உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்: கமல்ஹாசன்

கமல்ஹாசன் என்றோ, கமல் என்றோ அழைக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்ANI
Published on
Updated on
1 min read

உலக நாயகன் என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தனது 6 வயதில் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், 64 ஆண்டுகளில் 230க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னதாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான தென்னாலி படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு உலக நாயகன் பட்டம் கொடுக்கப்பட்டது.

அதிலிருந்து நடிகர் கமல்ஹாசனை உலக நாயகன் என்றும், ஆண்டவர், நம்மவர் எனப் பல பட்டங்களை வைத்து ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலக நாயகன் என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன்.

உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு. சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன்தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது.

திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை.

கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.

அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.

எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.

இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com