
நடிகை மஹிரா கான் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானை பூர்விமகமாகக் கொண்ட நடிகை மஹிரா கான் (40) பல்வேறு விருதுகளை வென்று பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
பாகிஸ்தானில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் இவர் ஹிந்திப் படத்திலும் நடித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு தனது கடுமையான கண்டனத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ஆதாரமே இல்லாமல் பாகிஸ்தான் மீது தாக்குதல் - நடிகை
மஹிரா கான் கூறியதாவது:
நான் என்ன சொல்ல வேண்டுமென வற்புறுத்தாத நாட்டில் பிறந்ததற்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். எங்கள் நாட்டில் அநீதி ஏற்பட்டால் அது குறித்து பேசுவோம். தீவிரவாதம் எங்கு நடைபெற்றாலும் அதற்கு எதிராக பேசுவேன். எந்தவிதமான ஆதரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.
போர், உண்மைத் தன்மை காணப்படாத வெறுப்புணர்வினால் இந்தியா பல ஆண்டுகளாக இதைத் தொடர்கிறது. இதை நான் எனது சொந்தக் கண்களாலே பார்த்திருக்கிறேன். உங்களது ஊடகம் வெறுப்பை வளர்த்தெடுக்கிறது. இன அழிப்பு, போர்க் குற்றங்கள் என்ற முறையில் உங்களது உயரிய குரல் அமைதியாகவே இருக்கிறது. இது சட்டத்தினால் அல்லாமல் பயத்தினால் நடக்கிறது. இந்தப் பயத்தில் நீங்கள் வென்றதாகக் கூறுகிறீர்கள். என்னைப் பொறுத்தவரை உங்களின் இந்த அமைதி மிகப்பெரிய தோல்வி.
நள்ளிரவில் நகரத்தை தாக்கிவிட்டு அதை வெற்றி என்பதா? உங்களுக்கு அவமானகரமாக இல்லையா? பாகிஸ்தானை நேசிக்கிறேன். நாங்கள் சரியானவற்றையே செய்வோம். இந்தக் கொடூரமான தூண்டுதலுக்குப் பிறகும் நாங்கள் உங்கள் அளவுக்குச் செல்ல மாட்டோம் என நினைக்கிறேன். அமைதி நிலவட்டும் எனக் கூறியிருந்தார்.
இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கூறுவது என்ன?
பிரிவினை வாதத்தை தூண்டும் விதமாகவும் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை விமர்சித்தும் பேசிய நடிகை மஹிரா கான், நடிகர் ஃபவ்த் கானுக்கு கடுமையான கண்டனத்தை அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது எங்களது நாட்டை அவமதிப்பது மட்டுமல்லாமல் தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்தவர்களையும் நாட்டிற்காக உயிர்த் தியாகம்செய்யும் ராணுவ வீரர்களையும் இழிவுப்படுத்துவதாக இருக்கிறது.
இந்தியாவில் பணியாற்ற பாகிஸ்தான் நடிகர்கல், நடிகைகள், கலைஞர்கள், தயாரிப்பாளர்களுக்கு முழுமையான தடைவிதிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்திய கலைஞர்களும் இனிமேல் பாகிஸ்தானிய கலைஞர்களுடன் இணைந்து செயல்படக் கூடாது.
கலை எனும் பெயரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசும் கலைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள்.
இந்தியாவின் பல்வேறு இசை நிறுவனங்கள் பாகிஸ்தான் கலைஞர்களுடன் வேலை செய்கிறார்கள். அதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பாலிவுட், மற்ற திரைத்துறையினரும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். நாடுதான் முதன்மையானதாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.