அதீத அன்பும் மனப் பிறழ்வும்! ஓவியன் வான்காவின் கதை இது!

கலை சார்ந்த ஈடுபாடு கொண்ட எல்லோருக்கும் வெகு பரீட்சயமான பெயர் வின்சன்ட் வான்கா.
அதீத அன்பும் மனப் பிறழ்வும்! ஓவியன் வான்காவின் கதை இது!

கலை சார்ந்த ஈடுபாடு கொண்ட எல்லோருக்கும் வெகு பரீட்சயமான பெயர் வின்சன்ட் வான்கா. அவரது ஒரு ஓவியத்தை ஆழ்ந்து உணராதவர்கள் கூட அவரது பெயரை அறிந்து வைத்திருப்பதையும், நேசிப்புடன் அணுகுவதையும் நாம் அறிய முடிகிறது. ஓவியக் கலை சார்ந்து மட்டுமல்லாமல், நுண்கலை எதுவொன்றுடனும் தொடர்புடைய எல்லோரும் மாற்று கருத்தில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய மாபெரும் கலைஞன் வான்கா.

பின்-இம்ப்ரஷனிஸ பாணி ஓவியங்களில் பால் செசானுக்கு (Paul Cezanne) பிறகு அதிகம் போற்றப்படுபவர். யதார்த்தத்தை மிக தீர்க்கத்துடனும், யதார்த்தத்தில் உறைந்திருக்கும் உணர்வு கொதிப்புகளை அரூப தன்மையுடன் தோற்றுவிப்பதோடு, அழுத்தமான வண்ணங்களில் அதனை வெளிப்படுத்துவதும் பொதுவாக பின்-இம்ப்ரஷனிஸ பாணி ஓவியங்கள் என வரையறுக்கப்படுகின்றன. நிறங்களில் ஒளிரும் உக்கிரத்தை தனது ஓவியங்களில் வசப்படுத்தியவர் வான்கா. வாழ்நாள் முழுவதிலும், வதைத்தெடுத்த பசியினூடாக, அவருக்கு மிக அவசியமாய் இருந்த அன்பு புறக்கணிக்கப்பட்ட போதிலும் தனது வாழ்க்கையை ஓவியங்களாக தொடர்ந்து வெளிப்படுத்தி கொண்டிருந்தவர். கிட்டதட்ட 2,000 ஓவியங்களை தமது பங்களிப்பாக கலை உலகுக்கு வான்கா விட்டு சென்றிருக்கிறார்.

செல்வந்தர் ஒருவரிடம் வற்புறுத்தி விற்ற ஒற்றை ஓவியத்தை தவிர, அவர் வாழ்ந்த காலத்தில் அவரது ஓவியங்கள் எதுவும் விற்றிருக்கவில்லை. இன்று அவரது ஓவியங்கள் பல கோடி ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. தனக்குரிய அங்கீகாரத்தை கலையுலகம் ஒருநாள் அளித்தே தீரும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்த வான்கா, அவரது சகோதரர் தியோவுக்கு (Theo) எழுதிய கடிதங்களில் அதனை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறு வயது முதலே எவருடனும் அதிக நெருக்கம் பாராட்டமல் தனிமையில் பீடிக்கப்பட்டிருந்த வான்கா, தமது கடைசி காலம் வரையிலும் அதீத அன்புடன் தொடர்புக் கொண்டிருந்தது அவரது சகோதரருடன் மட்டும்தான்.

மதபோதரான வான்காவின் தந்தை, வான்காவும் தன்னை போலவே மதம் சம்பந்தப்பட்ட பணியினை ஆற்ற வேண்டுமென்று வற்புறுத்திய போதிலும் அதனை நிராகரித்துவிட்டு ஹாலந்தில் இருந்து வெளியேறி, லண்டனில் உள்ள உறவுக்காரர் ஒருவரது ஓவிய விற்பனையகத்தில், இளம் வயதில் வேலை செய்ய துவங்குகிறார். வணீக நோக்குடன் வரையப்படுகின்ற ரசனையற்ற ஓவியங்களை அவ்விடத்தில் அவர் சாடுகிறார்.

மதம் சம்பந்தப்பட்ட அவரது கண்ணோட்டத்தை தியோவுக்கு எழுதிய கடிதமொன்றின் மூலமாக நாம் அறிந்துக்கொள்ள முடிகிறது. “நானும் பைபிளை அவ்வப்போது வாசிக்கிறேன். மிச்லே அல்லது பால்ஸாக் அல்லது எலியாட்டை நான் எப்படி எதிர்கொள்கின்றேனோ அவ்விதமாகவே பைபிளையும் நான் வாசிக்கிறேன். ஆனால், தந்தை தனது வாழ்க்கையில் எப்படியெல்லாம் நடந்துக் கொண்டிருக்கிறாரோ அதிலிருந்து மிகமிக மாறுபட்ட பல விஷயங்களை நான் பைபிளில் பார்க்கிறேன். தந்தை பைபிளிலிருந்து எதனை சுவீகரித்துக் கொண்டிருக்கிறாரோ, அதனை என்னால் பைபிளில் உணர முடிந்ததேயில்லை” என்று தியோவுக்கு எழுதிய கடிதமொன்றில் அவர் குறிப்பிடுகிறார். பசியிலும், வறுமையிலும், புறக்கணிப்பிலும் உழலும் மக்களிடம் மதம் தொடர்பான விவாதங்களை எழுப்புவதையும், அதன் நெறிகளை புகுத்துவதையும் எதிர்த்து வான்கா மிக வேதனையுடன் சகோதரரிடம் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

எர்விங் ஸ்டோனால் எழுதப்பட்ட “லஸ்ட் ஃபார் லைஃப்” (Lust for Life) புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வான்காவின் லண்டன் நகர வாழ்க்கை மிகவும் துன்பரகமானது. அங்குதான் அவர் முதலில் காதல் வயப்படுகிறார். கீ என்கின்ற பெண்ணின் மீதான நேசத்தை, அவரிடம் வான்கா வெளிப்படுத்தும்போது, அதனை முற்றிலுமாக கீ நிராகரித்துவிடுகிறார். வான்கா வசித்த வீட்டின் உரிமையாளரின் மகள் கீ. இருவரும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். மாலை நடையை சேர்ந்தே கழிக்கிறார்கள். மிக நெருக்கமான தோழியாகவே வான்கா அவரை கருதுகிறார். ஆனால், கீ வான்காவை முறிந்துப்போன தனது முதல் காதலின் வலிகளிலிருந்து மீண்டெழ உதவும் மனிதராகவே கருதினாரே ஒழிய, காதல் வயப்படவில்லை. இது முற்றிலும் வான்காவை நிலைக்குலைய செய்கிறது.

முன்னதாகவே தனிமை விரும்பியும், தாழ்வு மனப்பான்மை கொண்டவருமான வான்கா கீ தன்னை நிராகரித்ததும் மேலும் மேலும் வேதனையில் உழல்கிறார். கீயின் திருமண நிட்சயத்தார்த்தத்தின் போது, சாலையில் அவளது வீட்டை வெறித்தபடி பூங்கொத்துடன் தெரு விளக்கின் வெளிச்சத்தில் பரிதவித்துப்போய் வான்கா நின்றுக்கொண்டிருந்ததை புத்தகத்தில் வாசிக்கையில் மனம் கனத்துப்போனது.

இந்த நிகழ்வின் பின்னர் லண்டன் நகரத்திற்கு திரும்பப்போவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்திருக்கிறார். ஐரோப்பியாவுக்கு மீண்டும் தஞ்சமடைகிறார். இக்காலங்களில்தான் ஓவியங்கள் வரைய துவங்குகிறார். வசிப்பிட வாடகை தொகைக்கும், ஓவியம் வரைய தேவையான உபகாரன பொருட்களுக்கும் தியோவிடம் பணம் கேட்டு கடிதங்கள் எழுதுகிறார். வாழ்நாள் முழுவதிலும் வான்காவின் பண தேவைகளை கணிசமான அளவுக்கு சுமந்துக்கொண்டிருந்தவர் தியோ.

காதலனால் கைவிடப்பட்ட பெண் ஒருத்தியின் தோழமை அவருக்கு கிடைக்கிறது. அப்பெண்ணையும், அவளது குழந்தையையும் தனது அரவணைப்பில் கவனித்துக்கொள்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இவ்வுறவும் அதிக தினங்கள் நீடிக்கவில்லை. மீண்டும் தனிமை அவரது வாழ்க்கையை சூழ்கிறது.

இந்நாட்களில் வான்காவின் சம காலத்திய பின்-இம்ப்ரஷனிஸ ஓவியரான பால் காகினின் (Paul Gauguin) வருகை நேர்கிறது. காகினும் அவரது இறப்பிற்கு பிறகே கொண்டப்பட்டார். காகினை வரவேற்க, தனது வசிப்பிடத்தில் சூரிய காந்தி பூக்கள் கொண்ட ஓவிய தொகுதியை வரைகிறார் வான்கா. அவரது ஓவியங்களிலேயே மிகச் சிறப்பானதென்றும், அதிக புகழடைந்ததும் சூரிய காந்தி பூக்கள் தொகுதிதான்.

அடர்த்தியான மஞ்சள் நிறங்களை தனது கோடுகளால் தீ ஜுவாலைகளை போல வான்கா அவ்வோவியங்களில் படைத்திருந்தார். அவரது வாழ்க்கையில் நிலவிய நெருக்கடிகளும், அதன் உண்டாக்கிய கொந்தளிப்பும்,  தகிப்பும் சூரிய காந்தி பூக்களில் வெளிப்பட்டிருந்தது. அவரது நித்திய தனிமையை அப்பூக்கள் தம்மில் பிரசவித்திருந்தன. காகினே கூட வான்காவின் ஓவியங்களில் மிக சிறப்பானதென்று சூரிய காந்தி பூக்களைதான் குறிப்பிடுகிறார்.

கலை மேதமை கொண்ட இருவர் ஓரிடத்தில் ஒத்திசைவாக வசிப்பதில் எப்போதுமே சிக்கல்கள் உருவாகியபடியே தானிருக்கும். காகின் வான்காவை விட்டு பிரிகிறார். அவரது பிரிவு வான்காவை மேலும் துயரத்தில் ஆழ்த்துகிறது.

வான்காவை பற்றி பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கும் சம்பவமான, காதினை அறுத்துக்கொள்ளும் நிகழ்வு காகினின் பிரிவின் தொடர்ச்சியாகத்தான் நிகழ்ந்தேறுகிறது. சமீப காலங்களில் அவருக்கு நெருக்கமான விலை மாதர் ஒருவருக்கு அறுத்த தனது காதினை இரத்தம் சொட்ட சொட்ட எடுத்துச் சென்று அன்பளிப்பாக கொடுக்கிறார். மனநிலையும் சமன் குலைகின்றது. பித்தேறிய நிலையிலும் ஓவியங்களை தொடர்ச்சியாக வரைந்துக்கொண்டே இருக்கிறார். புறத்தில் நேர்ந்துக்கொண்டிருக்கும் புறக்கணிப்பிலிருந்து ஓவியங்களை கொண்டு மீள முயற்சிக்கிறார். பதற்றமும், எதிர்கால வாழ்க்கையின் மீதான குழப்பங்களும் சூழ்ந்து அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தபோதும் மிகுந்த படைப்பூக்கத்துடன் செயல்படுகிறார். வான்காவின் “நட்சத்திரங்கள் நிறைந்த இரவு” (The Starry Night) இக்காலங்களில் வரையப்பட்டதே.

ஒளிர்ந்து சுழலும் நட்சத்திரங்கள் உக்கிரத்தன்மை பூண்டுள்ளன. அவை உண்மையில் நட்சத்திரங்களை போலவே காட்சியளிக்கவில்லை. நெருப்பு பந்துகளாக, அக்னி சுழல்களாக நீலமும், மஞ்சளும் கலந்து வானத்தில் பிரகாசிக்கின்றன. அதன் அடியில் நகரம் இரவின் மயக்கத்தில் உறக்கம் கொண்டிருக்கிறது. கருப்பு நிறத்தில் உருக்கொண்டிருக்கும் தேவாலயம் ஒன்று வான் நோக்கி நீண்டிருக்கிறது. நிலைக்கொள்ளாத்தன்மையும், தகிப்பும் கோடுகளில் உறைந்திருக்கின்றன. சீற்றமும், உள கொதிப்பின் வெளிப்பாடாகவும், ஆழமான தனிமையுணர்வும் ஓவியத்தில் படிந்துள்ளது. ”நட்சத்திரங்களுக்கு இடம்பெயரும் நிகழ்வுதான் மரணம்” என எழுதியிருக்கும் வான்கா இந்த ஓவியத்தை புனித பால் மனநல காப்பகத்தில் இருந்தபடியே வரைந்திருக்கிறார். பைத்திய நிலையின் நிறயுருவாக, மெளனத்தில் உறைந்திருக்கும் அந்த நகரமும், சாவுக்கு பிறகான வருகையை எதிர்நோக்கி சுழலும் நட்சத்திர வெளியின் அரூபத்தன்மையும் கொண்டிருக்கிறது ”நட்சத்திரங்கள் நிறைந்த இரவு.”

இதற்கு பிறகாக, மனநிலை பிசகியர் என சொல்லி நகரவாசிகளால் ஏளனப்படுத்தப்படுகிறார். சிறுவர்கள் கூட அவர் மீது கல்லெறிந்து அவரை அவமானப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக, அவ்வுர்ஸ் எனும் நிலப்பகுதிக்கு இடம்பெயரும் வான்கா மிகச் சரியாக ஆறு வாரங்களில் வயிற்றின் இடப்புறத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, அதற்கு அடுத்த தினத்தில் உயிரிழக்கிறார். அங்கீகாரத்திற்கும், அரவணைப்புக்கும் ஏங்கித் தவித்த வான்காவின் துயருற்ற இதயம் 37வது வயதில் தனது துடிப்புகளை நிறுத்திக்கொண்டது.

மகத்தான படைப்பாளி என இக்காலங்களில் போற்றப்படும் மனிதரொருவர் பசியிலும், பணத் தேவைக்கும் இடையில் ஊடாடியபடியே காலத்தை விஞ்சும் அற்புதங்களை படைத்திருக்கிறார் என்று உணரும்போது கண்கள் பனிகின்றன. ஒருவேளை தானும் அவரது சகோதரர் தியோவைப் போலவே வணீகத் தொழில்களில் ஈடுபட்டு, பெண்ணொருத்தியை மணந்துக்கொண்டு சராசரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம் என்றுகூட தனது இறுதிக்கால கடிதமொன்றில் வான்கா எழுதியிருக்கிறார். ஆனால், காலம் இந்த உன்னத கலைஞனை அவன் வாழ்ந்த காலத்தின் அடையாளமாக, ஓவியக் கலையின் தன்னிகரற்ற பெரும் கலைஞனாக அவனது உயிர் போன பின்பே ஏற்றுக்கொண்டது.

போலந்து தேசத்தின் தயாரிப்பாக வெளியாகியிருக்கும் ”லவ்விங் வின்சென்ட்” (Loving Vincent) எனும் திரைப்படம், வான்காவின் கடைசி ஆறு வாரங்களை ஆராய்கிறது. 125 ஓவியர்களின் கூட்டு உழைப்பில், கைகளால் வரையப்பட்ட வான்கா பாணி ஓவியங்களின் வழியாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ரஷ்ய திரைப்பட இயக்குனரான அலெக்ஸண்டர் சுக்குரோவ் (Alexander Sokurov) ஓவிய அருங்காட்சியகம் ஒன்றினை மையப்படுத்தி இடைவெட்டில்லாத ஒற்றை ஷாட்டில் படம்பிடித்த ”ரஷ்ஷியன் ஆர்க்” திரைப்படத்தில் ஓவியங்களில் வரைப்படும் மனிதர்களை, “காலத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட நித்திய உயிர்கள்” என்று குறிப்பிடுவார். அதுப்போலவே, லவ்விங் வின்சென்ட் திரைப்படத்தில் வான்காவால் சட்டகத்தில் கோடுகளாக சீற்றத்துடன் தீட்டப்பட்டிருக்கும் மனிதர்கள் உயிர்பெற்று, தங்களது சிருஷ்டிகர்த்தாவான வான்கா உடனான தமது நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார்கள். வான்காவின் கோடுகள் உயிர்பெறுவதைப் பார்க்க சிலிர்ப்பாக இருந்தது. திரையில் ஊர்ந்து செல்லும் கோடுகளில் பிரதிபலிக்கிறது வான்காவின் வெறித்த கண்கள். நீலமும், கருப்பும் மஞ்சளும் படம் முழுவதிலும் தீவிர கதியில் அசைவு கொள்கின்றன. 


வான்கா தனது சகோதரரான தியோவுக்கு எழுதிய கடிதமொன்றை அவரிடம் சேர்க்க, பயணப்படும் தபால் நிலைய ஊழியர் ஒருவரின் மகனான ஆர்மண்ட் எதிர்கொள்ளும் அனுபவங்களே இத்திரைப்படம். வான்கா இறந்து இரண்டு வருடங்கள் கடந்த பிறகு, இத்திரைப்படம் துவங்குகிறது. ஆர்மண்டும் வான்காவால் ஓவியமாக தீட்டப்பட்டவனே. அதிக உறுதியும், துணிச்சலும் மிகுந்தவனான ஆர்மண்ட் திரைப்படத்தின் துவக்கத்தில் வான்காவின் மீது அதிக பிடிப்பில்லாமலேயே இருக்கிறான். கடிதத்தை சுமந்து திரிவதில் கூட அவனுக்கு பெரியளவில் விருப்பமில்லை. ஆனால், அவனது தந்தை அவனை நிர்பந்திக்கிறார். அவனது தந்தையை வான்கா தஸ்தயேவ்ஸ்கியுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். கரிசணமும், நட்புணர்வும் கொண்ட ஆர்மண்டின் தந்தை வான்காவால் இறுதி காலத்தில் நேசிக்கப்பட்ட உயிர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.

இறப்பிற்கு ஆறு வாரங்களுக்கு முன்னதாக வான்கா தனக்கு எழுதிய கடிதத்தில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பதாக தெளிந்த மனநிலையில் எழுதியிருப்பதாகவும், அதற்குள் அவர் மரணம் செய்துக்கொண்டது விநோதமாக இருப்பதாகவும் ஆர்மண்டின் தந்தை அவனிடம் சொல்கிறார். வான்காவின் மரணத்தின் மீதான புதிர் அவனை முன் செலுத்துகிறது.

வான்கா தொடர்புடைய ஒவ்வொருவராக சந்திக்கிறான். ஓவிய விற்பன்னர் ஒருவரை சந்திக்கும்போது, வான்காவிடம் மிக நெருக்கமாக இருந்த, மருத்துவர் கேஜ்ஜட்டை சந்திக்குமாறு அவர் பரிந்துரைக்கிறார். மருத்துவரை தேடி செல்லும் பயணத்தில், வான்கா தனது இறுதி நாட்களை செலவிட்ட கோதுமை வயல்கள், நீர் நிலைகள், வான்கா உயிர்விட்ட அறை என ஆர்மண்ட் ஒவ்வொரு இடமாக சென்று வான்காவுடனான தங்களது அனுபவங்களை அங்கிருக்கும் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள உந்துகிறான். முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் அவனுக்கு கிடைக்கின்றன. அதனால், வான்கா தற்கொலை செய்துக்கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதாக ஆர்மண்ட் தனக்குள் தீர்மானமாக நம்ப துவங்குகிறான்.

வான்கா இறந்து இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன என்றாலும், இன்னமும் அவரது கல்லறையில் மலர்களை வைப்பதை தீவிரமாக கடைப்பிடித்து வரும் மருத்துவர் கேஜ்ஜட்டின் மகளிடம், ஆர்மண்ட் தனது கண்டுப்பிடிப்புகளையும் யூகங்களை விவரிக்கும்போது, அவள், “நீ வான்காவின் இறப்பை பற்றித்தான் அதிக ஆர்வத்துடன் இருக்கிறாய், அவரது வாழ்க்கையை பற்றி அல்ல” என்று அவனது யூகங்களில் ஆர்வமில்லாமல் அவள் மறுக்கிறாள். ஆர்மண்டுக்கு இந்த சந்திப்புகளின் மூலமாக வான்கா மீது அவன் கொண்டிருந்த எண்ணங்களில் மாற்றமேற்படுகிறது.

மருத்துவர் கேஜ்ஜடை சந்தித்ததும், வான்கா மரணத்தின் புதிர்கள் அவிழ்கின்றன. மருத்துவருக்கும், வான்காவுக்கும் ஏற்பட்ட வாய் தகராறில், வான்காவின் இருப்பு என்பது தியோவுக்கு பெரும் சுமையாக இருக்கிறது என அவர் கோபத்தில் உரக்க குரலெழுப்பியதாகவும், அதன் தொடர்ச்சியாகவே வான்கா தற்கொலையை நோக்கி சென்றுவிட்டதாகவும் அவர் சொல்கிறார்.

வான்காவால் தியோவுக்கு தான் சுமையாய் இருப்பதை ஆரம்ப காலங்களிலிருந்தே அவர் உணர்ந்துதான் இருந்தார் என்றாலும், தனது கலையின் மீதான நம்பிக்கையினால் அந்த எண்ணங்களை அவர் எளிதாக கலைந்தபடியே இருந்திருக்கிறார். கலை மிக விரைவில் பொருளாதார ரீதியாக அவரை மேலுயர்த்தும் என்பதில் அதிக உறுதியுடன் இருந்தவர் வான்கா. ஆனால், மருத்துவர் வான்காவை குற்றஞ்சாட்டிய தருணத்தில், உடலளவிலும், மன அளவிலும் மிக குன்றிய நிலையிலேயே வான்கா இருந்தார். தொடர் புறக்கணிப்பும், அங்கீகாரமற்ற நிலையும், நிகழ்காலத்தின் மீதான ஐயமும் அவரை கடைசி ஒரு வருட காலம் வதைத்தெடுத்தபடியே இருந்தது. முடிவில், கோதுமை வயல்களின் மிளிரும் மஞ்சள் வெளியில் கருப்பு உருக்களென திரிந்தலையும் காகங்களின் சாட்சியமாக வான்கா துப்பாக்கியால் தனது உடலில் சுட்டுக்கொண்டு உயிரை துறந்துவிட்டார். ஆர்மண்ட் மருத்துவரின் மூலமாக அறிந்துக்கொண்ட தகவலுடன், தன் கைவசமிருந்த கடித்தத்தை தியோவின் மனைவிக்கு அனுப்புவதோடு தன் ஊருக்கு திரும்புகிறார். ஏனெனில், வான்கா இறந்த சில காலங்களுக்குள் தியோவும் இறந்துவிட்டார்.

கால்கள் பெயரறியா நிலவெளிக்குள் ஊர்ந்து அலைந்துக் கொண்டிருப்பினும், தினங்களும் பொழுதுகளும் மாய சுவரொன்றை இடையில் எழுப்பியிருப்பினும், சொற்களின் மூலமாக தம் வாழ்நாள் முழுவதிலும் தொடர்பு கொண்டிருந்தனர் சகோதரர்கள் இருவரும். வான்கா தனது அந்தரங்க பிரதியாகவே தியோவை கருதியிருந்தார். வான்காவின் அலைச்சல்களால் தகித்துக்கொண்டிருந்த மனதினை அவரது ஓவியங்களை தவிர்த்து, நாம் தியோவுக்கு எழுதிய கடிதங்களின் மூலமாகவே அறிந்துக்கொள்ள முடிகிறது.

டோராட்டா கோபியலா (Dorota Kobiela) எனும் ஓவிய கலைஞர் மற்றும் ஹக் வெல்ச்மேன் (Hugh Welchman) கூட்டு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ”லவ்விங் வின்சன்ட்” அவர்களது ஐந்து வருட கால தொடர் உழைப்பில் உருவாகியுள்ளது. முன்னதாக குறும்படமாகவே அவர்கள் இப்படத்தை இயக்க முடிவு செய்திருந்தனர். பின்னர் பொருளாதார ரீதியிலான உதவியும், படத்தை பற்றிய அறிவிப்புக்கு கிடைத்த வரவேற்பும் அவர்களை லவ்விங் வின்சன்ட்டை முழு நீள திரைப்படமாக உருவாக்கும் எண்ணத்தை உண்டாக்கியிருக்கிறது. கடைசி வருடங்களில் வான்கா தீட்டிய ஓவியங்களை மட்டுமே இவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். வான்காவின் நினைவுக் கதைகள் கறுப்பு வெள்ளையிலும், நிகழ்காலம் வண்ணத்திலும் வரையப்பட்டு திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வான்கா தனது ஓவியங்களில் பிரயோகித்த தகிப்பு நிலையை இவர்களும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். திரையில் அசையும் வண்ணங்களை தரிசிக்கையில், வான்கா மீதான வியப்பு அதிகரித்தபடியே இருக்கிறது.   

தியோவுக்கு வான்கா எழுதிய கடிதமொன்றில், “எப்போதும் வாழ்க்கையில் இருளும், துன்பமும் மட்டுமே மிகுந்திருக்கும் என ஒருவன் நினைக்கக்கூடாது. அவ்வாறே அவன் எண்ணுவான் என்றால், பிரக்ஞை அழிந்த பைத்திக்கியமாகி விடுவான். அதற்கு மாறாக, தன்னம்பிக்கையுடன் தமது பணிகளில் கவனத்தை குவிக்க வேண்டும். நன்மையையும், தீயவற்றையும் சரி நிகராக எடுத்துக் கொள்ள பழக வேண்டும். வாழ்க்கையில் நம்மால் புரிந்துக்கொள்ள முடியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. வாழ்க்கை கதைகளில் வருவதைப்போல எளிமையானதாகவோ, தேவாலயங்களில் பாதிரியார்கள் சொல்வதைப்போல சாதாரணமாகவே இருந்துவிட்டால், மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற இந்த அளவுக்கு துயரையும், இருட்டையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் உண்மையில் வாழ்க்கை அப்படியா எளிமையானதாக இருக்கிறது?” என்று எழுதியிருக்கிறார்.

துயரத்தின் திண்மை அதிகரிக்க அதிகரிக்க ஒருவரது உடல் அதனை சகித்துக்கொள்ளும் ஆற்றலை இழந்துவிடுகிறது. வான்காவுக்கும் நேர்ந்ததும் அதுவேதான். உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை வரையிலும் அவரை துயரம் துரத்தியபடியே இருந்தது. 

வாழ்நாளெல்லாம் நிம்மதியான உறக்கமும், நிலைத்த வசிப்பிடமும், பசியாற உணவும் கிடைக்கப் பெறாத நிலையிலும் உள்வெறியுடன் ஓவியங்களை படைப்பூக்கத்துடன் படைத்த பெரும் கலைஞன் வான்கா. மகத்தான அக்கலைஞனை அவரது ஓவியங்களை பின் தொடர்ந்து செல்வதன் மூலமாக அறிந்து கொள்ளும் பேருவகையான உணர்வை உண்டாக்குகிறது லவ்விங் வின்செண்ட் திரைப்படம். 

நன்றி - அம்ருதா / புகைப்படங்கள் - லவ்விங் வின்சென்ட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com