
சசிகுமார் தயாரித்து இயக்கிய 'சுப்ரமணியபுரம்' இன்றளவும் தமிழ் சினிமாவின் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், இந்தப் படம்தான் தனது 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்துக்கு முன்னோடி என்று தெரிவித்திருந்தார்.
'சுப்ரமணியபுரம்' படத்துக்கு பிறகு சசிகுமார் இயக்கிய 'ஈசன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சசிகுமாரும் முழு நேர நடிகராக மாறினார். சசிகுமார் எப்போது மீண்டும் திரைப்படம் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்துவந்தது. அந்த அளவுக்கு ரசிகர்களிடயே சுப்ரமணியபுரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தை சசிகுமார் இயக்குவதாக தகவல் வெளியானது.
பின், எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவலை இணையத்தொடராக இயக்க திட்டமிட்டுள்ளதாக சசிகுமார் கூறினார். அதற்கான, முதற்கட்ட பணிகளையும் துவங்கினார். இத்தொடரை, ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதில்தான் நடிகர்கள் சண்முக பாண்டியன், ராணா டக்குபதி, சத்யராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழில் இணையத் தொடருக்குக் கிடைக்கும் வரவேற்பு குறைவாக இருப்பதாலும் வேறு சில காரணங்களாலும் ‘குற்றப்பரம்பரை’ இணையத் தொடரை கைவிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, குற்றப்பரம்பரை நாவலை யார் திரைப்படமாக எடுப்பது என்கிற போட்டியில் இயக்குநர்கள் பாரதிராஜாவும், பாலாவும் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக்கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன் பாரதிராஜா குற்றப்பரம்பரை படத்திற்கான பூஜையை மேற்கொண்டார். ஆனால், படத்தை இயக்கவில்லை.
தொடர்ந்து, இயக்குநர் பாலாவும் விலகிக்கொள்ள ‘குற்றப்பரம்பரை’ சினிமாவாக உருவாகாமல் இருந்தது. சசிகுமார் இயக்கத்தில் குற்றப்பரம்பரையைக் காணலாம் என எதிர்பார்ப்புகள் எழுந்தன. தற்போது, இந்தக் ‘குற்றப்பரம்பரை’யும் கைவிடப்படுவதாகக் கூறப்படுவது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.