திரிஷ்யம் - 3 திரை விமர்சனம்
நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான திரிஷ்யம் - 3 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவில் ஜார்ஜ் குட்டியையும், ஆகஸ்ட் 2 ஆம் தேதியையும் யாராலும் மறக்க முடியாத அளவிற்கு திரிஷ்யம் திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலின் நடிப்பும், கதையும் திரைக்கதையும் இந்தியளவில் பேசப்பட்டது. தமிழில் நடிகர் கமல் ஹாசன் பாபநாசம் என்கிற பெயரில் ரீமேக் செய்தார். தன் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் இளைஞனை மனைவியும் மகளும் எதிர்பாராத விதமாக கொல்ல, அக்கொலையை மறைக்க குடும்பத் தலைவரான மோகன்லால் எப்படியெல்லாம் திட்டமிட்டு காவல்துறையை ஏமாற்றுகிறார் என்பதை விறுவிறுப்பாக முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் கூறியிருந்தார். காவல்துறையிடம் இதுவரை சிக்காத ஜார்ஜ் குட்டி, இப்பாகத்திலாவது சிக்குவாரா? என்கிற எதிர்பார்ப்புடன் திரிஷ்யம் - 3 வெளியானது.
ஆனால்... ஆனால்.... யாராவது ஜார்ஜ் குட்டியை கைது செய்யுங்கள் என்கிற அளவிற்கு அழுத்தமற்ற கதையமைப்பும், பொறுமையைச் சோதிக்கும் திரைக்கதை எழுத்தும் ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டது. முதல் பாதியில் நாடகத்தன்மை கொண்ட உரையாடலை மட்டும் மையமாக வைத்தும், இரண்டாம் பாதியின் கிளைமேக்ஸில் சிறிய திருப்பத்தை மட்டும் கொடுத்து (அதுவும் ஊகிக்கக்கூடியது) ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.
ஜார்ஜ் குட்டி யார்? செய்த கொலையை மறைக்கத் தன் குற்ற உணர்வுடனும் குடும்பத்துடனும் போராடும் சாதாரண ஆள். சாதாரண ஆள் எனும்போதே அதிகார அமைப்பை ஓரளவுதான் ஏமாற்ற முடியும் என்பதை ரசிகர்களுக்குக் கடத்தி அதன்பின் ஒவ்வொரு முடிச்சுகளையும் சுவாரஸ்யமாக அவிழ்த்தாலே இம்மாதிரியான கதைகளுக்கு போதுமானதுதான். ஆனால், ஜீத்து ஜோசஃப் இரண்டு பாகத்திலேயே அதைச் செய்துவிட்டோமே மூன்றாம் பாகத்தை மேலோட்டமாக ஆரம்பித்தாலே போதும் என நினைத்துவிட்டார் போல. ஜார்ஜ் குட்டியின் குடும்பம் தப்பிக்க வேண்டுமென எந்த உணர்வுகளும் எழவில்லை.

சொல்லப்போனால், தன் குடும்பத்திற்காக எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் செல்லத் துணியும் நாயகனுக்கு சற்றும் குறைவில்லாதது தன் மகனின் கொலைக்கு பழிதீர்க்கும் எதிர் தரப்பினரின் நடவடிக்கைகள். ஜார்ஜ் குட்டிக்கு மட்டும்தான் குடும்பம் இருக்கிறதா? வில்லனாக காட்டப்பட்டும் காவல்துறையினருக்கு இல்லையா? என எண்ண வைத்தது மிகப்பெரிய பலவீனம்.
நடிகர் மோகன்லால் அவரது குடும்பத்தினர் என யாருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான அபாரமான காட்சிகள் இல்லை. வெறுமனே வருகிறார்கள், பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், மாட்டிக்கொள்வோமா என ஜார்ஜிடம் கேட்கிறார்கள். பின் மீண்டும் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள்...
ஜீத்து ஜோசஃப் சஸ்பென்ஸ் கதைகளை நன்றாக எடுக்கக் கூடியவர் என்கிற பெயரைக் கடந்த சில படங்களில் கெடுத்துக்கொண்டார். அதில், முதலிடத்தில் இருப்பது திரிஷ்யம் - 3 ஆகத்தான் இருக்கும்.
உருவாக்க ரீதியாகவும் நிலக்காட்சிகளை இன்னும் கூடுதல் பொழிவுடனும் மர்மத்துடனும் காட்டியிருக்கலாம். 70 சதவீத திரைப்படம் வீட்டிற்குள்ளேயே முடிந்துவிட்டது. படத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய காட்சியென்றால், இடைவேளைதான். யாராக இருக்கும் என்கிற கேள்வியுடன் இரண்டாம் பாகம் நகர்ந்தாலும் கிளைமேக்ஸெல்லாம் மிக செயற்கையாக இருக்கிறது. இதனை முதலிலேயே ஜார்ஜ் செய்திருக்கலாமே என எண்ண வைத்துவிடுகிறது. மிக தைரியமாக நான்காம் பாகத்திற்கான வாய்ப்பு இருப்பதாக நிறைவு செய்கிறார்கள்.
ஆளைவிடுங்க சேட்டா!
The film Drishyam 3 starring actor Mohanlal, has been released in theaters today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெளியாவதற்கு முன்பே ரூ. 23 கோடி வரை வசூலித்த திரிஷ்யம் - 3!

த்ரிஷ்யம் 3 படத்தின் டிரைலர் அப்டேட்!

த்ரிஷ்யம் 3 டீசர்!
த்ரிஷ்யம் - 3 டீசர்!
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |




