ரஜினிகாந்துக்குப் புதிய அடையாளத்தைத் தந்த புவனா ஒரு கேள்விக்குறி!

வில்லன் நடிகராக திரையில் மிளிர்ந்த ரஜினிகாந்த தனிக் கதாபாத்திரத்திலும் நடித்திட முடியும் என்பதை நிருபித்த...
ரஜினிகாந்துக்குப் புதிய அடையாளத்தைத் தந்த புவனா ஒரு கேள்விக்குறி!

பெங்களூரில் பேருந்து நடத்துநராக இருந்த சிவாஜிராவ் கெய்க்வாட், தமிழ்த் திரையுலகின் பிதாமகன் கே.பாலச்சந்தரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு ரஜினிகாந்தாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அபூர்வ ராகங்களில் ஸ்ரீவித்யாவின் விட்டுப் போன கணவராக அறிமுகமானார். அபூர்வ ராகங்களில் தனது மனைவியைச் சந்திக்க கதவு திறந்து திரையில் தோன்றிய ரஜினிகாந்த் பின்னாளில் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயக்கதவுக்குள் நுழைந்த நடிகராக உயர்ந்தவர். இந்தியாவை கட்டி ஆளும் பிரபலமான திரைப்பட நடிகராக மிளிர்வதற்குக் காரணமாக இருந்த புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படம் திரைக்கு வந்து 44 ஆண்டுகளைக் கடந்துள்ளது. 

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் மகிரிஷியின் மூலக்கதைக்கு பஞ்சு அருணாசலத்தின் திரைக்கதை, வசனத்துடன், இளையராஜா இசையுடன் கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி வெளியானது. 1975ல் அறிமுகமாகி 10வது திரைப்படமான புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படம்தான் ரஜினிகாந்தின் அடுத்தக்கட்ட திரைப் பயணத்திற்கான பயணத்தை உறுதி செய்த சாதனைப்படமாக அமைந்தது. 

தெருவோரத்தில் துணிகளை விற்பனை செய்யும் இரண்டு நண்பர்களின் வாழ்க்கைப் போராட்டம், காதல், தோல்வி, பாசம், நட்பு, அன்பு, வெற்றி, சமரசம், தியாகம், தீர்வு என பல்வேறு வகையான உணர்தலை மகிரிஷியின் மூலக் கதையிலிருந்து எடுத்து அதைப் பிரமாதமாகத் திரைக்கதையாக்கியிருந்தார் பஞ்சு அருணாசலம். 

தமிழ்த் திரைப்படத்தில் அதுவரை  நல்லவராக நடித்து வந்த சிவகுமார், அதற்கு எதிரான நாகராஜ் கதாபாத்திரத்திலும், சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி வில்லனாக நடித்து வந்த ரஜினிகாந்த் மிகவும் வித்தியாசமாக சம்பத் கதாபாத்திரத்திலும் நடித்த படம். புவனாவாக சுமித்ரா நடித்திருந்தார். தனது வசதிக்காகவும், சுகத்திற்காகவும் எதையும் செய்யும் துணிச்சல்கார நாகராஜ் தன்னைக் காதலிக்கும் பெண்களை ஏமாற்றி பாதியில் விட்டுச் செல்வதும், பாவத்திற்கும், துரோகத்திற்கும் அஞ்சும் சம்பத் தான் ஆசை ஆசையாகக் காதலித்த காதலி இறந்து போனதால் தற்கொலைக்கு முயன்று நாகராஜால் காப்பாற்றப்பட்டு அந்த நன்றிக்கடனுக்காக அவருடன் வாழ்ந்து அவர் செய்யும் தவறுகளுக்குத் துணை போகும் கட்டாய நிலை ஏற்பட்டுப் போகும். 

ஒருகட்டத்தில் புவனா தன்னை உண்மையாகக் காதலித்த நாகராஜிடம் தன்னை ஒப்படைத்து அதனால் கர்ப்பமாகும் நிலையில் தனது நண்பன் செய்த ஒரு பாவத்தை ஏற்றுக் கொள்ளும் சம்பத் அதற்காகவே வாழ்ந்து வருவார். ஒரு திரைச்சீலையை இருவருக்குமான எல்லைக்கோடாகப் பாவித்து நாடகக் கணவராகவும், புவனாவிற்கும் சம்பத்திற்கும் பிறந்த குழந்தைக்குத் தந்தையாக வாழ்ந்து வருவார். பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு 5 ஆண்டுகள் கழிந்த பின்னர் குழந்தைப் பிறப்புக்குத் தகுதியில்லாத நாகராஜ் தன்னால் புவனாவுக்குப் பிறந்த தனது குழந்தையைத் தத்தெடுக்கும் முயற்சியின் போது புவனாவை அடிக்கச் செல்வார். அப்போது தங்களது நட்பையே முறித்துக்கொண்டு உயிருக்குப் போராடும் குழந்தையைக் காப்பாற்றி உயிரை விடுவார் சம்பத். விதவைக் கோலத்தில் புவனாவைக் கேள்விக்குறியாக்கி திரைப்படம் முடியும். 

1977ம் ஆண்டில் பரீட்சார்த்த முறையில் உறவையும் நட்பையும் தியாகத்தையும் மையப்படுத்தி உச்சக்கட்ட காட்சி அடுத்தது என்ன என்கிற கேள்விக்குறியுடன் ரசிகர்களின் யோசனைக்கு விட்ட படம். ஒரு சந்தர்ப்பவாதியிடம் சிக்கிக் கொண்ட தியாகத்தின் சின்னமான நண்பர் உயிர்விட, இளமை வேகத்தில் பெண்களை மோகித்து குழந்தைகளைக் கொடுத்து அவற்றை அளித்தவனுக்கு வசதியிருந்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் போனதையும், ஆசைக்குப் பலியான பெண் ஆதரவற்ற நிலையில் குழந்தையுடன் கேள்விக்குறியுடன் முடிவடைந்த படத்தை ரசிகர்கள் வரவேற்று பாராட்டி வெற்றிப் படமாக்கினர். 

படம் முழுவதும் ஒரே உடை, தாடி. திரையில் தோன்றும்போதெல்லாம் வாயில் புகையுடன் தத்துவம் பேசி குடிகாரனாக கையைச் சொடுக்கியபடி தலையைச் சாய்த்து  வசனத்தை வித்தியாசமாகப் பேசி தன்னை வெளிப்படுத்தி, ரஜினிகாந்திற்கும் நடிக்கத் தெரியும் என்பதை உறுதி செய்த அந்தத் திரைப்படம் அவரது திரைப்பட வாழ்வு வெளிச்சத்துடன் பிரகாசமாகத் துவங்குவதற்கு காரணமாகவும், அவரது திரைப்பட வரலாற்றின் சாதனைக்குத் பிள்ளையார் சுழித் தொடக்கமாகவும் அமைந்த படங்களில் முக்கியமானது. 

இளையராஜாவின் தனிப்பாடல்களில் சோகத்தை வெளிப்படுத்திடும் வகையில் தன்னியல்பாக நடித்து அந்தக் கதாபாத்திரத்திற்கும் பாடலுக்கும் உயிரூட்டியிருந்தார் ரஜினிகாந்த். பஞ்சு அருணாசலத்தின் நுணுக்கமான வசனங்களைத் தெளிவாகப் பேசி கைத்தட்டல்களைப் பெற்றிருந்தார்.. குறிப்பாக சம்பத் நீ கல்லுளிமங்கன், கடப்பாரையை முழுங்கிட்டு அது ஜீரணமாகச் சுக்குக்காபியை குடிக்கிறவன், நீ முழுங்கின கடப்பாரை ஒண்ணா, இரண்டா அது எப்படிப்பா ஜீரணமாகும்..., எனக்கு அபிலாசைகளும் இல்லை, ஆசைகளும் இல்லை... பாசத்திற்கும் உணர்ச்சிக்கும் ஆசைப்பட்ட சாதாரண மனுசன் நான், இந்தத் திரைச்சீலையைத் தாண்டி உன்னைத் தொட என்னால முடியல... அந்தளவிற்கு பாசத்திற்கு கட்டுப்பட்டவன்... ஆசைக்கு அடிமையானவன் இல்ல, எண்ணெய் இல்லாம அணையற விளக்கில எண்ணெய் ஊத்துனா விளக்கு எரியும்... ஆனா நான் திரியே இல்லாத விளக்கு... போன்ற வசனங்கள் அவரது புதுவகை உச்சரிப்பில் புதிய அர்த்தங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. 

சிவகுமாருக்கு இணையாக நடித்து சிவகுமாரை விடவும் நன்றாக நடித்துள்ளாரே யார் அவர் என்கிற பலரின் வியப்பையும் பெற்றவர் அந்நாளைய ரஜினிகாந்த்.  சாதாரண நடிகராகத் திரையில் தோன்றி தனக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வெற்றிக்கொடியை நாட்டத் தொடங்கியதற்கு அச்சாரமான திரைப்படம் புவனா ஒரு கேள்விக்குறி. வில்லன் நடிகராக திரையில் மிளிர்ந்த ரஜினிகாந்த தனிக் கதாபாத்திரத்திலும் நடித்திட முடியும் என்பதை நிருபித்த திரைப்படம் அது. அந்தத் திரைப்படத்தில் தனது திறமையை உலகுக்கு வெளிச்சம் காட்டிய எஸ்.பி.முத்துராமனை தனது வாழ்நாள் இயக்குநராகக் கொண்டாடினார். அதே எஸ்.பி.முத்துராமன் தான் ரஜினிகாந்தின் ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், பாண்டியன் போன்ற 25 திரைப்படங்களுக்கு இயக்குநராக பணியாற்றினார். புவனா ஒரு கேள்விக்குறிக்குப் பிறகு தனது திரைப்பட வாழ்வின் பாதையைச் சீராகவும், நேர்ப்படவும் அமைத்துக் கொண்ட ரஜினிக்கு நல்ல திரைப்படங்களே அமைந்தன. 

பாலிவுட்டில் அமிதாப் பச்சனைக் கோபக்கார இளைஞராகப் பாவித்து அநீதியைக் கண்டு பொங்கியெழுந்து அதற்கு எதிராகப் போராடி வெற்றி பெறுவதைப் போன்ற கதாபாத்திரங்களை அமைத்தனர். தமிழ் உலகின் கோபக்கார இளைஞராக அநீதியைக் கண்டு பொங்கியெழும் கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்து, தனது ஸ்டைல் ஆசான் சத்ருகன் சின்காவின் தனித்தன்மையைத் தனக்கானதாக்கிக் கொண்டு அந்த ஸ்டைலில் புதுவித நளினத்தைப் புகுத்தி, தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக ஒளிர்ந்தார் ரஜினிகாந்த். அமிதாப் பச்சனின் இந்தித் திரைப்படங்களை ரஜினிகாந்த் தனக்கானத் திரைப்படங்களாகக் கருதி அதனை மொழிமாற்றம் செய்து கோபக்கார இளைஞராக மக்கள் நடிகராக மனதில் இடம் பிடித்தார். சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன் போன்றவர்களுடன் தமிழ், இந்திப் படங்களில் நடித்து தனது திரைப்பட அந்தஸ்தை இந்தியாவின் நடிகராக உயர்த்திக் கொண்டார். 

இவரது வாழ்வின் முக்கியத் திரைப்படங்களான அன்னை ஒரு ஆலயம், தம்பிக்கு எந்த ஊரு, புதுக்கவிதை, நெற்றிக்கண், தர்மயுத்தம், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, முத்து உள்ளிட்ட திரைப்படங்கள் ரஜினிக்காகவே வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஓடி அவரின் புகழை ஜப்பான் வரை கொண்டு சேர்த்தது. ஜப்பானிலும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தினார் ரஜினி. தனது முன்னேற்றத்திற்கு காரணம் பக்திதான் என்பதை உணர்ந்து தனது 100 வது படமாக ராகவேந்திரர் படத்தை எடுத்து அதில் ராகவேந்திராக நடித்திருந்தார். தனது நடிப்புத்திறமையின் அடுத்தக்கட்டமாக மணிரத்னத்தின் தளபதி, ஷங்கரின் சிவாஜி, எந்திரன், அடுத்தத் தலைமுறை இயக்குநர்கள் ரஞ்சித்தின் கபாலி, காலா, கார்த்திக் சுப்புராஜின் பேட்ட, முருகதாஸின் தர்பார் போன்ற திரைப்படங்களில் நடித்து மேம்படுத்தி ரசிகர்களின் கொண்டாட்ட நடிகராக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார். 

1975ல் அறிமுகமாகி இதுவரை 160 திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த் தனது 45 ஆண்டு கால திரைப்பட வரலாற்றில் பல்வேறு விருதுகளைப் பெற்ற போதிலும் மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகளையும், 50 ஆண்டு காலத் திரைப்பட வரலாற்றில் சிறந்த நடிகருக்கான விருதும் முக்கியமான விருதுகளாகக் கருதப்படுகின்றன. அபூர்வ ராகங்களில் சாதாரண நடிகராகக் கதவு திறந்த ரஜினிகாந்த், தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தன்னாலும் நடிக்க முயலும் என்று நிரூபித்த புவனா ஒரு கேள்விக்குறி தமிழ்த் திரைப்படம் வெளிவந்த செப்டம்பர் 2ம் தேதி ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றின் முக்கிய நாள். அந்த நாள் ரஜினிகாந்திற்கும் சிறப்பான நாள். அந்த நாளை நினைவூட்டும் இந்தக் கட்டுரை ரஜினிகாந்திற்கும், ரஜினிகாந்தின் இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் சமர்ப்பணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com