அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் மக்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் படம் ரூ. 862 கோடி வசூலித்துள்ளது.
இதையும் படிக்க: அருண் விஜய்யின் மிஷன் சேப்டர்-1: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பெண்களுக்கு எதிரான படமென விமர்சித்ததால் இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தினை கிளப்பியது. அர்ஜுன் ரெட்டி படம் முதலே சந்தீப் வங்கா படத்துக்கு இந்தப் பிரச்னைகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சந்தீப் வங்கா, “ஒலிக்கலவையை சரியான நேரத்துக்குள் எதிர்பார்த்த தரத்துடன் செய்ய முடியவில்லை. அதனால் 8-9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. ஓடிடியில் வெளியாகும்போது இந்தக் காட்சிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு வெளியாகும்" எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே படம் 3 மணி நேரம் 21 நிமிடம் இதில் கூடுதலாக 8 நிமிடங்கள் சேர்த்தால் 3 மணி நேரம் 30 நிமிடங்களுடன் வெளியாக இருக்கிறது அனிமல்.
அனிமல் படம் ஜனவரி 26இல் நெட்பிளிக்ஸில் வெளியாகுமென தகவல்கள் தெரிவித்தாலும் இன்னும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.