ரௌடிகளை வைத்து உதவி இயக்குநரை மிரட்டிய கோபி நயினார்?

இயக்குநர் கோபி நயினார் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு...
கோபி நயினார்
கோபி நயினார்
Published on
Updated on
1 min read

இயக்குநர் கோபி நயினார் ரௌடிகளை வைத்து மிரட்டுவதாக உதவி இயக்குநர் பேசியது அதிர்வுகளைக் கிளப்பியுள்ளது.

அறம் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். தொடர்ந்து, கருப்பர் நகரம் என்கிற படத்தை இயக்கும் பணிகளை மேற்கொண்டார். ஆனால், அப்படம் கைவிடப்பட, இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் மனுஷி என்கிற படத்தை இயக்கி முடித்தார்.

அரசியல், பெண்ணிய சிந்தனை கொண்ட படமான இது தணிக்கை வாரியத்தில் சமர்பிக்கப்பட்டு, சென்சார் சான்றிதழைப் பெற காத்திருக்கிறது. அதனால், படம் இன்னும் வெளியாகவில்லை.

சினிமாவைத் தாண்டி அரசியல் செயல்பாட்டாளராகவும் உள்ள கோபி நயினார், சில போராட்டங்களில் கலந்துகொண்டு தன் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில், கோபி நயினாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜ்கமல் என்பவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோபி நயினார் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

முக்கியமாக, “நான் கோபி நயினாரிடம் 4 ஆண்டுகளாக உதவி இயக்குநராக பணியாற்றினேன். சம்பளம் என எதுவும் கொடுக்கவில்லை. எனக்கு திருமணம் நடைபெற்றபோதும் அவர் எதுவும் செய்யவில்லை. இதைப் பலரும் கேள்வி கேட்டபோது, ‘உன்னால் என் பெயர் கெடுகிறது’ என்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நான் மேற்கொள்ளும் பணிகளை கோபி நயினார் தடுக்க முயற்சித்துக் கொண்டே இருந்தார். இதற்காக, கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நேரடியாகவே கோபி நயினாரைக் கண்டித்தார்.

ஆனாலும், அவர் கேட்காமல் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார். இந்த தொல்லைகளின் உச்சமாக, என் சொந்த ஊரிலேயே எங்கள் குடும்பத்தினரிடம் தொடர்பு வைப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதற்கான முயற்சியிலும் வெற்றி பெற்றார். இதனால், சொந்த சமூகத்தினரே எங்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டனர். இதன் காரணமாகவே, பழவேற்காட்டிலிருந்து சென்னைக்குக் குடிவந்தோம்.

என்னை மட்டுமல்ல அவருடன் பணியாற்றிய பல உதவி இயக்குநர்களையும் ரௌடிகளை வைத்து மிரட்டியிருக்கிறார். எனக்கும் என் குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் இருப்பதால் நான் கோபி நயினார் மீது வழக்குத் தொடுத்திருக்கிறேன். இதனை, சட்டப்படி எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டு குறித்து கோபி நயினாரிடம் கேட்டபோது, “எனக்கும் ராஜ்கமல் என்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் என்னிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியதாகச் சொல்கிறார். அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இதெல்லாம் என் மீதான அவதூறுகள். அவருக்கு எதிராக நானும் வழக்குத் தொடுத்திருக்கிறேன். நீதிமன்றம் பதில் சொல்லட்டும்” எனக் கூறியிருக்கிறார்.

assistant director, named rajkamal made the accusation against director gopi nainar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com