பிக்பாஸ் - 8 தொகுப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலம் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக பிரபலங்களின் பெயர்கள் சமூக வலைதளத்தில் பரவின.
நடிகர் சரத்குமார், சிலம்பரசன், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதேபோன்று மூத்த நடிகை ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா ஆகியோரில் ஒருவர் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது அந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், யார் தொகுப்பாளர் என்பதை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க உள்ளதாக விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.