ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே பாபு ’டாடா’ படத்தை இயக்கியிருந்தார். கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது டாடா படத்தின் இயக்குநர் கணேஷ் கே.பாபு ஜெயம் ரவியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஜெயம் ரவி ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகுதான் டாடா இயக்குநர் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
’ஜீனி’ படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் இதுதான் ஜெயம்ரவியின் படங்களில் அதிகபட்ச பட்ஜெட் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.