ஹாலிவுட்டுக்கே சவால் விடும் கோலிவுட் ‘ஹல்க்’: லத்தி திரைவிமர்சனம்

மிக மோசமான படமாக உருவாகாமல் காட்சிகளை ரசிக்கும்படியாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்து தப்பித்துள்ளது லத்தி.
ஹாலிவுட்டுக்கே சவால் விடும் கோலிவுட் ‘ஹல்க்’: லத்தி திரைவிமர்சனம்

‘வீரமே வாகை சூடும்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லத்தி. இந்தப் படத்தை இயக்குநர் விநோத் குமார் இயக்கியுள்ளார். நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

நடிகர்கள் சுனைனா, தலைவாசல் விஜய், ரமணா, பிரபு, முனீஸ்காந்த், மிஷா கோஷல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் டிரைலர் வெளியானபோதே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. வழக்கமாக ஐபிஎஸ் அதிகாரியாக வரும் ஹீரோக்களுக்கு மத்தியில் சாதாரண காவலராக வரும் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவின் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதே லத்தி. 

காவல்நிலையத்தில் லத்தி அடி கொடுத்ததற்காக மனித உரிமை ஆணையத்தால் தண்டிக்கப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்படுகிறார் காவலர் முருகானந்தம் (நடிகர் விஷால்). அதனைத் தொடர்ந்து நடிகர் தலைவாசல் விஜய்யின் சிபாரிசில் அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்கிறார் காவல்துறை உயரதிகாரியாக வரும் நடிகர் பிரபு.

இதற்கு மத்தியில் நடிகர் பிரபுவின் மகளுக்கு வில்லனின் மூலம் துன்புறுத்தல் வருகிறது. இதனால் கோபமடையும் நடிகர் பிரபு வில்லனைக் கடத்தி வருகிறார். அவருக்கு உதவுவதற்காக வில்லனை லத்தி அடிக்கு உட்படுத்துகிறார் நடிகர் விஷால். இதனால் கோபமடையும் வில்லன் ரமணா தன்னை தாக்கிய காவலர் விஷாலைக் கண்டுபிடித்தாரா? அவரிடமிருந்து விஷால் எப்படி தப்பித்தார்? என்பதே லத்தி கதை. 

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது லத்தி. விஷாலுக்கு ஜோடியாக வரும் சுனைனா திரையை வசீகரிக்கிறார். நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படத்தில் தோன்றும் அவரின் காட்சிகள் அழகாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல் துணைக் கதாபாத்திரங்களாக வரும் நடிகர்கள் முனீஸ்காந்த், பிரபு, தலைவாசல் விஜய், மிஷா கோஷல் உள்ளிட்டவர்கள் மிகக்குறைந்த நேரமே திரையில் வருகின்றனர். எனினும் அதுவே போதுமானதாய் இருக்கிறது. வில்லனாக நடித்துள்ள நடிகர் ரமணா நன்றாகவே நடித்திருக்கிறார். அவரின் ஆரம்பக் காட்சிகள் வில்லனுக்குண்டான வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.

திரைக்கதை உருவாக்கத்தில் படம் முதல் பாதியில் வெற்றி பெற்றிருந்தாலும், இரண்டாம் பாதியில் ஓரளவே கைகொடுத்துள்ளது. வழக்கமான வகையில் திரைப்படம் தொடங்கினாலும் இடைவேளையில் சூடுபிடிக்கத் தொடங்குகிறது. 

கமர்சியல் படத்தில் தவறாமல் இடம்பெறும் காட்சிகள் இந்தப் படத்திலும் உள்ளன. இருந்தாலும் லாஜிக் என்ற ஒன்றை முழுவதுமாக தூக்கி ஓரமாக வைத்துவிட்டு எப்படி படமெடுக்க முடிந்தது என்பது மட்டும் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. அமைச்சரை மிரட்டும் வில்லன், காவலர் விஷாலை பழிவாங்க அவர் சீருடையைக் கழற்றும்வரையில் காத்திருப்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. பஞ்ச் வசனங்களால் நிறைந்தது தமிழ் சினிமா. இந்தப்  படத்தில் நாயகனுக்கும் சேர்த்து வில்லன்கள் பஞ்ச் வசனங்களைப் பேசுகின்றனர். 

இரண்டாம் பாதி முழுவதும் சண்டைக் காட்சிகள். நம்பும்படியாக சண்டைக்காட்சிகளை எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எப்போதுதான் இந்த சண்டையெல்லாம் முடியும் எனக் கேட்கத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் செல்ல இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார். ஆம்... வழக்கமாக தமிழ் சினிமாவில் நாயகன் ஒரு 50 பேர் வரை அடித்து காலி செய்வார். ஆனால் இந்தப் படத்திலோ நாயகன் விஷால் ஒரு 500 பேரிலிருந்து 1000 பேர் வரை கொலை செய்கிறார். 

இரண்டாம் பாதி முழுக்க ஓடிக் கொண்டே இருக்கிறார் விஷால். கண்ணில் அடி வாங்கிறார், கால்களில் இரும்பு கம்பியால் அடி வாங்கிறார், இரும்பு ஆணிகள் கால்களை பதம் பார்க்கின்றன. போதாததற்கு கத்தி குத்தும் வேறு  வாங்கிறார். இத்தனையையும் வாங்கி விட்டு வில்லனையும் கொன்றுவிட்டு இறுதியாக ஓரமாக நிறுத்தி வைத்திருக்கும் பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு செல்கிறார். ஹாலிவுட்டில் இருக்கும் ‘ஹல்க்’ கூட இவ்வளவு அடிவாங்கினால் இறந்து போயிருப்பார். ஆனால் புரட்சி தளபதி வீரநடை போடுகிறார். இதெல்லாம் என்ன சார் எனக் கேட்கத் தோன்றுகிறது. 

விஷாலை பழிவாங்க வில்லன்கள் சேர்ந்துள்ளதை காவல்துறை அதிகாரியான முனீஸ்காந்த் மற்றும் சக காவலர்கள் அறிந்து கொள்வதாக காட்சிகள் வருகிறது. அறிந்து கொண்டவர்கள் எதற்காக அறிந்துகொண்டார்கள்? அவருக்கு உதவ ஏன் முன்வரவில்லை?. ஒன்றுமே புரியவில்லை.

படம் முடியும் போது விஷால் அவரது மகனிடம், “இங்க நடந்ததெல்லாம் அம்மாகிட்ட சொல்லாதே” என்கிறார். இத்தனை அடியையும் வாங்கிவிட்டு வீட்டுக்கு போய் தடுக்கி விழுந்துவிட்டேன் என சொல்லப் போகிறார் போல. 

படத்திற்கு எப்படி ஆக்‌ஷன் காட்சிகள் உறுதுணையாக உள்ளதோ அதனை சலிக்காமல் இருக்க பயன்பட்டுள்ளது பின்னணி இசை. நடிகர் விஷால் நடிப்பை பாராட்டியாக வேண்டும். அவரை மட்டும் சுற்றி வரும் கதைக்கு ஏற்ற நேர்மையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இறுதிக் காட்சிகள் யூகிக்கக் கூடியதாக இருந்தாலும் தனது நடிப்பால் கட்டிப்போடுவதில் வென்றுள்ளார். குறிப்பாக தனது மகனைத் தேடும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

மிக மோசமான படமாக உருவாகாமல் காட்சிகளை ரசிக்கும்படியாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்து தப்பித்துள்ளது லத்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com