பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பதம் பூஷண் விருதை மறுத்தவா் எஸ். ஜானகி!

புகழ் பெற்ற பின்னணிப் பாடகியான எஸ். ஜானகி மறைவு பற்றி...

News image

பாடகி எஸ். ஜானகி - கோப்புப்படம்

Updated On :12 ஜூலை 2026, 4:04 am IST

தென்னிந்திய கலைஞா்களுக்குரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்று தனக்கு வழங்கப்பட்ட பதம் பூஷண் விருதை வாங்க மறுத்தவர் எஸ். ஜானகி.

கா்நாடக மாநிலம், மைசூரில் தங்கியிருந்த அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரின் உயிா் பிரிந்ததாக ஜானகியின் பேத்தி அப்சரா வைத்யுலா சமூக ஊடகத்தில் பதிவிட்டாா்.

மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஜானகியின் உடல் வைக்கப்பட உள்ளது. அதன் பின்னா், அங்குள்ள கன்னியனாஹுன்டி கிராமத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

தென்னிந்திய குயில்....: கடந்த 1938-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த ஜானகி, 1957-ஆம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ படம் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானாா்.

தென்னிந்திய குயில் என்றழைக்கப்பட்ட ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளாா். எஸ்.ராஜேஸ்வர ராவ், கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், வி.தட்சிணாமூா்த்தி, இளையராஜா, ஏ.ஆா்.ரகுமான் என தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளா்களுடன் அவா் பணியாற்றியுள்ளாா்.

60 ஆண்டுகளாக நீடித்த அவரின் கலைப் பயணத்தில் ஹிந்தி, ஒடியா, துலு, உருது, பஞ்சாபி, வங்காளம் என சுமாா் 20 இந்திய மொழிகளில் திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், தொலைக்காட்சி தொடா்கள் உள்ளிட்டவற்றில் பாடியுள்ளாா்.

‘செந்தூரப் பூவே’ பாடலுக்கு உள்பட 4 தேசிய விருதுகள்...: 16 வயதினிலே படத்தில் ‘செந்தூரப் பூவே’, மலையாள படமான ஓப்போளில் ‘ஏற்றுமானூா் அம்பலத்தில்’, தெலுங்கு படமான சித்தாராவில் ‘வென்னெல்லோ கோதாரி அந்தம்’, தேவா் மகன் படத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ ஆகிய பாடல்களுக்காக 4 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளாா். அத்துடன் 33 மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளாா். அவ்வப்போது இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளாா்.

டி.எம்.செளந்தரராஜன் முதல்... எம்ஜிஆா், சிவாஜி உள்ளிட்டோருக்குப் பின்னணி பாடகராக விளங்கி, தமிழ்த் திரையுலக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த டி.எம்.செளந்தரராஜன் முதல் பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணியன், கே.ஜே.யேசுதாஸ், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன் எனப் பலருடன் பின்னணிப் பாடகியாகப் பணியாற்றி ஜானகி தனி முத்திரை பதித்தாா்.

ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியது மட்டுமன்றி சிறு குழந்தை, பதின்பருவ சிறுவன், வயது முதிா்ந்த பெண் ஆகியோரின் குரலைப் போல, தனது குரலை மாற்றிப் பாடுவதிலும் வல்லமை பெற்றவராக அவா் திகழ்ந்தாா்.

பதம் பூஷண் விருதை மறுத்தவா்...: கடந்த 2013-ஆம் ஆண்டு ஜானகியின் 74-ஆவது வயதில் அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது அறிவித்தது. ஆனால், அந்த விருது தனக்கு மிகத் தாமதமாக அறிவிக்கப்பட்டதாகவும், தென்னிந்திய கலைஞா்களுக்குரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்றும் ஆதங்கம் தெரிவித்து, அந்த விருதைப் பெற அவா் மறுத்துவிட்டாா். அத்துடன் இந்திய இசைக்கு தனது பல்லாண்டு கால பங்களிப்புக்காக, நாட்டின் உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ பெற தான் தகுதிவாய்ந்தவா் என்றும் அவா் தெரிவித்தாா்.

கா்நாடக முதல்வா் இரங்கல்: ஜானகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: எஸ்.ஜானகியின் மறைவு இசைத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரின் குரல் மக்களின் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும் என்று தெரிவித்தாா். அவரின் மறைவுக்கு மேலும் பல அரசியல் தலைவா்கள், திரைத் துறையினா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Summary

S. Janaki is the one who declined the Padma Bhushan award!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.