
எந்திரன் படத்தில் பாடலைப் பாட மைக்கேல் ஜாக்சன் ஒப்புக்கொண்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான ராயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும், பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ரசிகர்களிடம் உரையாடல் ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “ 2009 அம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும்போது ஏஜெண்ட் ஒருவரின் மூலம் மைக்கேல் ஜாக்சனைச் சந்திக்க முடியுமா? எனக் கேட்டேன். அவர் இதுகுறித்து மின்னஞ்சல் அனுப்பவதாக் கூறினார். ஒருவாரம் வரை எந்தப் பதிலும் வரவில்லை. நானும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பின், ஆஸ்கர் பரிந்துரையில் என் பெயர் வந்ததும் மின்னஞ்சல் வந்தது. அதில், மைக்கேல் ஜாக்சன் என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், நான் சந்திக்க விருப்பமில்லை என்றேன். ஒருவேளை, நான் ஆஸ்கர் விருதை வென்றால் சந்திக்கிறேன் என்றும் கூறினேன். தொடர்ந்து, நான் ஆஸ்கர் வென்றதும் அதற்கு அடுத்தநாள் மைக்கேல் ஜாக்சனை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவர் குழந்தைகளை எனக்கு அறிமுகம் செய்ததுடன் 2 மணிநேரம் வரை சந்திப்பு நீண்டது. பின், இந்தியா வந்தேன்.
அப்போது, எந்திரன் படத்தின் இசைப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இயக்குநர் ஷங்கரிடம் நான் மைக்கேல் ஜாக்சனைச் சந்தித்ததைக் கூறினேன். அவர், நீங்களும் மைக்கேல் ஜாக்சனும் சேர்ந்து பாடலாமே என்றார். நானும் ஆர்வமானேன். உடனே, மைக்கேல் ஜாக்சனுக்கு அழைத்து விசயத்தைச் சொன்னேன். அவரும், நீங்கள் என்ன சொன்னாலும் இருவரும் இணைந்து செய்யலாம் என்றார். இருமுறை நாங்கள் பாடல் குறித்து விவாதித்தோம். ஆனால், அதற்குள் மைக்கேல் ஜாக்சன் இறந்துவிட்டார்.” எனத் தெரிவித்தார்.
ஒருவேளை மைக்கேல் ஜாக்சன் இருந்திருந்தால் எந்திரன் படத்திற்கு சர்வதேச அளவில் கவனம் கிடைத்திருப்பதுடன் தமிழ் சினிமாவிலும் முக்கிய நிகழ்வாக இருந்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.