அர்ஜுனனாக விரும்பும் திரௌபதி... ஜமா - திரை விமர்சனம்!

ஜமா திரைப்படக் காட்சி.
ஜமா திரைப்படக் காட்சி.
Published on
Updated on
3 min read

பாரி இளவழகன் இயக்கத்தில் உருவான ஜமா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலையில் தெருக்கூத்து நடத்தி வருபவர் தாங்கல் தாண்டவம் (சேத்தன்). அவர் வைத்திருக்கும் ஜமாவில் நாயகன் கல்யாணம் (பாரி இளவழகன்) பெண் வேடமிடும் கலைஞராக இருப்பவர். அந்தக் குழுவில் இணைந்ததிலிருந்து அவருக்கு திரௌபதி வேடமே வழங்கப்பட்டு வருகிறது. அதில், எந்த வருத்தமும் இல்லாமல் கல்யாணம் பெண் வேடங்களில் நடிப்பதில் ஆர்வத்துடனே இருக்கிறார். ஆனால், கல்யாணம் என பெயர் வைத்திருந்தாலும் இன்னும் தன் மகனுக்குத் திருமணம் ஆகவில்லை என்கிற வருத்தத்திலிருக்கிறார் அவரது தாய். இப்படி பெண் வேடமிட்டு நடிப்பதால்தான் தன் மகனுக்குத் திருமணம் ஆகவில்லை என நினைப்பவர் அர்ஜுனன் வேடத்தில் நடி என நச்சரிக்கத் துவங்குகிறார்.

இதனால், எப்படியாவது ராஜபாட்டை வேடத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்கிற ஆசையால் தொடர்ந்து ஜமா வாத்தியர் தாண்டவத்திடம் அசிங்கப்படுகிறார் நாயகன் கல்யாணம். இவ்வளவு அவமானங்களையும் தாங்கிக்கொண்டு ஏன் இந்த ஜமாவில் அவர் இருக்கிறார்? அதன்பின் கூர்மையான கதை இருக்கிறது. இந்த ஜமா எப்படி உருவானது.. இதை உருவாக்கியவர் யார்.. என பிளாஷ்பேக் காட்சிகளின் வழியாக நாயகன் ஏன் இந்த ஜமாவைக் கைப்பற்ற நினைக்கிறார் என கதை விரிகிறது. நாயகனுக்குத் திருமணம்தான் பிரச்னையா என்றால் கதை அது அல்ல. மகாபாரதக் கதையில் எப்படி ஒரு சூது நிகழ்ந்ததோ அதேபோல், இந்த ஜமாவிலும் ஒன்று நடக்கிறது. அது என்ன? இறுதியில் நாயகன் தான் ஆசைப்பட்ட ஜமாவில் அர்ஜுனன் வேடத்தை ஏற்று நடித்தாரா? என்பதே மீதிக்கதை.

கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள பாரி இளவழகன் அற்புதமாக நடித்திருக்கிறார். பெண் வேடமிட்டே பழகிய ஒருவரின் உடல் நளினங்களிலும் பெண் குடியேறியிருப்பதை தன் நடிப்பின் மூலம் அபாரமாக வெளிப்படுத்துகிறார். வேட்டியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு பெண்ணைப்போலவே மலை உச்சிக்கு செல்லும் காட்சியிலும் காதலி முத்தம் கொடுக்கும்போது பெண்ணைப்போன்றே தயங்குவதும் சிணுங்குவதுமாக தேர்ந்த நடிகனைப்போல் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.

நடிகர் பாரி இளவழகன்.
நடிகர் பாரி இளவழகன்.

தமிழ் சினிமா இவரைப் போன்ற திறமையாளர்களைக் கைவிடக்கூடாது. விருதுக்குத் தகுதியானவர். இவருக்கு இணையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நடிகர் சேத்தன். ராஜபாட்டை வேஷமிடுவதிலும் குடித்துவிட்டு ஆத்திரமடைவதுமாக நடிப்பில் மிரட்டுகிறார். விடுதலை திரைபடத்துக்குப் பின் அவருக்கு பெயர் சொல்லும் படமாக இது இருக்கும். தன் நடிப்பின் முக்கியமான காலத்தில் இருக்கிறார் என்றே தோன்றுகிறது. இவர்களையெல்லாம் ஏப்பம் விடும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நடிகர் ஸ்ரீ கிருஷ்ண தயாள். பிளாஷ்பேக் காட்சிகளில் வந்தாலும் அசல் கூத்துக் கலைஞனாக அவர் பரிணமிக்கும் காட்சிகள் அபாரம்.

ஜமா திரைப்படக் காட்சி.
ஜமா என் நடிப்பை மேம்படுத்தியிருக்கிறது: அம்மு அபிராமி!

நடிகை அம்மு அபிராமியிடம் பெரிய இயக்குநர்கள் தைரியமாகச் செல்லலாம். அன்பை வெளிப்படுத்துவதிலும் கோபத்தைக் காட்டுவதிலும் அவரது கண்கள்கூட தனித்துவமாக இருக்கிறது. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால், தமிழுக்கு பெரிய நடிகை கிடைப்பார். அதேபோல், நடிகர்கள் வசந்த் மாரிமுத்து, மணிமேகலை உள்ளிட்டோரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை இயல்பாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். உண்மையில் அர்ஜுனன், கர்ணனாக நடிப்பவர்களைவிட பெண் வேடமிட்டு நடிக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புவார்கள் என்பது போன்ற தகவல்கள் என கூத்து கலைஞர்களுடனே வாழ்ந்து இப்படத்தை எடுத்ததுபோல் உள்ளது.

நடிகர் சேத்தன்.
நடிகர் சேத்தன்.

திரை எழுத்தாகவே சில இடங்கள் நன்றாக வந்திருக்கின்றன. மகாபாரதக் கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர்களுக்கு நிஜ வாழ்க்கை எவ்வளவு முரண்களுடன் அமைதிருக்கிறது என்பதையும் ஐந்து கணவர்களைக் கொண்ட திரௌபதியாக வேடமிடும் ஒரு ஆணுக்கு நிஜத்தில் திருமணம் ஆகாதது என சின்னச் சின்ன அழகான இடங்கள் படம் முழுவதும் இருக்கிறது. பீஷ்மர், கிருஷ்ணன், பீமன் போன்றவர்களின் பார்வையிலிருந்தும் வேறோரு மகாபாரதக் கதை உள்ளது என்பதைப்போல் ஜமாவில் திரௌபதியாக வேடம்போடும் ஒரு ஆண் வழியாகக் கதையைக் கடத்தியிருப்பது நல்ல பார்வை.

அதேநேரம், எழுத்தில் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. முக்கியமாக, நாயகனைத் தேடி ஒரு காதல் வந்தும் அதை வேண்டாம் என்பார். காரணமாக, என்னைப்போன்ற பெண் நளினத்தில் இருக்கும் ஒருவனைக் கல்யாணம் செய்தால் அவள் ஊர்க்காரர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாவாள் என வருத்துப்படுவார். ஆனால், படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பெண் பார்க்க நாயகன் மகிழ்ச்சியுடனே செல்கிறார். தன் காதலி அவமானப்படக்கூடாது என வருத்தப்படுபவர் பிற பெண்களைப் பற்றி ஏன் நினைக்கவில்லை?

திரௌபதியாக பாரி இளவழகன்.
திரௌபதியாக பாரி இளவழகன்.

அவ்வளவு எதார்த்தமான ஜமாவையும் கூத்துக்கலையும் காட்டியவர்கள் படத்தில் பஃபூன் கதாபாத்திரத்திற்கு காட்சிகள் இல்லாமல் செய்திருப்பது சின்ன சறுக்கல். பஃபூன் கலைஞர்கள் இல்லாத தெருக்கூத்து அரிது என்பதால், இக்கலையின் உண்மைத்தன்மைக்காக அக்கதாபாத்திரத்தை ஒரு காட்சியிலாவது பயன்படுத்தியிருக்கலாம்.

ஜமா திரைப்படக் காட்சி.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

வன்முறையும் குரூரமும் இல்லாமல் ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறார்கள் எனச் சொல்ல முடியும். எதார்த்தமான நடிப்பும் ஜமா குழுவினர் வேஷமிடும் காட்சிகளில் பயன்படுத்த ஒளி அமைப்பும் மனதை ஈர்க்கின்றன. படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணா.

ஜமா பாடல்.
ஜமா பாடல்.

இளையராஜாவின் பின்னணி இசை காட்சிக் காட்சி தனியாகத் தெரிகிறது. ‘சந்தனக்காற்றே.. செந்தமிழ் ஊற்றே..’ பாடலின் பின்னணியில் நாயகி அம்மு அபிராமி அறிமுகமாகும்போது நமக்கே அவர் மீது காதல் வந்துவிடுகிறது. படத்தில் இடம்பெற்ற, ‘நீ இருக்கும் உசரத்துக்கு..’ பாடலின் வரிகளை எழுதி இசையமைத்திருக்கிறார் ராஜா. நினைவுகளைச் சுண்டும் இதமான பாடல். ஒலி அமைப்பும் பிரமாதம். குறைவான பட்ஜெட்டிலும் தொழில்நுட்ப ரீதியாக முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர்.

ஒரு தெருக்கூத்து எப்படி சிரிப்பிலிருந்து துவங்கி மெல்ல வேகமெடுத்து உணர்ச்சியான இடத்தை நோக்கி நகருமோ அதேபோல் ஜமா நல்ல படம் என்கிற பெருமூச்சுடன் நிறைவாக முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com