
சும்மா இருந்த பேயை சொறிந்துவிடுதல், அந்தப் பேய் இல்லாத பொல்லாத வேலையெல்லாம் செய்தல், மர்மமான மரணங்கள், ஹீரோ அந்தப் பேயைத் தடுக்க முயலுதல், இறுதியில் தெய்வ சக்தி, தீய சக்தியைக் கொல்லுதல்! எனும் அதே அரண்மனை கதைதான். கடைசியில் 4 என நம்பரை மட்டும் மாற்றியுள்ளனர்!
சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, விடிவி கணேஷ், கோவை சரளா உள்ளிட்டோர் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். சுந்தர் சி எப்போதும் கமர்ஷியலான, காமெடிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களைக் கொடுத்துவருபவர். அதனால் தனக்கு என்ன வருமோ அதை நன்றாகக் கொடுக்க முயன்று அதில் பாஸ் மார்க்கும் வாங்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். மூன்று அரண்மனைகளிலும் நடந்த அதே விஷயம்தான் நான்காவது அரண்மனையில் நடக்கிறது என்றாலும், படம் மண்டை காயுமளவில் இல்லை. ஆரம்பத்திலிருந்து சிறிய விருவிருப்புடன்தான் செல்கிறது. லாஜிக் எதுவும் எதிர்பார்க்காமல் ஒரு பொழுதுபோக்கான படமாக இதைப் பார்க்கலாம்.
சுந்தர் சி-யின் தங்கை தமன்னா குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டு ஊரை விட்டு சென்றுவிடுகிறார். 2 குழந்தைகள் பெற்று சந்தோசமாக இருந்த அவர்களில் குடும்பத்திற்குள் ஒருநாள் திடீரென பல உருவங்கள் எடுக்கும் தீய சக்தி ஒன்று, தமன்னாவின் கணவன் உருவத்தில் வந்து அந்த குடும்பத்தை கொன்றுவிடுகிறது. குழந்தைகள் மட்டுமே எஞ்சியிருக்க தன் தங்கையும் அவளது கணவனும் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை சுந்தர் சி கண்டுபிடிக்க முயல்கிறார்.
இந்த படத்தில் வழக்கம்போல் யாரும் யாரையும் பழிவாங்க பேய் அவதாரம் எடுக்காமல் இருப்பது ஒரு புதுமை எனலாம். ஒரு சாதாரண பேய், அதிக சக்திகள் பெற்று “சூப்பர் பேயாக” மாற ஆசைப்படுகிறது. அதனால் பல தீய வேலைகளை செய்கிறது. அதில் மாட்டிக்கொண்ட சுந்தர் சி-யின் குடும்பம் எப்படி தப்பிக்கிறது என்பது மீதிக்கதை.
படத்தில் தேவைக்கு அதிகமான நடிப்புகள் பல இடங்களில் வெளிப்படுகின்றன. கோவை சரளாவின் வழக்கமான பேய்க்கு பயப்படும் தருணங்களும் நகைச்சுவையான முக பாவனைகளும் சிரிக்க வைக்க அதிகமாக முயற்சி செய்து தோற்கின்றன. டில்லி கணேஷ் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் சிரிக்க வைக்கிறார். யோகி பாபு, விடிவி கணேஷ் காம்போ பல இடங்களில் ‘சுமால்’ சிரிப்பையும், சில இடங்களில் ‘கேப்பிட்டல்’ சிரிப்பையும் அளிப்பது படத்திற்கு பலம் எனலாம். மொட்டை ராஜேந்திரன், விச்சு விஸ்வநாதன் ஆகியோரை தேவையின்றி கதையில் பொருத்த மெனக்கெட்டிருப்பது சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவையாக எஞ்சுகிறது.
பேயைப் பார்த்த பிறகும் வீட்டிற்குள் சகஜமாக சுற்றுவது, அதிகமாகப் பயப்படும் குட்டிப்பையனை தனியாக தூங்கவிடுவது, தேவையேயில்லாமல் காட்டிற்குள் ஓடுவது, போன்ற இடங்களில் ‘லாஜிக்’கை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. எனினும் இது ‘அரண்மனை’ என்பதை மனதில் வைத்துக்கொண்டால் அவையெல்லாம் பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை.
படத்தில் தமன்னாவின் கணவனாக வரும் சந்தோஷ் பிரதாப்பிற்கு முக்கிய கதாப்பாத்திரம் இல்லையென்றாலும், அவரைப் பார்த்து பயம் வரவில்லை என்றாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார். சாமியாராக வரும் ‘கருடா’ ராம் படத்திற்கு நல்ல தேர்வாக தெரிகிறார். ‘தாய்பாசம் தமன்னா', இயக்குனர் எதிர்பார்க்கும் நடிப்பைத் தந்து கவர்ந்திருக்கிறார். இளம் ரசிகர்கள் ‘கிரின்ஞ்’ எனச் சொல்லிவிடும் காட்சிகள் இதில் இடம்பெற்றிருந்தாலும் அந்த இடங்களில்கூட தமன்னா அவர்களை அமைதியாக்கிவிடுகிறார்.
இசை படத்தோடு பொருந்தியிருந்தாலும், ஹிப்ஹாப் ஆதியைப் படத்தில் காணவில்லை என்றே சொல்லலாம். பேய் படமாக இருந்தாலும், காமெடி படமாக இருந்தாலும் அதில் ‘ஆதி’ணா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹிப்ஹாப் ஆதியின் ஒரு டச் இருக்கும். இந்தப் படத்தில் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. படத்தில் மனதில் நிற்கும் இசைகளும் குறைவு, கடைசியாக வரும் அச்சச்சோ பாடலும் யாருக்கும் பேவரட்டாக மாறாதது சிறிய ஏமாற்றம்.
அரண்மனை வரிசையில் இந்தப் படத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுவது விஷுவல் கிராபிக்ஸ்தான். படத்திற்கு அமைக்கப்பட்ட செட் எல்லாமே, ‘செட்’டாக மட்டுமே தெரிவது ஒரு சிறிய குறை. எனினும் பாம்பு, குரங்கு, வில்லனின் கிளைமேக்ஸ் காட்சிகளில் கிராபிக்ஸில் முன்னேற்றம் கண்டிருப்பது ஆறுதலளிக்கிறது.
மொத்தத்தில் இந்தப் படம் அரண்மனைக்கு அடுத்த பாகம் வந்தால் அதைப் பார்த்து பயப்படாத வகையில் உள்ளது எனலாம். சூப்பர் கமர்ஷியலாக, ஜாலியாக, ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என்ற டாகோடு (Tag) வெற்றி பெற்றுவிடும் படமாக அரண்மனை 4 அனைவரையும் திரைக்கு இழுக்க முயல்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.