காதல் மன்னனாக ஜெயிப்பது எப்படி?: நிரூபித்துக் காண்பித்த ரிஷி கபூர்!

வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகமாகி தனக்கென்ன ஓர் அடையாளத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.
காதல் மன்னனாக ஜெயிப்பது எப்படி?: நிரூபித்துக் காண்பித்த ரிஷி கபூர்!
Published on
Updated on
4 min read


வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகமாகி தனக்கென்ன ஓர் அடையாளத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.

இதைத் தனது முதல் படத்திலேயே எளிதாகச் சாதித்தவர் ரிஷி கபூர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். இன்று அவருடைய 69-வது பிறந்த தினம்.

1973-ல் கதாநாயகனாக நடித்து அறிமுகமான படம் - பாபி. இந்தியா முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்ட பாபி தான் கடைசி வரைக்கும் ரிஷி கபூரின் முக்கிய அடையாளமாகவும் வெற்றிகரமான படமாகவும் இருந்தது. ரிஷி கபூரின் தந்தையும் புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான ராஜ் கபூர் இயக்கிய இந்தப் படத்தில் தான் டிம்பிள் கபாடியாவும் நடிகையாக அறிமுகமானார்.

19070-ல் வெளியான மேரா நாம் ஜோக்கர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே இந்திய அளவில் புகழை அடைந்தார். பணக்காரக் காதலன் - ஏழைக் காதலி என்கிற பின்னணியும் அப்போது ரசிகர்களுக்குப் புதுமையாக இருந்தது. இந்தக் கதைக்கான கதாநாயகி வேடத்துக்கு டிம்பிள் கபாடியாவா நீது சிங்கா என்கிற குழப்பம் ஏற்பட்டபோது கடைசியில் சரியான முடிவை எடுத்தார் ராஜ் கபூர்.

என்னை அறிமுகம் செய்வதற்காக என் தந்தை இந்தப் படத்தை எடுக்கவில்லை. மேரா நாம் ஜோக்கர் படத்தினால் ஏற்பட்ட கடனை அடைக்கவே பாபி படத்தை உருவாக்கினார். அப்போது பிரபல நடிகராக இருந்த ராஜேஷ் கண்ணாவுக்குச் சம்பளம் தர முடியாததால் வேறுவழியில்லாமல் என்னையே கதாநாயகனாகத் தேர்வு செய்தார் என்றார் ரிஷி கபூர்.

பாலிவுட்டில் இளவயதுக் காதல் தொடர்பான படங்களில் முதலில் முத்திரை பதித்தது பாபி தான். இன்றுவரைக்கும் இந்தியாவில் அதிகமாக வசூலித்த படங்களின் பட்டியலில் பாபிக்கும் ஓர் இடமுண்டு. 1970களில் ஷோலேவுக்கு அடுத்ததாக அதிகமாக வசூலித்தது பாபி தான். அதேபோல இரு வருடங்கள் கழித்து ரஷியாவில் பாபி வெளியானபோது வசூலில் சாதனை செய்தது. ராஜ் கபூருக்கு ஆவாரா படம் எப்படி ரஷியாவில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதோ அதேபோல ரிஷி கபூருக்கு பாபி அமைந்தது. மேரா நாம் ஜோக்கர் படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது, பாபியில் நம்பமுடியாத வெற்றி என எல்லாவிதமாகவும் ஓர் அட்டகாசமான தொடக்கத்துடன் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் ரிஷி கபூர்.

காதல் படம் மூலமாக அறிமுகமானதால் தொடர்ந்து ஏராளமான காதல் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் காதல் மன்னனாகவும் புன்னகை மன்னனாகவும் 70களில் இளைஞர்களாக இருந்தவர்களை வெகுவாக ஈர்த்தார். Khel Khel Mein, Kabhi Kabhie போன்ற படங்கள் பாபியின் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள உதவின. 1977-ல் வெளியான Hum Kisise Kum Nahin, Amar Akbar Anthony ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்று ரிஷி கபூரின் அந்தஸ்த்தை மேலும் உயர்த்தின.

1979-ல் ஜெயபிரதா, ரிஷி கபூருடன் இணைந்து நடித்த ஹிந்திப் படம் - சர்கம். லக்‌ஷ்மிகாந்த் பியாரிலாலின் பாடல்கள் இந்திய ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டன. முதல் பத்து வருடங்களில் பல வெற்றிப் படங்கள் முக்கியமாக அற்புதமான பாடல்களைக் கொண்ட படங்களில் நடித்து திரையுலகுக்குப் புத்துணர்ச்சியை அளித்தார் ரிஷி கபூர்.

திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதல் மன்னனாக ஜெயித்துக் காண்பித்தவர், ரிஷி கபூர்.

1974 முதல் ரிஷி கபூர் - நீது சிங் ஆகிய இருவரும் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்து வெற்றிகரமான ஜோடியாக ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார்கள்.

ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்த நீது சிங்கை 1980-ல் திருமணம் செய்துகொண்டார். ரன்பீர் கபூர், ரித்திமா கபூர் என இவர்களுக்கு இரு குழந்தைகள். ரிஷி கபூரும் நீது சிங்கும் திருமணத்துக்கு முன்பு ஜோடியாக 11 படங்களிலும் திருமணத்துக்குப் பிறகு 2 படங்களிலும் நடித்தார்கள்.

இவர்களுடைய காதல் கதை சுவாரசியமானது. பாபி படத்தில் நீதுவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு உருவாகாத போதும் அடுத்தப் படமான Zehreela Insaan-ல் நீதுவுடன் இணைந்து நடித்தார் ரிஷு கபூர். முதல் படத்திலேயே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு ஏற்பட நல்ல நண்பர்கள் ஆனார்கள். மும்பைக்கு வெளியே நீது இல்லாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோதுதான் வெறுமையை உணர்ந்தார் ரிஷி கபூர். உடனடியாக நீதுவுக்கு ஒரு தந்தி அடித்துவிட்டார். உன் ஞாபகம் அதிகமாக உள்ளது என்று.

உடனே வானில் பறந்தார் நீது சிங். ஆனால், உன்னைக் காதலிப்பது நிஜம், எனினும் ஒருபோதும் திருமணம் செய்யமாட்டேன் என்று வெளிப்படையாகக் கூறிவிட்டார் ரிஷி கபூர். இதில் கொஞ்சம் குழம்பினாலும் காதலுக்குச் சம்மதம் சொல்லிவிட்டார் நீது. 1975 முதல் இருவரும் காதலர்களாக உலவ ஆரம்பித்தார்கள். காதலிக்க ஆரம்பித்த பிறகு மனம் மாறினார். நீதுவைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது என முடிவெடுத்தார் ரிஷி கபூர்.

80களில் கர்ஸ் (1980), சாந்தினி (1989) ஆகிய இரு படங்களும் ரிஷி கபூருக்கு முக்கியப் படங்களாக அமைந்தன. சரியான இடைவெளியில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து இருபது வருடங்களாகத் தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.  

டிம்பிள் கபாடியாவுடன் இணைந்து நடித்த சாகர் (1985) படம் ரிஷி கபூருக்கு இன்னொரு வெற்றியை அளித்தது. இந்தப் படத்தின் பாடல்கள் அடுத்த தலைமுறை இளைஞர்களை ஈர்த்தன. 80களில் பாலிவுட்டில் கோலோச்சிய ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த நாகினா (1986), சாந்தினி (1989) ஆகிய படங்கள் ரிஷி கபூரின் ஹிட் படங்களின் வரிசையில் இணைந்தன. வன்முறைப் படங்களுக்கு மத்தியில் சாந்தினி படத்தின் வெற்றி, பாலிவுட்டில் அதிகமான காதல் படங்களை வரவழைத்தது. சாந்தினி படம் ஸ்ரீதேவியின் மார்க்கெட்டைப் பெருமளவில் உயர்த்தினாலும் வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடிப்பவர் என்கிற முத்திரையைத் தக்கவைத்துக்கொண்டார் ரிஷி கபூர். 90களில் ஹென்னா, போல் ராதா போல் படங்கள், ரிஷி கபூருக்கு மேலும் வெற்றிகளைத் தந்தன.

1992-ல் தீவானா படம் தான் ரிஷி கபூரின் பெயரைச் சொல்லும் கடைசிப் படமாக அமைந்தது. அதன்பிறகு ரிஷி கபூரின் பாதையில் பயணிக்க ஆரம்பித்து வெற்றிகரமான கதாநாயகனாக உருவெடுத்தார் ஷாருக் கான்.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து தொடர்ந்து பாலிவுட்டுக்குப் பங்களித்து வந்தார். Do Dooni Chaar (2010), Kapoor & Sons (2016) ஆகிய படங்களில் ஏற்று நடித்த வேடங்களுக்காக ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றார் ரிஷி கபூர்.

மகன் ரன்பீர் கபூரின் வெற்றிகள் மீதும் ரிஷி கபூருக்கு எப்போதும் பெருமை உண்டு. இயல்பான கதாபாத்திரங்களில்தான் நடிக்கிறார். தன் வயதை உடைய இளைஞன் நிஜ வாழ்க்கையில் என்ன செய்வானோ அதுபோன்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யவே விரும்புவதாக ரன்பீர் கபூர் கூறுகிறார். இதுபோன்ற சவால்களை அவர் எதிர்கொள்வதை ரசிக்கிறேன். ஆனால் அவர் நடிக்கும் படங்கள் எனக்குப் பிடிப்பதில்லை. அதில் நிறைய தவறுகளைக் காண்கிறேன். அதேசமயம் எல்லா முடிவுகளையும் அவரே எடுக்கிறார். நாங்கள் தலையிடுவதில்லை என்று ஒரு பேட்டியில் கூறினார் ரிஷி கபூர்.

அவருடைய கடைசிக் காலக்கட்டம் போராட்டமாக அமைந்துவிட்டது. 2018-ல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரிஷி கபூர். 2019 செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, மும்பைக்குத் திரும்பினார் ரிஷி கபூர். நீது கபூரும் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ரிஷி கபூருக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது ஷாருக் கான், ஆலியா பட், ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுபம் கெர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

தனக்கான வெற்றிகளை அடைவதில் ரிஷி கபூருக்குச் சிரமம் இருந்ததில்லை. நட்சத்திர வாரிசாக இருந்தால் மட்டுமே அகில இந்தியப் புகழ் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது. சரியான படங்களைத் தேர்வு செய்து இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக விளங்கினார்.

பாபி, கர்ஸ், சாந்தினி, கபி கபி போன்ற படங்கள் ரிஷி கபூர் நம்மை விட்டுப் பிரியவில்லை என்பதை எப்போதும் உணரவைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com