எங்கள் வீட்டு வாத்தியார்

சுப்புரத்தினம் என்ற பாரதிதாசனை அடையாளம் கண்ட பாரதியார், ஸ்ரீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்புரத்தினம் எழுதியது எனத் தம்முன் பாடிய, எங்கெங்கு காணினும் சந்தியா என்ற
பாரதிதாசனின்  பேரன் கவிஞர் பாரதி
பாரதிதாசனின் பேரன் கவிஞர் பாரதி
Published on
Updated on
2 min read

சுப்புரத்தினம் என்ற பாரதிதாசனை அடையாளம் கண்ட பாரதியார், ஸ்ரீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்புரத்தினம் எழுதியது எனத் தம்முன் பாடிய, எங்கெங்கு காணினும் சந்தியா என்ற சுப்புரத்தினத்தின் பாடலை சுதேசிமித்திரன் இதழுக்கு அனுப்பிப் பரிந்துரைத்தார். அவர் விரும்பிய ஸ்ரீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் இதழ் அவர் மறைந்து 14 ஆண்டுகளுக்குப்பிறகு பாரதிதாசனால், 1935-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டது.

பாரதியின் சுதேசமித்திரன் இதழ் பணிகள், இந்தியா இதழ் பணிகள் தொடர முடியாமல் போகின. ஆனால், அவர் இதழ்களின் அதே உரம், நிறம், தரம், அறம் கொண்டு 11.9.1934 அன்று பாரதியார் நினைவு நாள் முதல் தினமணி இதழ் வந்துகொண்டிருக்கிறது.

தினமணி படிச்சிட்டியா... இது கேள்வியா?, கட்டாயமா? அறிவுரையா?....இது எனது நினைவு தெரிந்தநாள் முதல் என் தந்தையார் மன்னர் மன்னன் (கோபதி) என்னிடம் இந்த கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார். புதுச்சேரியில் நாளிதழ்கள் ஏதும் அச்சிட்டு வெளியாகாத அக்காலத்தில் சென்னையில் இருந்து பேருந்தில் வந்திறங்கும் பத்திரிகை கட்டுகள் குறிப்பிட்ட கடைகளுக்குப்போகும்..

அப்போது கட்சி சார்ந்த பத்திரிகைகள் வந்தபோதும், எந்த கட்சி என்று சாராத, ஆனால், தேசத்தை பற்றியும், தேசியத்தை பற்றியும் விவரிக்கும் தினமணி சில கைகளிலும், சில கடைகளிலும் இருந்தது. பாண்டிச்சேரி வானொலி நிலையம் தவிர தகவல், செய்திகள், கருத்துக்கள் வழங்கவும் பொழுதுபோக்குமான சாதனம் ஏதுமில்லை.

வானொலி நிகழ்ச்சிகளில் நாங்கள் மூழ்கியபோதும், அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு...நறுமலர் இதழ்ப் பெண்ணே என எனது பாட்டனார் (பாரதிதாசன்) பாடியதற்கு ஏற்ப எனது தந்தையார் கைகளில் இளங்காலைப் பொழுதில் எப்போதும் இருப்பது தினமணியே.

நானும் அவருடன் ஒட்டிக்கொண்டேன். தேடிப் பிடித்து வாங்கும் தரம் கொண்ட இதழாக இருந்தாலும் என் தந்தையார் வானொலி நிலைய எழுத்தாளர் என்பதால் எங்களுக்குத் தினமணி வீட்டுக்கே கிடைத்தது. எனது தந்தை உடல் நலிவுறுத்து முதுமையில் இருக்கும் இச்சூழலில் கூட, ஏதாவது சொல்லும்போது தினமணியில் கூட வந்திருக்கு எனத் தகவல் சொல்கிறேன்.

75 ஆண்டுகளுக்கும் மேலாக காலைப்பொழுதில் அப்பாவின் கைகளில் தவழ்ந்த தினமணி, எனது இளவயது முதல் இப்போதும் என்னோடு பயணிக்கிறது. வாத்தியார், பாவேந்தர், இதழியல் அறிஞர், சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர் என பாரதிதாசன் காலம் முதல் எங்கள் குடும்பத்துடன் இணைந்த தினமணி, மாணவர், கவிஞர், பேச்சாளர், தமிழறிஞர், சமுதாயப் போராளி, சீர்திருத்த அறிஞர் என எனது தந்தை மன்னர் மன்னன் காலத்திலும் தொடர்ந்து, இப்போது வரை என்னுடன் பயணிக்கிறது தினமணி.

என் அறிவுக்கு உரமூட்டி வெளிச்சப்பாதையை எனக்குக்காட்டும் ஞானக்கதிராய், மணியாய் என்னுடன் கலந்திருக்கும் தினமணி 50 ஆண்டுகள் எனக்கு வாத்தியார். அறிஞர் குடும்பத்துக்குள் ஓர் ஆன்றோர். ஆமாம் எங்கள் வீட்டு வாத்தியார். வீட்டுக்கு வரும் வாத்தியார். அடடே இன்றைக்கும் இளவயது முதல் இன்றும், பாரதியாரை மறக்காத தினமணியை, இந்த பாரதி மறப்பேனா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com