
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவிடம் உதவி இயக்குநராக சேர 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஓ மை கடவுளே, டிராகன் படங்களின் மூலம் அடுத்தடுத்த வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இதில், பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த டிராகன் திரைப்படம் ரூ. 160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அடுத்ததாக, அஷ்வத் மாரிமுத்து நடிகர் சிம்புவின் 51-வது படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 27-வது படத்தையும் இயக்குகிறார்.
இதில், சிம்புவின் படம் ஆகஸ்ட் மாதம் துவங்கும் எனத் தெரிகிறது. இதற்காக, உதவி இயக்குநர்கள் தேவைப்படுவதாக அறிவிப்பை வெளியிட்ட அஷ்வத், தன்னிடம் சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடந்த மார்ச். 31 ஆம் தேதி பதிவொன்றை வெளியிட்டதுடன் விண்ணப்பிக்க ஒரு வார கால அவகாசமும் அளித்தார்.
இந்த நிலையில், உதவி இயக்குநராக சேர இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்ததால் அஷ்வத் மாரிமுத்து உள்பட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அஷ்வத் வெளியிட்ட பதிவில், “வணக்கம் உதவி இயக்குநர்களே. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளீர்கள். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் என் குழுவினர் சரிபார்க்க வேண்டும் என்பதால் கொஞ்ச காலம் தேவைப்படும். 10 பேரை எடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், இப்போது 20 உதவி இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இன்றைய நிலவரப்படி, தோராயமாக தமிழ் சினிமாவில் 5000-க்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்கள் இருக்கும் சூழலில் மேற்கொண்டு 15,000 பேர் உதவி இயக்குநராக ஆர்வம் காட்டுவது ஆச்சரியத்தைவிட அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஒரே ஆண்டில் ரூ. 1300 கோடி முதலீடு.... அசத்தும் சன் பிக்சர்ஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.