வற்றாத ஜீவநதி..!

தினமணி இதழின் ஆசிரியர்களாக இருந்த அத்தனை பேருக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒவ்வொருவரைப் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதலாம்.
நடிகர் சிவகுமார்
நடிகர் சிவகுமார்
Published on
Updated on
2 min read

தினமணி இதழின் ஆசிரியர்களாக இருந்த அத்தனை பேருக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒவ்வொருவரைப் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால், கி.வைத்தியநாதனைப் போல சுறுசுறுப்பாக இயங்குவதுடன், பல்துறை மேதைகளோடு நேரடியான பழக்கமும் நட்பும் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. அப்துல் கலாம் அவர்களிடமும் பால்ய சிநேகிதன் போல நெருக்கமாகப் பழகுவார். ஆடுமேய்க்கும் சிறுவனையும் அரவணைப்பார்.

இலக்கியங்ளை மட்டும் ரசிப்பவர் அல்ல அவர். கர்நாடக இசையையும் ரசிப்பார், கண்ணதாசன், வாலி கவிதைகளைப் பற்றியும் சிலாகித்துப் பேசுவார்.

என்னுடைய 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் ஓர் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தோம். ஓவியக் கலையின் பல்வேறு பரிமாணங்களும் வெளிப்படும் வகையில் நான் தீட்டியிருந்த 140 ஓவியங்கள் அரங்கில் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சிக்கு வந்த தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், சிவகுமாருக்குள் இப்படி பிரம்மாண்டமான ஒரு கலைஞன் ஒளிந்து கொண்டிருக்கிறானா என்று வியந்துபோய்ப் பேசினார். அதன் தாக்கம், நான் பிறந்த கொங்கு மண்ணான கோவை மாநகரில் தினமணி சார்பில் எனது ஓவியங்களை 5 நாள்கள் கண்காட்சியாக வைக்க அத்தனை ஏற்பாடுகளையும் செய்தார். கோவை, ஈரோடு, கரூர், சேலம், தாராபுரம் வரை தினமணியில் விளம்பரம் செய்து மக்களை கண்காட்சிக்கு வரவழைத்தார். தினமணிக்கும் ஆசிரியர் வைத்தியநாதனுக்கும் நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

2017- ஜனவரி மாதம் 27-ஆம் தேதி அதற்கு பிரதி உபகாரமாக, சென்னையில் மியூசிக் அகாதெமி அரங்கில் தினமணியின் சென்னை வாசகர்கள் கண்டு மகிழ டிஜிட்டல் திரையில் எனது கம்பன் என் காதலன்' என்ற ராமாயண உரையை திரையிட்டுக் காட்டினேன்.

இரண்டு மணி 10 நிமிடங்களில் ராமாயண காவியத்தில் வரும் அத்தனை முக்கிய சம்பவங்களையும் விவரித்து, 100 பாடல்களில் அடக்கி, உணர்ச்சிபூர்வமாக பேசிய உரை, பல பெரியவர்களை நெகிழச் செய்தது.

2009-இல் பேசிய அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழருவி மணியன், "8 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது பார்த்தாலும், இது அசுர சாதனையாகவே தெரிகிறது" என்றார்.

வைஜயந்திமாலா, சாரதா நம்பி ஆரூரன், வானதி சீனிவாசன், பாலகுமாரன் போன்று பலதுறை ஆளுமைகள் வந்திருந்தனர்.

தினமணி நாளிதழ் வற்றாத ஜீவநதியான கங்கையைப் போன்றது. அதன் பயணம் 100 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்துகொண்டே இருக்கும். வைத்தியநாதன் போன்ற கடும் உழைப்பாளிகள் ஒவ்வொரு காலத்திலும் பொறுப்பேற்று, அதன் பயணம் தடையின்றி நடைபெற துணை நிற்பார்கள் என்று இதயபூர்வமாக நம்புகிறேன்.

- நடிகர் சிவகுமாரின் டைரி குறிப்பிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com