Enable Javscript for better performance
Gayathri Jayaram, Swarnamalya, Pepsi Uma, Sharmilee on so on...- Dinamani

சுடச்சுட

  

  காயத்ரி ஜெயராம், ஸ்வர்ணமால்யா, பெப்சி உமா, ஷர்மிலி, மகாலஷ்மி!

  By சரோஜினி  |   Published on : 17th April 2019 05:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gayathri

   

  சன் டி.வி இளமை புதுமையில் முதன்முதலாக காயத்ரியைப் பார்த்தவர்கள் நிச்சயம் அவரது விசிறியாக அனேகம் வாய்ப்புகள் உண்டு.

  இப்போது ‘அழகு’ சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கும் முன்பு சுந்தர் சி யின் நந்தினி சீரியலிலும் வில்லி வேஷம். ஆரம்பகால காயத்ரி ஃபேனாக ஒரு பக்கம், ச்சே ஏன் இப்படி என்று தோன்றினாலும் சரி இது அவரவர் சர்வைவல் சார்ந்த விஷயம் என்று அந்த ஏமாற்றத்தைப் புறக்கணித்து விடலாம். சரி அதை விடுங்கள், காயத்ரியிடம் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லை. கொஞ்சம் பூசினாற் போல் எடை கூடியதைத்தாண்டி அதே மல்லிப்பூ புன்னகை கொட்டிக் கிடக்கும் பேச்சுத்தான் இன்றும்.

  காயத்ரி பிறந்து வளர்ந்தது, இப்போது இருப்பது எல்லாம் சென்னை போயஸ் கார்டனில்.

  பள்ளி இறுதி வகுப்பில் மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. கன்சர்வேட்டிவ் குடும்பம் என்ற போதிலும் இதற்கெல்லாம் அனுமதி மறுக்கப்படவில்லை. இது உன் திறமை சார்ந்தது சென்று வா, வென்று வா என்று அனுப்பினார்கள். நிறைய விளம்பரங்கள் மட்டும் ராம்ப் வாக்குகளில் காயத்ரியின் பிரசன்னம் அப்போது இருந்தது. காயத்ரி என்ன அவரது அம்மாவே அந்தக்காலத்தில் ஒரு பெரிய மாடல் தானாம். ஐடெக்ஸ் பொட்டு விளம்பரங்களில் ஆரம்பகாலங்களில் இடம்பெற்றது காயத்ரியின் அம்மா தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கு பெண் சுதந்திரம் பேணப்பட்ட குடும்பம் என்ற போதும் சினிமாவுக்கு மாத்திரம் அப்போதும், இப்போதும் நோ தான் சொல்லி வந்திருக்கிறார்கள்.

  வீட்டில் சினிமா பார்க்க அனுமதி இல்லை. வெளியிலும் சினிமா பார்க்க அழைத்துச் செல்லப்படவில்லை என்று வளர்ந்து வந்த போது திடீரென சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று அப்பா முன் நின்ற போது, காயத்ரியின் அப்பா அவரிடம் மறுப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக;

  நீ சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்கிறாய். உன்னைத் தடுப்பது என் நோக்கமில்லை. ஆனால், நம்முடையது கன்சர்வேட்டிவ் குடும்பம். நீ இதுவரை மாடலிங், ராம்ப் வாக் என்று இருந்தாய். அது வரை பரவாயில்லை. நாளை சினிமாவில் நடித்து விட்டு வந்து சில படங்களுக்குப் பின் அப்பா எனக்கு நம்முடைய சர்க்கிளில் தேடி ஒரு பையனைக் திருமணம் செய்து வை என்று வந்து நின்றாய் என்றால், என்னால் உனக்கு மாப்பிள்ளை பார்த்துத் தர முடியாது. அதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு சினிமாவில் இறங்கு என்று சொல்லியிருக்கிறார். இதைச் சொல்லும் போது காயத்ரியின் முகத்தில் அப்பா குறித்த பெருமை அதிகம் இருந்தது. பெண் சினிமாவில் இருந்தால், அவளைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கக் கூடும் மணமகன் வீட்டார், அதற்கெல்லாம் பதில் சொல்லும் நிலையில் என்ன வைத்து விடாதே, என்று என் அப்பா சொல்லாமல் சொல்லிப் புரிய வைத்தார். அவரது வார்த்தைகளில் இருந்த நியாயமும், யதார்த்தமும் எனக்குப் புரிந்தது. ஆனாலும் நான் சினிமாவில் இறங்கினேன். ஒன்றிரண்டு படங்களுக்கு மேல் நடிக்கவில்லை. திருமணம், குழந்தைகள், விளம்பரம் என்று ஒதுங்கி விட்டேன். இதோ இப்போது சீரியல் வாய்ப்புகள் வருகின்றன. அதில் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்கள் வந்தால் நடித்துக் கொண்டிருக்கிறேன். சின்னத்திரை வாழ்க்கை சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

  சினிமா ஐ மீன் பெரியதிரையில் ஷாட் முடிந்து கட் சொல்லிவிட்டால் அதில் நடிப்பவர்களுக்கிடையே பெரிதாக உரையாடலோ, நட்பான பேச்சோ இருக்காது. அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால், சின்னத்திரை அப்படி இல்லை. இங்கே வாரம் 5 நாட்களும் வேலை தான். பள்ளி விடுமுறை போல மீண்டும் திங்களன்று சின்னத்திரை ஷூட்டிங் ஆரம்பித்து விடுகிறார்கள். இங்கே ஷாட் இல்லாத நேரத்தில் நாங்கள் எழுந்து போய் வேறு வேலை பார்ப்பதெல்லாம் இல்லை. எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அறையில் கும்பலாக அமர்ந்து ஏதேதோ வேலைகளில் ஆழ்ந்திருப்போம் அல்லது அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். இப்படி இருப்பது நன்றாகவே இருக்கிறது. சமயத்தில் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறோம், ரீல் கணவருடனா? அல்லது ரியல் கணவருடனா? என்று சந்தேகம் வந்து விடும். அந்த அளவுக்கு சீரியல் எங்கள் வாழ்க்கையோடு ஒன்றி விட்டது என்கிறார் காயத்ரி.

  சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு காயத்ரி அளித்த நேர்காணல் மேலும் பல சீரியல் ஆங்கர்களின் நினைவுகளைக் கிளறி விட்டது...

  சன் டிவியில் இளமை, புதுமை தொடங்கிய காலகட்டத்தில் அதில் புதுப்புது ஆங்கர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். அவர்களில் டிவி ரசிகர்கள் அதிகம் ரசித்தது இருவரை ஒருவர் காயத்ரி ஜெயராம், மற்றவர் ஸ்வர்ணமால்யா. இருவருமே அழகோடு திறமையும் கூடிய பெண்கள். இருவருமே சிரித்தால் மல்லிகைப்பூக்கள் உதிரக்கூடுமோ என்பது மாதிரியான அழகான சிரிப்புக்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்கள்! இப்படித்தான் அன்று இவர்களை ரசித்து வந்தார்கள் அன்றைய சன் டிவி ரசிகர்கள். ஸ்வர்ணமால்யா மிகச்சிறந்த பரதக் கலைஞர். காயத்ரி ஜெயராம் ஆங்கரிங் செய்யும் அத்தனை நிகழ்ச்சிகளிலுமே ஒரு நேர்த்தியும், மெல்லிய நகைச்சுவையும் இழையோடும். அழகும், திறமையும் இருந்தும் கூட இவர்கள் இருவருமே பெரிய திரையில் பெரிதாக சோபிக்கவில்லை. 

  ஸ்வர்ணமால்யா ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் ஷாலினிக்கு அக்காவாக நடித்த போது ஷாலினியைத் தாண்டி அழகாகத் தெரிந்தார். நடிக்கவும் தெரிந்திருந்தது. பிறகு ஏன் மொழி திரைப்படம் வரை அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பும் அமையவில்லை என்று தெரியவில்லை. அதையாவது பொறுத்துக் கொள்ளலாம். மொழிக்குப் பிறகு ஏதோ ஒரு படம், பெயர் மறந்து விட்டது, அதில் வி டி வி கணேஷுக்கு ஜோடியாக ஸ்வர்ணமால்யா நடித்திருப்பார். இதையும் சர்வைவல் என்ற காரணத்தைச் சொல்லிப் புறம் தள்ள முடியவில்லை.

  இவர்கள் தான் என்றில்லை, ஒருகாலத்தில் சன் டிவியில் ஆங்கரிங் செய்து கொண்டிருந்த மகாலஷ்மிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. அந்தப்பெண் இப்போது ஏதேதோ சீரியல்களில் எல்லாம் வில்லியாகவும், துக்கடா ரோல்களிலும் வந்து போய்க்கொண்டிருக்கிறார். இவர்கள் எல்லாம் நாம் நடிப்பு என்ற பெயரில் நம்மை ரசித்த ரசிகர்களுக்குள் வில்லத்தனம் என்ற பெயரில் எத்தனை நச்சுக்களைப் புகுத்திக் கொண்டிருக்கிறோம் என்று கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்களா? என்றிருக்கிறது.

  அதே போல ஜெயா டிவி யில் ‘காசு மேல’ என்றொரு ரியாலிட்டி ஷோவைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ஷர்மிலிக்கும் அனேக ரசிகர்கள் இருந்தார்கள். இவர்களது கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் கிள்ளை மொழி ஸ்டைல் அன்றிருந்த ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. ஷர்மிலி, நடிகர் ஜீவாவின் அறிமுகப்படத்தில் நாயகியானார். அந்தப் படத்துடன் சேர்த்து தமிழில் மேலும் இரண்டொரு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருப்பார். பிறகு மலையாளக் கரையோரம் சென்று அங்கே சில ஹிட் படங்கள் கொடுத்து விட்டு பிறகு அப்படியே ஃபேட் அவுட் ஆகிப்போனார். இப்போது எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது மீடியா அறியாத ரகசியம். ஐ மீன் காணாமல் போன நடிகைகளில் ஒருவராகி விட்டார் ஷர்மிலி. 

  பெப்சி உமா குறித்துத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவர் சினிமாவில் நடிக்கவில்லையே தவிர பெப்சி உமாவின் பெயர் இடம் பெற்ற பல திரைப்படங்கள் தமிழில் உண்டு. யாரையாவது கலாய்க்க வேண்டுமென்றாலும் கூட, ‘ஆமாம், நீ பெரிய பெப்சி உமா பாரு’ என்று தான் கலாய்ப்பார்கள். அப்படி ரசிகர்களின் ராணியாக டிவி உலகில் கோலோச்சியவர் பெப்சி உமா. அவரை சின்னத்திரை, பெரிய திரை எந்தத் திரையிலும் இப்போது காண முடியவில்லை.

  இவர்கள் அத்தனை பேரும் திறமையான ஆங்கர்கள் மட்டுமல்ல, மக்களால் அதிகமும் கொண்டாடப்பட்டவர்களும் கூட. ஆனால், ஏன் பெரிய திரையிலோ அல்லது வேறொரு ஊடகப்பரப்பிலோ அதிகம் சோபிக்க முடியவில்லை என்பது தான் புதிர்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai