கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா!‘ஹிட்’ மூலம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைப் பிரதமர் அடிப்பார்! தமிழிசைதவெகவில் இணைந்த அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள்!சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை!
/

ஆக்‌ஷன் கிங்குடன் அதிரடி குயின்ஸ்... பிளாஸ்ட் - திரை விமர்சனம்!

பிளாஸ்ட் திரைப்படத்தின் திரை விமர்சனம்....

News image

Dinamani

Updated On :28 மே 2026, 3:43 pm IST

பிளாஸ்ட் - திரை விமர்சனம்

3/5

நடிகர் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான பிளாஸ்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்பா அர்ஜுன் கராத்தே மாஸ்டராக இருப்பவர். மகளும் கராத்தே கற்றுக்கொண்டவர். அம்மா அபிராமி பார்க்க சாதாரணமாக இருந்தாலும் சாதாரண ஆள் இல்லை. இப்படியொரு குடும்பத்தில் அப்பாவும் மகளும் அடுத்தவர்களுக்குப் பிரச்னை என்றாலும் தட்டிக்கேட்க வேண்டும் என இருப்பவர்கள். அதனாலேயே ஊர் வம்பு வருகின்றன. அபிராமிக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. கல்யாண வயதில் இப்படி அடிதடியில் இருக்கும் ப்ரீத்தி முகுந்தனைக் கண்டிக்கிறார். ம்ஹூம். யார் யாரோ பிரச்னைக்குச் செல்லும் ப்ரீத்தி தனக்கே ஒரு பிரச்சனை என்றால் விடுவாரா? அப்படியொரு தாக்குதலில் அர்ஜுன் குடும்பத்தினர் பிரச்னையில் சிக்குகின்றனர். வில்லனுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒன்று அர்ஜுன் குடும்பத்திடம் சிக்கிக்கொள்ள, அதனை வில்லன்கள் மீட்டார்களா? இல்லை, அர்ஜுன் குடும்பத்தினர்களிடம் மிதி வாங்கினார்களா? என்பதே பிளாஸ்ட் கதை.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால், இனி எனக்கு அறிமுகமே தேவையில்லை என்கிற அளவிற்கு சுவாரஸ்யமான திரைக்கதையில் நல்ல ஆக்சன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். விறுவிறுப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் ஒரு அழுத்தமான செய்தியை விதைத்தும் பிளாஸ்ட் எழுதப்பட்டிருக்கிறது. சில லாஜிக் முரண்கள் இருந்தாலும் இப்படியான கதையில் அது பெரிய பாதிப்பையும் கொடுக்கவில்லை.

வெறுமனே அதிரடி சண்டைக்காட்சிகளை மட்டுமே வைத்து பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இதனை எடுக்காமல் நம் முன் பிறர் பாதிக்கப்பட்டால் அதைத் தட்டிக்கேட்காமல் கடந்து செல்லக் கூடாது என்கிற சகமனித இணக்கத்தையும் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். வசனங்கள், காட்சியமைப்புகள் என பெரிய குறையில்லாத எழுத்தாக இருந்தாலும் சில இடங்களில் கதை நகர்வதும் விலகுவதுமாக இருந்தது சிறிய குறை. இன்னும் நேரத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். கிளைமேக்ஸ் லாஜிக் கேள்விகளை அதிகம் எழுப்பும்படி அமைந்துவிட்டது.

Listicle image

நடிகர் அர்ஜுன் ஆக்சன் கிங்காக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வலம் வருபவர். இறுதியாக, மருதமலை படத்தில் பார்த்த அந்த ஆக்சன் அர்ஜுனை பிளாஸ்ட்டில் பார்க்க முடிந்தது. அந்த அளவிற்குத் தன் பார்வையாலும் ஆக்சன் கை, கால் அசைவுகளையும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் நல்ல ரொமான்ஸ் நாயகிக்கான தோற்றத்தில் இருந்தாலும் ஆக்சன் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். எந்தக் காட்சியிலும் ப்ரீத்தியால் 6 அடி இருக்கும் வில்லன்களை அடிக்க முடியுமா? என எண்ண வைக்காத அளவிற்கு சண்டை அமைப்புகள் இருந்தது சிறப்பு. இடைவேளைக்கு முன் மருந்தகத்தில் சண்டையிடும் காட்சிக்கு விசில் சத்தம் கேட்கின்றன. தமிழ் சினிமாவில் பெரிய நாயகியாக வருவதற்கான தகுதிகளைக் கொண்டவர்.

நடிகை அபிராமி தன் மகள் மீது கவலைகொள்ளும் அம்மாவாக இருக்கும் வரை சாதாரணமாக இருப்பவர் இடைவேளைக் காட்சியில் திரையரங்கை அதிர வைக்கிறார். கிளைமேக்ஸ் காட்சியிலும் அதே வரவேற்பு. உடல் எடையையும் குறைத்து கச்சிதமான தோற்றத்தில் இருப்பதால் ஆக்‌ஷன் கதைகள் நன்றாகவே அபிராமிக்குப் பொருந்தும். மேலும், நடிகர்கள் விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், ஜான் கொக்கென், பவண் உள்ளிட்டோருக்கும் நல்ல கதாபாத்திரம். அவரவருக்கான கதாபாத்திரங்களைச் சரியாகக் கையாண்டுள்ளனர். முக்கியமான, அர்ஜுன் சிதம்பரம் நடந்துவரும்போதே வில்லனுக்கான மிகச்சரியான ஆள் என்கிற பிம்பத்தைக் கொடுக்கிறார். நல்ல தேர்வு.

படத்தின் இயக்குநருக்கு அடுத்தபடியாக படத்தை வடிவமைத்ததில் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார் சண்டைப் பயிற்சியாளர் பீனிக்ஸ் பிரபு. காட்சியனுபவமாக இருக்க, சண்டைக் காட்சிகளைத் திட்டமிட்டு அதனை எடிட்டிங்கில் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கின்றனர். அர்ஜுன் மற்றும் ப்ரீத்தி தங்கள் கால்களில் ’கிக்’ வைக்கும் காட்சிகள், வீட்டிற்குள் நடக்கும் தாக்குதல்கள் என படம் முழுக்க விதவிதமாக சண்டைக் காட்சிகளை எடுத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் எவ்வளவு கராத்தே சார்ந்த படங்கள் வந்திருந்தாலும் பிளாஸ்ட் கொஞ்சம் தனித்துவமாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, பிரதீப் ஈ ராகவ்வின் எடிட்டிங் இப்படத்தின் கதை பரபரப்புக்கு ஏற்ப கச்சிதமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளின் வேகத்தை அதிகரிப்பதும் கட்டுப்படுத்துவதுமாக எடிட்டிங் அமைந்திருப்பது நன்று.

இன்னொரு பலமாக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசைகள் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பெரியளவில் உதவியிருக்கின்றன. முக்கியமாக, மலை கிராமம் ஒன்றைக் விவரிக்கும்போது அப்பகுதி மக்களைக் காட்டும் காட்சியில் ரவி பஸ்ரூர் இசை உணர்வுப்பூர்வமாக அமைந்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, வில்லன்களுக்கும் அர்ஜுன் குடும்பத்தினருக்குமான கதையில் சில குறைகளும் லாஜிக் மீறல்களும் தென்பட்டாலும் சுவாரஸ்யமான ஆக்சன் கமர்சியல் படமாகவே பிளாஸ்ட் உருவாகியிருக்கிறது.

The film Blast, starring actor Arjun and Preethi Mukundan, has been released in theaters today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.