
அமைதியாக அரசியல் பேசும் பாரிஸ் கஃபே! திரைவிமர்சனம்
பாரிஸ் கஃபே திரைப்படத்தின் திரைவிமர்சனம்...

பாரிஸ் கஃபே - படத்தின் போஸ்டர்
அமைதியாக அரசியல் பேசும் பாரிஸ் கஃபே திரைவிமர்சனம்
ஒரு நேர்மையான மருத்துவர் சமூகப் பிரச்சனைக்காக அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டால் என்ன செய்வார் என்பதை பேசியிருக்கிறது பாரிஸ் கஃபே திரைப்படம்.
இயக்குநர் சரஜ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், அனு மோல், அர்ச்சனா, விஜய் விஸ்வா என பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை தண்டர் மீடியா மற்றும் எல் வி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் நேர்மையான மருத்துவராக நடித்திருக்கிறார் குரு சோமசுந்தரம். அவருடைய மனைவியாக அனு மோலும், மகளாக அர்ச்சனாவும், அவரது காதலனாக விஜய் விஷ்வாவும் நடித்துள்ளனர். தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்த செய்தியை தன்னுடைய பெற்றோர்களான குரு சோமசுந்தரம் மற்றும் அனு மோலிடம் தெரிவிக்க ஆசைப்பட்டு அழைக்கிறார் அர்ச்சனா. அவ்வாறு அழைக்கும் போது தன்னுடைய பெற்றோர் இருவரும் மனக்கசப்பு காரணமாக தனித்தனியே இருப்பதை அறிகிறார். இதனால் வருத்தப்பட்டு தன்னுடைய பெற்றோரை சேர்த்து வைப்பதற்காக சென்னை வருகிறார் அர்ச்சனா. குரு சோமசுந்தரமும் அனு மோலும் எதற்காக பிரிந்து வாழ்கின்றனர்? அதன் பின்னணி காரணம் என்ன? அவர்களை சேர்த்து வைக்கும் அர்ச்சனாவின் முயற்சி கைகூடியதா? இல்லையா? என்பதே பாரிஸ் கஃபே திரைப்படத்தின் கதை.
சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிற இந்த திரைப்படம் ஆணவப் படுகொலை தொடர்பான சமூகப் பிரச்னையையும் பேச முயற்சித்து இருக்கிறது. நேர்மையான மருத்துவராக நடித்துள்ள குரு சோமசுந்தரம் தனக்கே உரிய ஜனரஞ்சகமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வெப் சீரிஸில் நாம் ரசித்து கொண்டு இருந்த அனு மோல் தற்போது இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக செய்திருக்கிறார். எந்த சிக்கல் வந்தாலும் எதிர்கொள்ளத் துணியும் அவரது நடவடிக்கை காட்சிகளில் சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. குடும்பத்திற்காக பிரச்னையிலிருந்து ஒதுங்குவதும், அதே குடும்பத்திற்காக மீண்டும் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதுமாக குரு சோமசுந்தரம் சிறப்பாக நடித்திருக்கிறார். இவர்களுடன் அர்ச்சனா, விஜய் விஷ்வா ஆகியோருடைய கதாபாத்திரங்களும் ஏமாற்றவில்லை. இவர்கள் மட்டுமல்லாது சாய் விக்கி, நயன் சாய், பிபின் என பலரும் நடித்துள்ளனர்.
திரைக்கதையை பொருத்தவரை முதல் பாதியில் சுவாரஸ்யம் கொண்டுள்ள பாரிஸ் கஃபே குரு சோமசுந்தரம் எதிர்கொள்ளும் பிரச்னையையும் அதற்குரிய காரணத்தையும் கடத்துவதில் வென்றிருக்கிறது. அரசியல்வாதியை எதிர்க்கும் இடங்களிலும் அதிலிருந்து தன்னுடைய குடும்பத்தை மீட்கும் இடங்களிலும் எழுத்தில் கூடுதல் கவனம் வெளிப்பட்டு இருக்கிறது. அதே சமயம் இரண்டாம் பாதியில் சற்று தொய்வான காட்சி அமைப்புகள் ஒருவித சலிப்பை ஏற்படுத்துகின்றன. விறுவிறுப்பும் சுவாரசியமும் இன்றி நகரும் இரண்டாம் பாதி ஒரு வித அயற்சியைக் கொடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. இவை தவிர தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது பாரிஸ் கஃபே. கேமராவாகட்டும் படத்தொகுப்பாகட்டும் இசையாகட்டும் அதற்குரிய பங்கினை முழுமையாக கொடுத்திருக்கின்றனர்.
சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தில் எழுத்தில் கூடுதல் கவனமும் திரைக்கதை அமைப்பில் கூடுதல் மெனக்கெடலும் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். அதே சமயம் ஏமாற்றம் அளிக்காத காட்சிகள், தொழில்நுட்ப அம்சங்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
டிராமா வகையிலான இந்த கதையில் ஆணவப் படுகொலை தொடர்பான சமூக அவலங்கள் குறித்து பேச முயற்சித்திருப்பதும் அதை கூடுமானவரை நேர்த்தியாக கொடுத்திருப்பதும் படத்தை காப்பாற்றி இருக்கிறது.
Summary
A Paris café that discusses politics quietly! – A Film Review
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








