சினிமாவில் கடந்த 13 ஆண்டுகளாக ஒரு வெற்றிப்படத்தைக்கூட கொடுக்காத நடிகை நம். 1 பணக்காரராக இருக்கிறார்.
இந்தியாவில் சினிமா அறிமுகமான காலத்திலிருந்தே அதிக சம்பளமும் புகழும் கிடைக்கும் துறையாகவே நீடித்து வருகிறது. அப்படி, இன்று உச்சநட்சத்திரமாக இருப்பவர்களிலிருந்து கதாபாத்திர நடிகர்கள் வரை பணம், புகழ் வெளிச்சமும் கொட்டும் மாயமானாக திரைத்துறை உள்ளது.
சினிமாவில் மிகச் சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கியவர்களில் பலர் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கின்றனர். காரணம், அவர்கள் ஏதோ ஒரு மொழியின் சூப்பர் ஸ்டார் நடிகர்களாக இருப்பதுடன் வெற்றியைக் கொடுத்துக் கொண்டே இருப்பவர்கள்.
ஆனால், கடந்த 13 ஆண்டுகளாக ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்காத நடிகையொருவர் இந்தியாவின் நம். 1 பணக்கார நடிகையாக இருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா?
ஹிந்தியில் பிரபல நடிகையாக இருக்கும் ஜுகி சாவ்லாதான் ரூ.4,600 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஹருண் செல்வந்தர்கள் பட்டியல் - 2024 ('Hurun Rich List 2024') இதை உறுதி செய்திருக்கிறது.
எப்படி ஒரு நடிகையால் இவ்வளவு கோடிகளுக்கு அதிபதியாக முடிந்தது? 1984 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஜுகி சாவ்லா அடுத்த சில ஆண்டுகளிலேயே பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார்.
தொடர்ந்து, ஷாருக்கான் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் 2010 ஆம் ஆண்டிற்குப் பின் கதாபாத்திர நடிகையாக மாறிவிட்டார்.
கடந்த 13 ஆண்டுகளாக இவர் நடித்த எந்தப் படமும் ஹிட் ஆகவில்லை. இருந்தும் இவரின் வருமானம் கூடிக்கொண்டேதான் இருக்கிறது. காரணம், ஜுகிக்கு சினிமாவிலிருந்து வரும் சம்பாத்தியம் பெரிய விஷயமே இல்லை.
சினிமாவைத் தாண்டி இவர் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். சில நிறுவங்களில் முதலீடும் செய்துள்ளார். அதில், தன் நெருங்கிய நண்பரான நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணை பங்குதாரராகவும், ரூ.9,150 கோடி மதிப்புள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ.620 கோடி வரை முதலீடு செய்து இவரும் ஒரு உரிமையாளராக இருக்கிறார்.
இதன் மூலமே ஜுகி அதிகப்படியான வருவாய் ஈட்டி வருகிறாராம். மேலும், சௌராஷ்ட்ரா சிமெண்ட் நிறுவனத்தின் 0.07 பங்குகளை வைத்திருப்பதுடன் மும்பையில் இரண்டு பெரிய உணவகங்களையும் நடத்தி வருகிறார். இதுபோக, மிக உயர்ந்த பல சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம்.
சினிமாவில் சம்பாதித்ததை சரியாக முதலீடு செய்து உச்சம் தொட்டவர்களில் ஒருவரான ஜுகி, பல சினிமா பிரபலங்களுக்கு முதலீடு குறித்த அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்!
இதையும் படிக்க: மோகன்லாலால் ஃபஹத் ஃபாசில் ரசிகர்களுக்கு சங்கடம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.