டீயஸ் ஈரே - திரை விமர்சனம்(2.5 / 5)
நடிகர் பிரணவ் மோகன்லாலின் டீயஸ் ஈரே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஹாரர் திரைப்படங்களுக்கு உலகளவில் பெரிய வரவேற்பு இருக்கிறது. விதவிதமான கதைக்களங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களை உலாவவிட்டோ ஓரே வீட்டில் அடைத்து வைத்தோ இக்கதைகள் சொல்லப்படுகின்றன. இந்திய சினிமாவிலும் அப்படி ஏகப்பட்ட கதைகள் வந்துவிட்டன. ஆனாலும் ஹாரர் ஹாரர்தான்.
அப்படியொரு கதையாகவே டீயஸ் ஈரே உருவாகியுள்ளது. டீயஸ் ஈரே என்றால் லத்தின் மொழியில் மரணித்தவர் மீண்டும் உயிர்த்தெழுவதைக் குறிப்பிடுகிறதாம்.
சரி, கதைக்கு வருவோம்... கதை நாயகனான பிரணவ் மோகன்லால் பணக்கார வீட்டு பையன். குடித்து, கும்மாளமடித்து வாழ்க்கையை ஜாலியாகக் கடத்திக்கொண்டிருப்பவர். அப்படியொரு நாள், நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருக்கும்போது அவர்களுடன் படித்த பெண் தற்கொலை செய்துகொண்ட செய்தி பிரணவுக்குத் தெரிய வருகிறது. அடுத்தநாள், அப்பெண்ணின் வீட்டிற்கு பிரணவ் செல்கிறார். துக்கம் விசாரித்துவிட்டு தன் இல்லத்திற்கு பிரணவ் வந்ததும் இறந்த பெண்ணிற்கும் அவருக்கும் ஒரு தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.
தொடர்ந்து, தன் வீட்டில் அமானுஷ்ய விஷயங்களைப் பார்க்கிறார். ஒருகட்டத்தில் தன்னைத் தவிர இந்த வீட்டிற்குள் பேய் இருக்கிறது என்பதை உணர்கிறார். பேயாக வந்தது யார்? ஏன் பிரணவ்வைத் தேடி வர வேண்டும்? என்கிற அடுத்தடுத்த பரபரப்பான கேள்விகளுக்கு திக்... திக்... மொழியில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இயக்குநர் ராகுல் சதாசிவன் ஹாரர் படங்களுக்கென பெயர் பெற்றவர். இவர் இயக்கிய பூதகாலம், பிரம்மயுகம் ஆகிய படங்களிலேயே தன்னைத் தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞராகவும் நிறுவிக்கொண்டார். டீயஸ் ஈரேவிலும் தன் கதைக்களத்தின் கதாபாத்திரங்களை நன்றாக வடிவமைத்திருக்கிறார். இரண்டு வீடுகள், சில ஆண்கள் என கதை விரிந்து சென்றாலும் ஹாரர் படத்திற்கே உண்டான சில தருணங்கள் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கின்றன. கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் நீர் ஊறிய முகம், வீட்டிற்குள் எழும் கொலுசு சப்தம், கதாபாத்திரங்களின் முகத்தோற்றம் என பேயைக் காட்டுவதற்கு முன்பாகவே திரை எழுத்தின் மூலமே சில அச்சங்களை ஏற்படுத்துகிறார்.
பூதகாலம், பிரம்மயுகத்தில் ஏதோ இருந்தது போல டீயஸ் ஈரேவிலும் ஒரு திருப்பம் இருக்கிறது. அத்திருப்பமே இறுதிவரை ரசிகர்களைக் கட்டி போடவும் வைக்கிறது. அத்திருப்பத்துடன் கூடிய பின்னணி இசையுடன் ஆக்சன் காட்சிகள் அமையும்போது ஹாரர் அனுபவம் கிடைக்கிறது. ஆனால், பேய்க்கதைகளில் அதற்குப் பின்பான உணர்வுப்பூர்வமான இடங்கள் இருக்கும். இப்படத்தில் அது சரியாகக் கடத்தப்படவில்லை. இதில், ஓர் காதல் சொல்லப்பட்டாலும் அது உணர்வுகளைத் தொடவில்லை.
பிரணவ் மோகன்லால் இக்கதாபாத்திரத்திற்கு அட்டகாசமாக இருக்கிறார். பணக்கார பையனாகவும், மிரட்சியில் நடுங்கும் காட்சிகளிலும் உடல்மொழிகளால் கதைக்கு அழுத்தமான ஒன்றை உருவாக்கியுள்ளார். முக்கியமாக, ஆரம்பக் காட்சியில் இன்னொருவரின் காதலிக்கு முத்தம் கொடுக்கும்போதே பிரணவ்வின் குணம் தெரிய ஆரம்பித்துவிடும் அளவிற்கு வசனங்களுடன் கூடிய நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
பேய்யிடம் கடி வாங்கும் காட்சியில் பிரணவ் கத்துவது திக்கென இருக்கிறது. மேலும், இரவில் தன் வீட்டில் தனியாக இருக்கும் பிரணவ்வின் விழியசைவுகள் திகிலையும் பதற்றத்தையும் கொடுக்கின்றன. கிரண் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த அருண் என்பவரின் தோற்றமே நம்மை அச்சப்படுத்துகிறது. சகோதரி இறந்ததிலிருந்து தூக்கம் வரவில்லை என நடுக்கத்திலிருக்கும் கிரண், பிரணவ் வீட்டிற்கு வரும்போது ஒரு சம்பவம் நிகழ்கிறது. அக்காட்சியைப் பார்த்த ரசிகர்களில் பலர் கண்களை மூடியிருப்பார்கள்.
ஷெனத் ஜலாலின் ஒளிப்பதிவும் கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசையும் பலமாக அமைந்துள்ளன. பிரணவ் பேயிடம் அடிவாங்கும் காட்சியின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் ரசிகர்களை மூச்சடைக்க வைக்கின்றன.
பேய்ப்படங்கள் என்றால் நம்மூர்களில் எப்படியும் ஓடிவிடும். அதேநேரம், கதையும் நன்றாக இருந்தால் பெரிய ஹிட்தான். அப்படி, டீயஸ் ஈரேவில் சில எழுத்துக் குறைபாடுகள் இருந்தாலும் பின்னணி இசையும், இருளும் பதற்றதை உருவாக்கி திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கிறது.
இப்படத்தை நல்ல துல்லியமான ஒலியமைப்புகளுடன் பார்த்தால் மட்டுமே அதன் முழுப்பதற்றம் கிடைக்கும் என்பதால் திரையரங்குகளுக்கான படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. சில போதாமைகள் இருந்தால் ராகுல் சதாசிவன் மீண்டும் ஏமாற்றமில்லாத திரைப்படத்தையே கொடுத்திருக்கிறார்.
இதையும் படிக்க: எங்களிடம் அது இல்லையா? மாரி செல்வராஜைக் கேள்விகேட்ட நடிகை!
pranav mohanlal's dies irae movie review
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
