/

இயக்குநர் பாலா படங்களில் வன்முறைகளில் மறைந்த நகைச்சுவைகள்!

இயக்குநர் பாலா பிறந்த நாள்... தன்னுடைய திரைப்படங்களில் அடுத்தடுத்த வன்முறைக் காட்சிகளால் இயக்குநர் பாலா இழந்தவை குறித்து...

News image

இயக்குநர் பாலா - DNS

Updated On :11 ஜூலை 2026, 12:56 pm IST

நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்களுக்கு இணையாக நட்சத்திர இயக்குநர் அந்தஸ்து பெற்றவர்தான் இயக்குநர் பாலா. ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் என்ற தமிழ் சினிமா இயக்குநர்களின் வரிசையில் தனது முதல் 4 படங்கள் மூலமே இடம் பெற்றவர் இவர்.

தமிழ் சினிமாவை பாரதிராஜாவுக்கு முன், பாரதிராஜாவுக்குப் பின் எனப் பிரிக்கலாம். தமிழ் சினிமாவில் பாலாவுக்கெனத் தனித்ததோர் அடையாளம் இருக்கிறது.

பல வெற்றி இயக்குநர்கள் இருந்தாலும், கலைப் படைப்பை வணிக வெற்றிப் படங்களுக்கு சற்றும் சளைக்காமல் கொடுத்ததால் பாரதிராஜாவுக்குப் பிறகு இயக்குநர் பாலாவுக்கே அந்த இடம் சாத்தியமானது.

அந்தக் காலகட்டத்தில் தொடர் தோல்விகளால் துவண்டுபோய், டப்பிங் கலைஞராக மாறிவிட்டிருந்த விக்ரமை வைத்து சேது படத்தை எடுத்து பெரும் வெற்றி கொடுத்து, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பாலு மகேந்திராவின் சிஷ்யன், சேது படத்தின் இயக்குநர் என்ற இரு பெரும் பெயர்களால் அடுத்த படத்தில் பெரிய நடிகர்களே நடிக்க இருந்தபோதும்கூட, ராசியில்லாத முத்திரை குத்தப்பட்டிருந்த சூர்யாவுக்கு நந்தா வாய்ப்பைக் கொடுத்து வெற்றி கண்டார்.

மூன்றாவதாக தனது இரு நாயகர்களையும் வைத்து பிதாமகன் எடுத்தார். அதிலும் விளிம்புநிலை மக்களின் எதார்த்த வாழ்வியலையே கதையாக எடுத்துக்கொண்டார். சுடுகாட்டில் படத்தைத் தொடங்கி சுடுகாட்டிலேயே முடித்திருப்பார்.

மனிதர்கள் தன் வாழ்வில் அதிக நேரம் இருக்காத, இருக்க விரும்பாத ஓர் இடத்தைக் கதையின் தொடக்கமாகவும் நாயகனின் இருப்பிடமாகவும் வைத்து வன்முறையில் சமரசமின்றிப் படத்தை இயக்கியிருப்பார். இதற்கு அசாத்திய தைரியம் வேண்டும் என அப்போது பலரால் பாலா பாராட்டப்பட்டார்.

இத்தனை படங்களுக்குப் பிறகும் இயக்குநர் பாலாவின் படங்களில் வன்முறைகள் குறையவில்லை.

அவர் தன் படங்களில் கையாளும் வன்முறையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்வதில்லை. இது ஒருபகுதி ரசிகர்களுக்கு ஒரு விதத்தில் சலிப்பையே ஏற்படுத்துகிறது என்பதை அவரின் அடுத்தடுத்த படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு சுட்டிக் காட்டியது.

பிதாமகன் படத்தில் டீ கடையில் நடக்கும் முதல் சண்டைக் காட்சியைத் தத்ரூபமாக படம் பிடித்ததாக பாலா பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். விக்ரம் உண்மையாகவே 4 பேருடன் சண்டை போட்டதுதான் அந்தக் காட்சி.

இயக்குநரின் சிந்தனையும் நடிகர்களின் மெனக்கெடலும் அக்காட்சியை இன்று வரையில் தத்ரூப சண்டைக் காட்சிக்கான, வளரும் இயக்குநர்களுக்கான பாடமாகவே மாற்றியுள்ளது.

இதே மாதிரி அவரின் அடுத்தடுத்த படங்களிலும் சண்டைக் காட்சிகள், வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றன. நான் கடவுள் படம் காசி நிலப்பரப்பையும் சாதுக்களின் வாழ்வியலையும் காட்டியதால் தப்பியது. இருந்தாலும், ஆன்மிக தலங்களில் யாசகம் பெறும் மாற்றுத்திறனாளிகளின் எதார்த்தத்தைக் காட்டி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். அது வேறு வகையில் பலரைப் பாதித்தது.

தான் ஒரு நாத்திகன் என்பதை சில இயக்குநர்களைப்போல வெறும் வசனங்களால் நிரப்பிச் செல்லாமல், காட்சிகளில் அதுவும் எதார்த்தம் மாறாத சூழலில் இருந்து காட்சிப்படுத்தியிருப்பார்.

ஏன் விளிம்புநிலை மக்களையே படத்தின் முதன்மை பாத்திரங்களாக தேர்வு செய்கிறீர்கள் என்று ஒருமுறை அவரிடம் கேட்டதற்கு, ''மனிதர்கள் நல்ல உடை அணிந்து நேர்த்தியாக இருப்பதால், அவர்கள் மேம்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. சிந்தனை அளவில் நாம் அனைவருமே விளிம்புநிலை மனிதர்கள்தான்'' என்கிறார். விளிம்புநிலை மனிதர்கள் என்ற ஒன்று இல்லை. அவர்களை வைத்து கதை எழுதுவது எளிதாக இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்.

ஆனால், அவர் கையாளும் வன்முறை பாணியிலான கதை சொல்லல், அவன் - இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் என அடுத்தடுத்த படங்களில் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. கதையில் பேசப்படும் பிரச்னைகள் வேறுவேறாக இருந்தாலும் கையாண்ட வழிமுறை ஒன்றாகவே இருந்தது.

இயக்குநர் பாலுமகேந்திராவிடம் இருந்து இயக்குநரான வெற்றிமாறனும் வன்முறைசார் படங்களை எடுத்தாலும், தனது அடுத்தடுத்த படங்களை வரிசைப்படுத்துவதில் அவர் கவனமாகச் செயல்படுகிறார். இந்த இடத்தில் சற்றும் சமரசம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் பாலா. இதுவே பலமும் பலவீனமுமாக ஆகிவிடுகிறது.

''நீ 10 - 15 படம்தான் எடுக்கிறாய். ரசிகன் என்பவன் நூற்றுக்கணக்கான படங்களைப் பார்க்கிறார். உன்னைவிட அவனுக்குத்தான் அறிவு அதிகம்'' என பாலுமகேந்திரா அடிக்கடி கூறுவதாக பாலா குறிப்பிடுவதுண்டு. ரசிகனை முட்டாளாக்காமல் படம் எடுக்க வேண்டும் என நினைக்கும் பாலா, தொடர் வன்முறை ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் விளைவு, பாலா படங்களில் இருக்கும் நகைச்சுவைக் காட்சிகள் பலரால் கண்டுகொள்ளப்படாமல்போவதுதான். படத்தின் பெயரைக் கூறினாலே வன்முறைக் காட்சிகள் மேலோங்கிவிடுவதால், அவர் படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் கவனம் பெறாமல் போய்விடுகின்றன. பிதாமகன் அதற்கு சிறந்த உதாரணம். கதையோடு ஒன்றிய நகைச்சுவைக் காட்சிகள் பலவும் இன்றளவும் ரசிக்கும்படியானவை.

இதேபோன்று நான் கடவுள் போன்ற தீவிரமான மாற்று சினிமா படத்திலும் மாற்றுத்திறனாளிகள் கேலியாகப் பேசிக்கொள்ளும் காட்சிகளைக் கூறலாம். நடிகர்களை, கடவுள்களை விமர்சிப்பதாக மட்டும் இல்லாமல் நகைச்சுவை சேர்ந்தே காட்சிகளை வைத்திருப்பார். அவன் - இவன் படத்திற்கும் இதே நிலைதான்.

நகைச்சுவை நடிகர்கள் எனத் தனியாக இல்லாமல், கதை மாந்தர்களே அதனைச் செய்வதாலும் வன்முறை அதிகமாக இடம்பெறுவதாலும், பாலாவுக்குள் இருக்கும் நகைச்சுவைத் திறன் அங்கீகரிக்கப்படாமலேயே போய்விடுகிறது.

2009 ஆம் ஆண்டு வெளியான வில்லு, படிக்காதவன், சிவா மனசுல சக்தி, வெண்ணிலா கபடிக் குழு என எல்லா வெற்றிப் படங்களிலும் தோல்விப் படங்களிலும் காதல் முக்கியமானதாக இடம்பெற்றிருந்தது.

ஆனால், அந்த ஆண்டு வெளியான நான் கடவுள் படத்தில் காதலே இருக்காது. ஒரு காதல் காட்சிகூட இல்லாமல் முழு நீளப் படத்தை எடுத்து முடித்திருப்பார். ''இவை எல்லாம் கவனிக்கப்படாமலேயே போனது கொஞ்சம் வருத்தம்தான்'' என பாலாவே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

நான் கடவுள் படத்துக்கு தேசிய விருது கிடைத்திருந்தாலும், தனது பணி மற்றவரால் கவனிக்கப்பட்டுப் பாராட்டப்படுவதையே பெரிய அங்கீகாரமாக ஒரு கலைஞன் விரும்புவான். அந்தவகையில் பாலாவின் விருப்பம் இன்னும் நிறைவேறவில்லை என்றுதான் கூற வேண்டும்.

வேறு யாராவது வன்முறையான கிளைமேக்ஸ் காட்சியை வைத்திருந்தால்கூட, பாலா பட கிளைமேக்ஸ் மாதிரி என்று எளிதாகக் கூறிவிட்டுச் செல்வார்கள். அந்த அளவுக்கு பாலாவின் படம் இப்படிதான் இருக்கும் என ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. அவருக்கு பலமாக இருந்ததே பின்னாளில் அடுத்தடுத்து பலவீனமாகவும் மாறி வருவதை அவர் உணர வேண்டும் என்பதே அவரின் வெற்றியை விரும்பும் ரசிகர்களின் விருப்பம். மாற்று சினிமாவை வணிக சினிமாவாக மாற்றியவருக்கு, இதனை மாற்றிக்கொள்வது பெரிய விஷயம் இல்லை.

ஓர் இயக்குநருக்கு தனது உதவி இயக்குநர்கள் அடுத்தடுத்து படம் எடுத்து வெளியிடுவதில் பெரிய சுகம் கிடைக்கும். ஆனால், அமீர், சசிகுமார் தவிர வேறு யாரும் இன்னும் பாலாவிடம் இருந்து படம் செய்யவில்லை என்பது குறித்து அவரே வருத்தப்பட்டுள்ளார். ''என்னுடைய உதவி இயக்குநர்கள் இயக்குநர்களாக ஆக முடியவில்லை என்ற வருத்தம் இன்றும் எனக்கு உண்டு'' என நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் பாலா.

மெல்லிய உணர்வுகளைக் காட்சிப்படுத்துவதில் வல்லவர் பாலு மகேந்திரா. ஆனால், அந்த திறன் தனக்கு இல்லை என்றும் தன் குருநாதரின் வழி வேறு, தன்னுடைய வழி வேறு என பல இடங்களில் பாலா விளக்கியுள்ளார். இது பாலாவின் உதவி இயக்குநர்களுக்கும் பொருந்தும்.

பாலாவின் வழி வேறு, அவரின் உதவி இயக்குநர்களின் வழி வேறு என்பதை சினிமா தயாரிப்பாளர்கள் உணர வேண்டும். ஆனால், பாலாவின் பட்டறையில் இருந்து வந்த அமீர், சசிகுமார் படங்களிலும் பாலாவின் தாக்கம் இருப்பதாகத் தயாரிப்பாளர்கள் கருதுகிறார்களோ?

இந்த பிறந்த நாளுக்குப் பிறகாவது இந்த வன்முறைகளையெல்லாம் மொத்தமாகத் 'தூக்கிக் கெடாசிவிட்டு' செமையாக, முழுமையான ஒரு காதல் படத்தை அல்லது நகைச்சுவைப் படத்தைத் தாருங்கள் சார்!

[ஜூலை 11 - இயக்குநர் பாலா பிறந்த நாள்]

Summary

What Director Bala lost due to too much violence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.