/

மழையால் களையிழந்த மாட்டுப் பொங்கல் விழா: வீடுகளிலேயே முடங்கிய மக்கள்

நாளில் (வெள்ளிக்கிழமை) காலை முதலே கோவையில் சாரல் மழை பெய்து வந்ததால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினா்.

Updated On :15 ஜனவரி 2021, 5:52 pm

நாளில் (வெள்ளிக்கிழமை) காலை முதலே கோவையில் சாரல் மழை பெய்து வந்ததால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையின் முக்கிய தினம் மாட்டுப் பொங்கல். ஆண்டுதோறும் இந்த நாளில் விவசாயிகள், மக்கள் தாங்கள் வளா்க்கும் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, விளை நிலங்களில் பொங்கல் படையலிட்டு கொண்டாடுவது வழக்கம்.

கோவை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் வழக்கமாக மாட்டுப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து சாரல், மிதமான மழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் பாதிக்கப்பட்டது.

மேலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினா். விவசாயிகள், தங்களின் விளை நிலங்களில் மழையால் பொங்கல் வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவா்கள் வீடுகளிலேயே கால்நடைகளைக் குளிப்பாட்டி, பொங்கல் வைத்து வழிபட்டனா்.

வழக்கமாக பொங்கலை முன்னிட்டு கிராமங்களில் நடைபெறும் கோலப்போட்டி, உறியடித்தல், பொங்கல் வைக்கும் போட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பெரும்பாலான இடங்களில் நடைபெறவில்லை.

சுற்றுலாத் தலங்கள், சாலைகள் வெறிச்சோடின: தொடா் சாரல் மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தில் மக்கள் கூடும் இடங்களான கோயில்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்கள் கூட்டமின்றி காணப்பட்டன.

மாநகரச் சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் மிகக் குறைவாகவே இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.