/

உள்ளிருந்து கொல்லும் காதல்... இயக்குநர் பாலாவின் சேது!

இயக்குநர் பாலாவின் பிறந்த நாளில் அவர் இயக்கிய முதல் திரைப்படமான சேது குறித்து...

News image

சேது படத்தின் காட்சிகள் - படங்கள்: அமேசான் பிரைம்

Updated On :11 ஜூலை 2026, 12:35 pm IST

”மனம் என்பது ஒரு பனிப்பாறை போன்றது; அதன் ஏழில் ஒரு பங்குதான் நீருக்கு மேலே தெரிகிறது, மீதி எல்லாம் ஆழத்தில் மறைந்து கிடக்கின்றது” - சிக்மண்ட் பிராய்டு (கனவுகளின் விளக்கம் நூலில் இருந்து)

முதல் படம் எடுத்து முடித்து கிட்டத்தட்ட 100 நாள்கள் வரை ப்ரிவ்யூ ஷோக்களில் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை நம்பி வாங்க எந்தவொரு விநியோகஸ்தர்களும் முன்வரவில்லை. பின்னர், ஒரே ஒரு திரையரங்கில் மதிய காட்சி மட்டுமே திரையிடப்படுகிறது. பின்னர் யாரோ ஒரு மருத்துவர் இந்தப் படத்தை வாங்கி சென்னை செங்கல்பட்டு ஏரியாக்களில் வெளியிடுகிறார் (இதில் கருணாஸ்தான் மறைமுகமாக போராடியிருக்கிறார்). பின்னர், அந்தப் படம் மிகப்பெரிய ஹிட் அடித்து அதில் நடித்த நடிகருக்கு தேசிய விருதும் கிடைக்கிறது. பிறகு தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படம்தான் விக்ரம் நடித்த சேது. இயக்குநராக பாலாவின் முதல் திரைப்படம். தனது முதல் படத்திலேயே பல போராட்டங்களைத் தாண்டி தனித்துவமான முத்திரையைப் பதித்தவர்.

பாலுமகேந்திராவின் உதவியாளர் என்றதுமே மென்மையான கதைகளை சூரிய வெளிச்சத்தில் குறைவான லைட்டிங் உடன் படம் எடுக்கும் நபரென பலரும் நினைத்திருந்தார்கள்.‌ நிஜ வாழ்க்கையில் தன்னால் செய்ய முடியாத ஒன்றை திரையில் நிகழ்த்திக் காட்ட விரும்புவதாகக் கூறும் பாலாவின் எல்லா படத்திலும் நாயகனுக்கு ஒரேயொரு குறிக்கோள்தான் - கண் முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பது. அதற்கு அவர் தனது நாயகன்களை பொது சமூகத்தில் இருந்து வித்தியாசமானவராக காட்டுகிறார். அது மூடனாகவோ முரடனாகவோ பைத்தியமாகவோ திருநங்கையாகவோ ஏதோ ஒன்று இதுவரை பொது சமூகத்தில் இருந்து விலகி இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை முதன்மையானதாக உருவாக்குகிறார்.

சேது படத்தில் கல்லூரியில் ரௌடியாக சுற்றும் இளைஞனைத் தேர்வு செய்கிறார். எங்கோ நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்டதன் விளைவாக தான் பெரிதும் விரும்பிய காதல் கைகூடி ஒரு ஐந்து நிமிடங்கள்கூட நிம்மதியாக இருக்க முடியாமல் 'அடிவாங்கி' மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். வழக்கமாக நாயகன் என்றாலே எத்தனை பேர் வந்தாலும் அடிப்பதுதான் இன்றைய படங்களும் செய்கின்றன. அடிதடி நம் உயிரைக்கூட இழக்க வைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

சேது படத்தில் நாயகன் நண்பர்களோடு ஜாலியாக சுற்றி அடிதடி செய்து வருகிறார். காதல் வந்ததும் எல்லாம் மாறுகிறது. சிலரைப் பார்த்திருப்போம் காதல் வந்ததும் நடை, உடை, முடி என எல்லாவற்றிலும் அலங்காரம் கூடும்; டோபமைன் அதிகமாக சுரக்கும். காதல் தன் வேலையைக் காட்டும் - மாலையில் வேதனையைக் கூட்டும். உண்மைதானே!

காதல் தோல்வியினால் பலரும் தற்கொலை செய்தோ அல்லது ஆணவ கொலை செய்யப்பட்டோ இறந்துவிடுவதைப் பார்த்து வருகிறோம். சேது படத்தில் காதல் நிறைவேறி இறந்துவிடும் சூழ்நிலை உருவாகும். தனக்காக நாயகன் எவ்வளவு பெரிய வலியை அனுபவிக்கிறான் என்பதை உணர்ந்து வேறு யாரையும் திருமணம் செய்ய மனமில்லாமல் இறந்துவிடுகிறாள் நாயகி. சரி நாயகன் ஏன் இறக்கவில்லை? இறப்பை விடவும் கொடியது நடைப்பிணமாக வாழ்வது. சேது அதைத்தான் தேர்வு செய்கிறான். இன்றும் சென்னை போன்ற பெரு நகரங்களில் பலரும் இப்படி அலைவதைப் பார்க்க முடிகிறது!

எங்கு அநீதி நடந்தாலும் தட்டிக் கேட்கும் நாயகன் தனது காதலியின் உயிரைக்கூட காப்பாற்ற முடியாத சூழ்நிலை உருவாகிறது. இந்தக் கையாலாகாத தனம், சட்டம், சூழ்நிலை என்று பலவிதமான காரணங்களால் நிகழ்ந்தேறுகிறது. யாரென்றே தெரியாத ஒருவருக்கு உதவும் நாயகன் தனக்கும் காதலிக்கும் உதவமுடியவில்லை என்ற எதார்த்தம் மிகப் பெரிய வலியைத் தருகிறது. சேது திரைப்படம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய படமல்ல; ஆனால், நிச்சயமாக மனநலம் ஏன் பாதிக்கிறது என்று அலசிய படமாகச் சொல்லலாம்!

பொதுவாகவே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எதார்த்தத்தில் இருந்து விலகி வேறு ஒரு உலகில் தங்கள் மனதுக்குள் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அது மூளையின் விந்தையான ஒரு செயல்பாடு. மருத்துவம் எவ்வளவு வளர்ந்தும் மூளையின் செயல்பாட்டை விளக்க, தீர்வு காண முடிந்ததில்லை. மன நோய்க்கு மருந்தில்லைதானே!

ஒருவர் எதற்கு தற்கொலை செய்கிறார் என்று காரணம் கேட்டால் நமக்கு மிகவும் சாதாரணமாக இருக்கலாம்; ஆனால், அது அவர்களது உலகில் மிகப் பெரிய பாறாங்கல்லாகக்கூட இருக்கும். பலவீனமானவர்களே விரைவில் தற்கொலை எண்ணங்களுக்கு ஆளாகிறார்கள். இழப்பை, தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். இதில் வரும் சாதுவான நாயகியைப் போல நம் வாழ்வில் பலரையும் பார்த்திருப்போம்.

எளிதாக மனிதர்களின் மனங்களை மதிப்பீடு செய்ய முடியாது. இந்தப் படத்தில் இருந்து அப்படி எதைக் கற்றாய்? என்ன நடந்தாலும் மனதை இழக்கக் கூடாது, வாழ்க்கை இப்படிதான் ஈவு இரக்கமற்றதாக இருக்கும். படத்தில் நாயகியிடம் நாயகன் பாழடைந்த பங்களாவில் பேசும்போது "ஏதோ ஒன்னு உள்ள இருந்து கொல்லுதடி" என்பார். சேதுவுக்கு உள்ளிருந்து கொன்ற காதல்போல ஒவ்வொருவருக்கும் ஏதோவொன்று கொல்லும் - அது பதவி, புகழ், பொறாமை, பொன், பொருள், பயம், இழப்பு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

சம்பிரதாயமான ஒன்றாக இதைச் சொல்லியாக வேண்டும். நடிகர் விக்ரம் இந்தப் படத்தில் அழகாகவும் மோசமாகவும் தன்னைக் காட்ட கடுமையாக உழைத்திருக்கிறார். 20 கிலோ எடையைக் குறைத்துப் படப்பிடிப்பில் காதடைத்து போய் நடித்திருக்கிறார். முதல்முறையாக நாயகியைப் பார்க்கும்போது அவரது கண்கள் நாயகியையே பார்த்துக்கொண்டு இருக்கும். பின்னர் வகுப்பறையில் திருக்குறள் விளக்கம் வரும்போதுதான் நாயகன் அப்படி எதைப் பார்த்தான் என்ற காட்சிகள் வரும். அந்த இடத்திலும் நாயகியிடம் காதலைச் சொல்லும் இடத்திலும் மனநலம் பாதிக்கப்பட்ட இடத்திலும் நன்றாக நடித்திருப்பார்.

காதல் வேகத்தையும் சோகத்தையும் இளையராஜா தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தனியாக ஒரு திரைக் கதையை நிகழ்த்திக் கொண்டிருப்பார். ஒளிப்பதிவிலும் இரண்டாம் பாதியில் அதீத பச்சை நிற ஒளியினால் நிரப்பப்பட்டிருக்கும். இது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவுக்கும் சிறப்பைக் காட்டும்.

இயக்குநர் பாலா - அந்திமாலைப் பொழுதில் சண்டைக் காட்சிகளை எடுத்திருக்கும் நுட்பம் பாலுமகேந்திரா பட்டறை என்பதால் மட்டுமே அல்ல; அது ஏதோவொரு திருப்பத்தைக் காட்டுவதாக தெரிகிறது. கடுகடுப்பான அண்ணன், தாயைப் போல ஓர் அண்ணி. வில்லன் என அழைக்கும் அண்ணன் மகள், சியான் என்று அழைக்கும் நண்பர்கள். அண்ணா - அண்ணியுடன் நாயகனின் நண்பருக்கு வரும் உரையாடல்கள் புதியதாக இருக்கும். கல்லூரியில் இவர்களுடன் எப்போதும் சுற்றும் ஒரு மனநலம் குன்றிய பெண். இதெல்லாம் பாலாவின் தனித்துவமான கதாபாத்திரங்கள்.

கடவுளால் காப்பாற்ற முடியாத பல சிக்கல்களையும் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் பாலா பேசி இருக்கிறார். எப்படி இருந்தாலும் காதலில் இந்த கலகக்காரத்தனம் அப்போது எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டு, படமாக வெளியே வந்தது என்று இப்போதும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இன்னும் பல நல்ல படைப்புகளை உருவாக்க கலகக்காரன் பாலாவுக்கு வாழ்த்துகள்!

[ஜூலை 11 - இயக்குநர் பாலா பிறந்த நாள்]

Summary

Love that kills from within... Director Bala's Sethu for his birthday special

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.