இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
மோசமான விமர்சனங்களால் 11.51 நிமிடக் காட்சிகளை நீக்கி புதிய வடிவத்தை சிறிது நாளில் மீண்டும் ரிலீஸ் செய்தனர்.
லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும், 180 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தியன் - 2 திரைப்படம் வரும் ஆக. 9 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியது. ஓடிடியில் வந்தபிறகும் படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தற்போது, இந்தியன் 2 புதிய பிரச்னையில் ஒன்றிலும் சிக்கியுள்ளது. அதாவது, ஹிந்தியில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாக வேண்டுமென்பதுதான் விதிமுறை.
இந்த விதியை இந்தியன் 2 (ஹிந்துஸ்தானி 2) மீறியுள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவிடம் இருந்து புகார் எழுந்துள்ளது.
இந்த விதியை மீறும் தயாரிப்பாளர்களின் படங்கள் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபொலிஸ் ஆகிய பெரிய மல்டிபிளக்ஸ்களில் ரிலீஸ் ஆகாது. இதை ஒப்புக்கொண்ட இந்தியன் 2 (ஹிந்துஸ்தானி 2) படம் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே ஓடிடியில் வெளியாகி விதியை மீறியுள்ளது.
முறைப்படி ஹிந்துஸ்தானி 2 செப்.6ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டும். இதனால் படக்குழுவுக்கு மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.