விஜய் 29: ரஜினி சொன்ன விஜய்யின் காலம் - ஏன் ?

நடிகர் விஜய் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி 29 வருடங்கள் ஆவதையொட்டி சிறப்புப் பதிவு 
விஜய் 29: ரஜினி சொன்ன விஜய்யின் காலம் - ஏன் ?

நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த நாளைய தீர்ப்பு வெளியாகி 29 ஆண்டுகள் ஆகின்றன. அதாவது, இன்றைய தளபதியான விஜய், சாதாரண நடிகராகத்  திரையுலகில் அடியெடுத்துவைத்து இன்றுடன் 29 ஆண்டுகள். இதையொட்டி, 29 இயர்ஸ் ஆஃப் தளபதி என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் டிரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர். 

நடிகர் விஜய்யை பற்றி சொல்லும்போது, முதலில் அவரது முக அமைப்பு விமர்சிக்கப்பட்டது எனவும், அதைக் கடந்து அவர் தனது திறமையால்  சாதித்து எவ்வாறு உச்ச நட்சத்திரமாக மாறினார் என்பது போன்ற கட்டுரைகளை விஜய்யின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் காணலாம்.

பிரபல இயக்குநரான எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் விஜய். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் நடிகராவதற்கும் திரைத் துறையிலிருந்து நடிகராவதற்கும்  நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. விஜய்யின் துவக்க கால படங்களை அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கினார். முதல் படமான 'நாளைய தீர்ப்பு' தோல்வி. அந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் தோற்றமும் நடிப்பும் பெரும் விமர்சனத்துக்குள்ளாகின. 

இந்த இடத்தில்தான் விஜய்யின் அப்பா ஒரு முக்கிய முடிவெடுக்கிறார்.  அப்போதைய முன்னணி நடிகர் நடிகர் விஜயகாந்த் மூலம் தன் மகனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் அவர் மனதில் உதிக்கிறது.  நடிகர் விஜயகாந்த்தை வைத்து அப்போது அதிக வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இதன் காரணமாக எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டதும், நடிகர் விஜய்யுடன் நடிக்க விஜயகாந்த் ஒப்புக்கொண்டார். செந்தூரப் பாண்டி என்ற அந்தப் படத்தின்  வெற்றியினால் விஜய்க்கு மக்களிடம் பெரும் அங்கீகாரம் கிடைத்தது.

வாரிசு நடிகர்களாக ஏராளமானோர் திரையுலகில் காலெடியெடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் விஜய்யின் அளவுக்கு வெற்றி கிடைத்ததா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான்  சொல்ல முடியும். 

திரைத் துறைகளில் பாடல் பாடுவது, நன்றாக நடனமாடுவது என தனது திறமைகளை மக்கள் மனதில் பதியும்படி பார்த்துக்கொண்டார் விஜய். 'இந்தப் பாடலை பாடியது உங்கள் விஜய்' எனப் பாடலுக்கு இடையில் வரும் அறிவிப்பை துவக்க கால படங்களில் பார்த்திருக்கலாம். 

அவரது வெற்றியில் ரீமேக் படங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என ஒரு விமர்சனம் உண்டு. 'காதலுக்கு மரியாதை', 'நினைத்தேன் வந்தாய்', 'பிரெண்ட்ஸ்', 'கில்லி', 'போக்கிரி' போன்று அவருக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த படங்கள் ரீமேக் படங்கள். மறுப்பதற்கில்லை.

ஆனால், அவர் நடிப்பில் வெளியான 66 படங்களில் ரீமேக் படங்களை மட்டும் கணக்கிட்டால் 10-க்கும் குறைவாகத்தான் இருக்கும். 'நண்பன்' படத்துக்கு பிறகு அவர் எந்த ரீமேக் படங்களிலும் நடிக்கவில்லை. அதேநேரத்தில் 'பூவே உனக்காக', 'ஒன்ஸ்மோர்', 'குஷி', 'திருப்பாச்சி', 'துப்பாக்கி', 'கத்தி' போன்ற அவருடைய படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. 

ஒரு படத்தை ஒப்புக்கொண்டால் முழு மனதுடன் அந்தப் படத்தில் நடித்துக்கொடுப்பது, காதல் கிசுகிசு போன்ற எந்த விஷயங்களிலும் சிக்காதது  எனத் தனது பெயருக்குப் பாதிப்பு ஏற்படாதது போல் பார்த்துக்கொண்டார். 

எப்பொழுதும் ஓர் இயக்குநரின் நடிகராகவே தன்னைக் காட்டிக்கொண்டார். சில படங்களில் அவர் நன்றாக இருப்பதற்கும், ஒரு சில படங்களில் அவரது நடிப்பு மோசமாக இருப்பதற்கும் அவர் இயக்குநர்களின் நடிகர் என்பதே காரணம். நல்ல நடிகர்கள் எனப் பெயரெடுத்த ஒருசிலர் எல்லா படங்களில் ஒரே மாதிரியாகவே நடிப்பையே வெளிப்படுத்துவர். ஆனால் விஜய் தன்னை இயக்குநர்களிடம் முழுவதுமாக ஒப்படைத்துவிடுவார். 

பெரும்பாலும் காதல் படங்களிலேயே நடித்து வந்தார். ஒருகட்டத்தில் இது அவரது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. விளைவு, தொடர் தோல்விகள். அந்த நேரத்தில் தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டு ஆக்சன் படமான 'திருமலை'யில் நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்று அவரை ஒரு கமர்ஷியல் நடிகராக உருவெடுக்க உதவியது. அதைத் தொடர்ந்து கமர்ஷியல் படங்களிலேயே நடித்தார். அவரது படங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக் கூடிய அம்சங்கள் தவறாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். 

இடையில் வித்தியாசமாக இருக்கட்டுமே என அவர் நடித்த 'சச்சின்', 'அழகிய தமிழ் மகன்' படங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. அதனால்  தொடர்ந்து அனைத்து அம்சங்களும் நிறைந்த மசாலா படங்களில் நடித்தார். அதுவும் ஒருகட்டத்தில் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்த தொடர் தோல்விகள்.  அந்த நேரத்தில் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். விஜய் நகைச்சுவைகள் என்பது அப்பொழுது மிக பிரபலம். 

அந்த தொடர் தோல்வியில் இருந்து மீண்டுவர 'காவலன்', 'வேலாயுதம்',  'நண்பன்' போன்ற படங்கள் உதவின. அந்தநேரத்தில் வெளியான 'துப்பாக்கி'  பெரும் வெற்றி பெற்று அவரை மீண்டும் முன்னணி நடிகராக உயர்த்தியது. அதிலிருந்து அவரது வளர்ச்சி மேல் நோக்கிதான் சென்று கொண்டிருக்கின்றன. இடையில் ஒரு சில படங்கலள் தோல்வியைடந்தாலும் அது அவரது வளர்ச்சியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. இளைய தளபதியாக இருந்தவர் தளபதியாகியிருக்கிறார். 

ஒரு மேடையில் ரஜினிகாந்த் இப்படி பேசினார்-

''நானும் நடிகர் சிவாஜி கணேசனும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள விமானத்தில் சென்றோம். விமான நிலையத்தில் நடிகர் சிவாஜி கணேசன் இருக்கும்போது ரசிகர்கள்  எனக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். எனக்குத் தயக்கமாக இருந்தது.

அப்போது நடிகர் சிவாஜி கணேசன், ''நீ போடா. இது உன் காலம்'' என்றார். காலம் மாறியது. நான் கோயம்புத்தூருக்கு ஒருமுறை சென்றேன். விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள். அப்போது பிரபல நடிகர் ஒருவர் வருகிறார். அவரது ரசிகர்கள் அவரை வரவேற்கக் குவிந்துள்ளனர். அதனால் நீங்கள் காத்திருந்து செல்லுங்கள்  என்றனர். எனக்கு அப்போது சிவாஜி கணேசன் சொன்னது புரிந்தது. நான்  மனதுக்குள் சொல்லிக்கொண்டேன் இப்போது அந்த நடிகரின் காலம் என்று".

ஆனால், அந்தப் பிரபல நடிகர் யாரென்று ரஜினிகாந்த் சொல்லவில்லை.

ஒருவேளை இப்பொழுது ரஜினிகாந்த் பேசியிருந்தால், அது விஜய்யின் காலம்  என்று சொல்லியிருக்கலாம். அந்த அளவுக்கு நடிகர் விஜய்க்கு ரசிகர் பலம் இருக்கிறது. வெற்றியும் தொடர்கிறது, விஜய் 29!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com