கஜல் பாடகர் பங்கஜ் உத்தாஸ் காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகரும் கஜல் கலைஞருமான பங்கஜ் உத்தாஸ் காலமானார்
பங்கஜ் உத்தாஸ்
பங்கஜ் உத்தாஸ்

புகழ்பெற்ற கஜல் பாடகரும் பின்னணிப் பாடகருமான பங்கஜ் உத்தாஸ் காலமானார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.

புற்றுநோயால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டிருந்த பங்கஜ் உத்தாஸ் (வயது 72) தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இதனிடையே, தற்போது சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணியளவில் பங்கஜ் உத்தாஸ் உயிர் பிரிந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் பிறந்தவரான பங்கஜ் உத்தாஸ், கஜல் பாடல்களில் கொடிகட்டிப் பறந்தவர். ஹிந்தி திரைப்படங்களுக்கும் பிற மொழிப் படங்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார். நாம், சஜான், மோஹ்ரா உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

உலகம் முழுக்க பல நாடுகளில் கச்சேரி செய்துள்ளார். பங்கஜ் உத்தாஸ் பெயரில் வெளியான தனிப் பாடல்களும் (ஆல்பம்) அதிகம்.

2006-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு இவரைப் பெருமைப்படுத்தியது.

பங்கஜ் உத்தாஸ் மறைவுக்கு திரைப் பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரின் மறைவையொட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ''பங்கஜ் உத்தாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். கஜல் மூலம் நேரடியாக நமது ஆன்மாவுடன் பேசியவர் பங்கஜ் உத்தாஸ். இத்தனை ஆண்டுகளில் அவருடன் உரையாடிய தருணங்களை நினைத்துப்பார்க்கிறேன். அவரின் மறைவு இசை உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும். உலகத்தால் அதனை நிரப்ப முடியாது. அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்'' என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com