயக்குநர்கள் நிலைமையையும் யோசித்து விஷால் பேசியிருக்கலாம் என்கிற குரலும் ஒலிக்கிறது.

ஆனால், அனைத்தையும் விட விஷால் அறிவுரை சொல்வதாகத்தான் தன் கருத்தைக் கூறியிருக்கிறார். அவர் பேசியதில் சிறிய பட்ஜெட் படங்களை எடுக்க யாரும் முன்வர வேண்டாம் என்கிற அதிகாரக் குரல் இல்லை. அதனால், இது அவருடைய கருத்து என்கிற பக்குவத்திற்குத்தான் விமர்சிப்பவர்கள் வர வேண்டும் என சிலர் ஆதரவும் கொடுத்து வருகின்றனர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com