இயக்குநர் படப்பிடிப்பில் அறைந்ததைக் குறித்து நடிகை பத்மப்ரியா கருத்து தெரிவித்துள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழில் முக்கியமான நடிகையாக இருந்தவர் பத்மப்ரியா. காழ்ச்ச என்கிற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழில் மிருகம் படத்தில் நாயகியாக நடித்து பரவலான கவனத்தைப் பெற்றார்.
இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் பேசிய பத்மப்ரியா, “மிருகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உணர்வுப்பூர்வமாக நடிக்கவில்லை என இயக்குநர் என்னை அறைந்தார். இதை நான் நடிகர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். தொடர்ந்து, என்னை நாயகியாக வைத்து படம் எடுப்பதாக உறுதியளித்தவர்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை. திரைத்துறையில் பெண்கள் தங்களின் பிரச்னையைப் பேசினால் அவர்களே பிரச்னைகளாக மாறிவிடுகின்றனர்.
ஆண்களுக்குக் கொடுக்கப்படும் பலமான கதாபாத்திரங்கள் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. இங்கு அழகான, மனமுடைந்த, நடன மங்கையாகவே பெண்களுக்கான கதாபாத்திரங்கள் வழங்கப்படுகின்றன. பாலின பாகுபாடு பற்றியும் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் தொடர்ந்து பேச வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக அது உங்களை மீண்டும் காயப்படுத்தும்” என்றார்.
பத்மப்ரியா மிருகம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் மாநில விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.