சினிமாவில் 15 ஆண்டுகள்! விஷ்ணு விஷால் உருக்கம்!

நடிகர் விஷ்ணு விஷால் சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
இயக்குநர் சுசீந்திரன் உடன் நடிகர் விஷ்ணு விஷால்.
இயக்குநர் சுசீந்திரன் உடன் நடிகர் விஷ்ணு விஷால்.
Published on
Updated on
2 min read

நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009-ல் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதும் துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி ஆகிய படங்களில் நடித்து தொடர் வெற்றியைப் பெற்றார்.

அதன்பின், ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய நாயகன் என்கிற பெயரைப் பெற்றார். நல்ல படங்களைக் கொடுக்கும் நடிகராகவும் இன்று அறியப்படுகிறார். இறுதியாக வெளியாக கட்டாகுஸ்தி வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. விரைவில் லால் சலாம் படம் வெளியாக உள்ளது. 

இந்நிலையில், விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”என் முதல் படமான வெண்ணிலா கபடி குழு வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது.என் திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததில், நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது திரை வாழ்க்கைக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்த, என் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுக்கு, இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன், எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல முயன்றுள்ளேன். எனது படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எந்த வித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த வகையில் எனது திரைப்படங்கள் மக்களிடம் பாஸிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

எனது பதினைந்து வருடப் பயணத்தில் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்யவே முயன்றிருக்கிறேன், இதுவரை நான் நடித்துள்ள 20 படங்களில், பாதிக்கு மேல் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில், என்றென்றும் வாழும் என்பதே எனக்குப் பெருமை.

என் திரைப்பயணத்தின் இந்த 15-வது ஆண்டு எனக்கு இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. லால் சலாம் எனும் அற்புதமான படத்தில், நம் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமை மற்றும் சிறந்த மனிதரான, மதிப்பிற்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது பயணம் சரியான தருணத்திலும் சரியான திசையிலும் உச்சத்தை நோக்கிச் செல்வது மகிழ்ச்சி.!

இந்தப் பயணத்தில் இதுவரை என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு படத்திலும் பணியாற்றிய லைட்மேன்கள் முதல் எனது உதவியாளர்கள் வரை, அனைத்து படக்குழு உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது அன்பும், ஆதரவும் காட்டிய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என் பணிகளை பற்றி, நேர்மையாக விமர்சனங்களைத் தந்து, நான் சரியான திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்க ஊக்கம் தந்த, விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் நான் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில், எனக்கு மிகப்பெரும் ஆதரவாக, எனது குடும்பம் இருந்தது. நல்லது கெட்டது இரண்டிலும் எப்போதும் தோள் கொடுக்க முன்வரும் என் பெற்றோர், மனைவி, சகோதரிகள், சகோதரன் மற்றும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அடுத்து வெளிவர இருக்கும் பல சுவாரஸ்யமான படைப்புகளில் நான் இணைந்திருக்கிறேன் என்பது, எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.
இந்நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - வாழ்க்கை உங்களைச் சோதிக்கும், உங்கள் திறமைக்குப் பல சவால்களைத் தரும், ஆனால் விடாமுயற்சியுடன் தெளிவான நோக்கத்துடன், உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்தி, வலுவாக நின்றால், வெற்றியை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது.!
நன்றிகள்.!!
அன்புடன்,
விஷ்ணு விஷால்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com