நடிகர் லிவிங்ஸ்டன் மகளான ஜோவிதா புதிய தொடரில் நடிக்கவுள்ளார்.
நடிகர் சூர்யா நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மெளனம் பேசியதே என்ற படத்தில் தலைப்பே, புதிய தொடருக்கும் வைக்கப்பட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள மெளனம் பேசியதே தொடர், பகல் நேரத்தில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தொடர், ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஜகதாத்ரி தொடரின் மறு உருவாக்கம் எனக் கூறப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அருவி மற்றும் பூவே உனக்காக ஆகிய இரு தொடர்களைத் தொடர்ந்து தற்போது மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதா நடிக்கவுள்ளார்.
மெளனம் பேசியதே தொடர்!
நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளான ஜோவிதா லிவிங்ஸ்டன் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பான பூவே உனக்காக தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஒளிபரப்பான அருவி தொடரில் நாயகியாக நடித்து புகழ் பெற்றார்.
கன்னட மொழித் தொடரான 'கஸ்தூரி நிவாசா' என்ற தொடரின் கதைக்கருவை மையமாக வைத்து அருவி தொடர் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
இரு தொடர்களும் முடிந்த நிலையில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த ஜோவிதா, அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடிவந்தார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது அந்தத் தொடருக்கு மெளனம் பேசியதே எனப் பெயரிடப்பட்டுள்ளது.
படிக்க | குக் வித் கோமாளியில்.. மணிமேகலைக்கு பதிலாக களமிறங்கும் புகழ்!
முன்பு விஜய் படத்தின் தலைப்பான பூவே உனக்காக தொடரில் நடித்தது ஜோவிதாவுக்கு பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தற்போது சூர்யா நடித்த படத்தின் பெயரில் புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடரும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றுத்தரும் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.