மலையாள நடிகை பாமா பெண்களுக்கு திருமணம் எதற்கு என்று பதிவிட்டது சர்ச்சையாகியுள்ளது.
இயக்குநர் லோகிததாஸ் இயக்கத்தில் 2007இல் அறிமுகமானவர் நடிகை பாமா. பின்னர் பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் எல்லாம் அவன் செயல், சேவற்கொடி, மதகஜ ராஜா படங்களில் நடித்துள்ளார்.
35 வயதாகும் பாமா கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2020இல் திருமணம் செய்த பாமா 2021இல் கௌரி எனும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர் விவாகரத்து ஆனதாக தகவல் வெளியானது. கணவர் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கினார்.
திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில் இருந்து விலகியுள்ள பாமாவின் நேற்றைய இன்ஸ்டா பதிவு வைரலானது. அந்தப் பதிவில், “ பெண்களாகிய நமக்கு திருமணம் தேவையா? வேண்டாம், யாரும் பணத்தைக் கொடுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டாம். அவர்கள் உங்களை கைவிட்டால் என்ன செய்வது? உங்களது பணத்தை முழுவதும் எடுத்துக்கொண்டு காணாமல்போனால் என்னாவது?
பெண்கள் ஒருபோதும் அப்படியான சூழ்நிலையில் திருமண செய்யக்கூடாது. யார் எப்படி நடந்துக்கொள்வார்களென நம்மால் யூகிக்க முடியாது. அது நம்மை சாவின் விழிம்புக்கு கொண்டு செல்லும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இது விவாகரத்து பதிவு என ரசிகர்கள் குழம்பமாக இருக்கையில், சிலர் பெண்கள் திருமணமே செய்யக்கூடாதா என சமூக வலைதளத்தில் விமர்சனமும் வைத்தார்கள்.
இந்நிலையில் நடிகை பாமா தற்போது விளக்கமளித்துள்ளார். அதில், “நான் நேற்று கூறியது மணக்கொடை (வரதட்சணை) கொடுத்து யாரும் திருமணம் செய்யாதர்கள். அப்படி செய்தால் என்னாகும் என்ற பின்விளைவுகளை மட்டுமே கூறியிருந்தேன். பெண்கள் யாருமே திருமணம் செய்யக்கூடாது எனக் கூறவில்லை. நான் எழுதியதை புரிந்துக்கொள்வீர்களென நம்புகிறேன். நன்றி. இந்நாள் சிறப்பான நாளாக அமையட்டும்” எனக் கூறியுள்ளார்.