இந்த ஆண்டின் இறுதி வாரத்தின் போட்டியில் களமிறங்கியிருக்கும் திரைப்படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் செம்பி.
மைனா, கும்கி, கயல் திரைப்படங்களின் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா, நிலா என்ற சிறுமி, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, ஞானசம்பந்தம் என பலர் நடித்துள்ளனர். பிரபு சாலமன் படங்களுக்கு டி.இமான் வழக்கமாக இசையமைத்து வந்த நிலையில், செம்பி படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
கொடைக்கானல் அருகில் உள்ள மலைக்கிராமத்தில் தனது பேத்தி செம்பியுடன் வசிக்கிறார் நடிகை கோவை சரளா. ஆதரவற்ற அவர்கள் அப்பகுதியில் கிடைக்கும் சிறுசிறு வேலைகளை செய்து தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரின் மகன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படுகிறார் சிறுமி செம்பி.
இதையும் படிக்க | இயக்குநராகும் ராதிகா ஆப்தே!
தொடக்கத்தில் குற்றவாளிகளை அடையாளம் காணத் தெரியாத கோவை சரளா தனது பேத்திக்கு நீதி கிடைக்க காவல்துறையை அணுகுகிறார். இதற்கிடையில் புதிய சிக்கலில் சிக்கிக் கொள்கிறார் கோவை சரளா. அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் கோவை சரளா தனது பேத்திக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி பெற்றுத் தந்தாரா? இல்லையா? என்பதே செம்பியின் கதை.
மைனா, கும்கி, கயல் என தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் தனக்கென ஒரு காட்சி மொழியைக் கொண்டவர் இயக்குநர் பிரபு சாலமன். இந்தப் படத்திலும் அவர் அதனை நன்றாகப் பயன்படுத்தியுள்ளார். கொடைக்கானலின் மலைப்பகுதிகளை இயற்கை அழகுடன் காட்டுவதில் செம்பி ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளது. தனது முந்தைய திரைப்படங்களில் அவருக்கு உதவிய இயற்கை இந்த முறையும் நன்றாக உறுதுணையாக இருந்துள்ளது என சொல்லலாம்.
திரைப்படத்தின் முதல் பாதியில் படத்தை முழுவதுமாக தாங்கியுள்ளார் நடிகை கோவை சரளாவும், செம்பியாக வரும் அவரது பேத்தியும். தேர்ந்த நடிப்பை அந்த சிறுகுழந்தை வழங்கியிருப்பது வியப்பூட்டும் விதமாக இருக்கிறது. பாலியல் வன்புணர்வுக்குள்ளான பின் ஏற்படும் காட்சிகள் பார்வையாளர்களுக்கும் அந்த வலியை சரியாகக் கடத்துகிறது.
இதையும் படிக்க | வசூலை வாரிக் குவித்த தமிழ்த் திரைப்படங்கள்
படத்திற்கான நல்ல ஆறுதல் நகைச்சுவை. சீரியஸான ஒரு கதையில் சற்று பிசகினாலும் சிக்கலாகத் தெரிய வாய்ப்பிருக்கும் நகைச்சுவை காட்சிகளை மெனக்கெட்டு சரியாக அமைத்துள்ளனர் என சொல்லலாம். தம்பி இராமையா தொடங்கி பேருந்தில் பயணிக்கும் சக பயணிகள் வரை நகைச்சுவை காட்சிகளை சிறப்பாகக் கொடுத்திருக்கின்றனர். பின்னணி இசை ரசிக்கும்படியாக இருக்கிறது. முதல் பாதியில் வரும் இயற்கை சார்ந்த காட்சிகளுக்கு பின்னணி இசை பக்கபலமாக இருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.
இவை தவிர மற்ற அவ்வப்போது அரசியல்வாதிகளாக வரும் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் சரியான தேர்வு. அஸ்வின் குமார் வழக்கறிஞராக நடித்துள்ளார். முதல்பாதி கோவை சரளாவிற்கு என்றால் இரண்டாம் பாதி அஸ்வினுக்கு. தொடர்ந்து தன்னை மெருகேற்றி வருகிறார் அஸ்வின். பேனர் விழுந்து இளம்பெண் மரணித்த சம்பவம் முதல் நீட் தேர்வு வரை ஆங்காங்கே பல அரசியல் வசனங்கள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. பொய் செய்திகள் எப்படி உருவாகிறது என்பது முதல் சமூகத்தின் மீதான அக்கறை ஏன் வேண்டும் என தொடக்கத்திலேயே ஏற்றுக் கொள்ளும்படியான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
பிரபு சாலமனும் காவல்துறையின் குறைகளை எந்தளவு சுட்டிக்காட்ட முடியுமோ அதனை சேர்த்தே திரைக்கதையை வடிவமைத்துள்ளார். முதல்பாதியில் காவல்துறை அதிகாரியாக வரும் நடிகர் கோவை சரளாவிடம் பேசும் வசனங்கள் சாதாரண பொதுமக்களை நோக்கி வைக்கப்படும் அதிகாரத்தின் ஏளனங்களாக அவ்வளவு யதார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நயன்தாராவின் ‘கனெக்ட்’ எப்படி இருக்கிறது? திரைவிமர்சனம்
வலிமையான கதைக்கு இன்னும் வேகமான திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம். இரண்டாம் பாதி முழுவதும் பேருந்திலேயே கதை நகர்கிறது. அதில் நடக்கும் உரையாடல்களும், நடவடிக்கைகளும் இயல்பு வாழ்க்கையில் யாருடைய வாழ்விலும் நடைபெறாதது. திரைக்காக அப்படியொரு காட்சிகள் வைக்கப்பட்டாலும் அதனை இன்னும் அழுத்தமாக படமாக்கியிருக்கலாம் எனத் தோன்றியது.
செம்பிக்கு உதவ உடனடியாக நீதிமன்றத்தில் முறையிடுவது தொடங்கி அதற்காக ஆதாரங்களைத் திரட்ட சைபர் கிரைம் வசதி வரை பேருந்துக்குள்ளேயே ஏற்பாடு செய்யும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளதெல்லாம் பார்வையாளர்களை நம்பவைக்கும் அளவு உருவாக்கப்பட்டவில்லை. போக்சோ சட்டம் குறித்து பல கோணங்களை பேச முயற்சித்துள்ளதை இன்னும் தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம்.
இதையும் படிக்க | பணம் பத்தும் செய்யும்: உடன்பால் திரைவிமர்சனம்
இவை அனைத்தும் திரைமொழிக்கான குறைகளேயன்றி திரைப்படத்தின் நோக்கத்தின் மீதான குறைகள் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் ஆதரவாக நிற்க வேண்டிய சமூகம் அமைதி காப்பது எந்தளவு ஆபத்தானது என பேசும் செம்பி அந்த ஆதரவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வழிசெய்யும் என்பதையும் சுட்டிக்காட்ட முயற்சித்துள்ளது.
லாஜிக் குறைகளை அடைக்கும் வகையில் இன்னும் திரைக்கதையில் வேலை செய்திருந்தால் செம்பி இன்னும் சிறப்பான ஒன்றாக இருந்திருக்கும். அன்பை பேச முயற்சித்திருக்கிறது செம்பி. இதன் குறைகளை பெரிதாக பொருட்படுத்தத் தேவையில்லை. இதுதவிர இதில் சர்ச்சையாக்க என எதுவும் இல்லை.