தமிழ் சினிமாவில் லேசா லேசா வில் துடிப்பான இளைஞியாக அறிமுகமாகி இன்று வரை தமிழ் ரசிகர்களின் பிடித்த நடிகையாக த்ரிஷா வலம் வருகிறார்.
அவர் நடித்த படங்களில் பலவும் வெற்றிப் படங்கள்தான். ஒவ்வொரு படங்களிலும் அவரது நடிப்பு மற்றும் உடையமைப்புகள் தனித்துவமாக இருப்பதால், இன்று வரை த்ரிஷாவுக்கு மாற்று என ஒருவரும் உருவாகவில்லை. அவருக்குப் பிறகு வந்தவர்கள்கூட, திரையுலகிலிருந்து விலகிவிட்ட நிலையில், இன்னும் த்ரிஷா தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கிறார்.
தற்போது நடிகையாக புகழ்பெற்றிருக்கும் த்ரிஷா படித்து முடித்து என்னவாக விரும்பியிருக்கிறார் தெரியுமா?
அவர் பத்தாண்டுகளுக்கு முன்பு, ஆங்கில இதழொன்றுக்கு அளித்த நேர்காணலில், தான் ஒரு கிரிமினல் சைகாலஜிஸ்ட் ஆக வேண்டும் என்று விரும்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். நான் எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால், மாடலிங்கில் பிஸியாக இருந்ததால் என்னால் தொடர்ந்து கல்லூரி செல்ல முடியவில்லை. அதனால், நான் என் கல்லூரி நாள்களை மகிழ்ச்சியோடு கொண்டாடவும் முடியாமல் போனது என்று வருத்தத்தையும் அந்த நேர்காணலில் பதிவு செய்திருந்தார்.
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் பிபிஏ படித்த த்ரிஷாவுக்கு கணிதம் மீது அதிக ஆர்வமாம். அது மட்டுமல்ல உளவியல் படிப்புகள் மீதும் கவனம் இருந்துள்ளது. பள்ளியிலிருந்தே புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
கிரிமினல் சைகாலஜிஸ்ட் என்றால், குற்றவியல் உளவியலாளர் என்று அர்த்தம். ஒரு குற்றம் நடக்கும்போது, அந்த குற்றத்துக்கான உந்துதுல் என்னவாக இருந்திருக்கிறது என்பதை விசாரணை செய்து உறுதி செய்ய, காவல்துறை, வழக்குரைஞர்களுக்கு உதவும் வகையில் இந்த படிப்பு அமையும்.
ஒரு குற்றவாளி, இந்தக் குற்றத்தை ஏன் செய்தார்? அவர் மீண்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் குற்றவாளியின் நடத்தையைக் கொண்டு கண்டுபிடிக்க வேண்டும். குற்றவாளியின் எண்ணம், நடத்தை, உணர்வு, குற்றத்தில் அவரது அனுபவம் என அனைத்தையும் கணக்கிட வேண்டும்.
சினிமா, தொலைக்காட்சிகளில் வருவது போல ஒரு சீன், அடுத்த சீனில் எல்லாம் கண்டுபிடித்துவிட முடியாதாம். பல காலம் ஆகுமாம். இதிலேயே, தடயவியல் உளவியலாளர் படிப்பும் உள்ளது. இரண்டும் வேறு வேறானவை.
இந்தியாவைவிட, வெளிநாடுகளில் இந்தக் கல்வி பெரிய பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகிறது. அதுபோல, வெளிநாடுகளில் ஒரு குற்ற வழக்கில், குற்றவாளிக்கு வழங்கப்படும் எந்தவிதமான சலுகைகளும், இந்த குற்றவியல் உளவியலாளர் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இப்படி ஒரு படிப்பைத் தெரிவு செய்து படிக்கத்தான் த்ரிஷா விரும்பியிருக்கிறார். ஆனால், இப்போது திரையில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







