எம்.ஜி.ஆர். - தினமணியில் வெளியான தலையங்கம்

நாடோடி மன்னன், புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல்- எந்த அடைமொழியும் எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தியையும் பெருமையையும் வெளிப்படுத்த முடியாது.
எம்ஜிஆர் - நடிகர் முதல் முதல்வர் வர்
எம்ஜிஆர் - நடிகர் முதல் முதல்வர் வர்

எம்.ஜி.ஆர்.

நாடோடி மன்னன், புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல்- எந்த அடைமொழியும் எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தியையும் பெருமையையும் வெளிப்படுத்த முடியாது.

அரை நூற்றாண்டு காலமாக தமிழக மக்களை சினிமா, அரசியல் இரண்டு வகையிலும் கட்டிப்போட்டு வைத்த இந்தப் பெயர் தமிழக சரித்திரத்தின் ஏடுகளில் நிரந்தரமாக இடம்பெற்றுவிட்டது.

இன்று சென்னையைப் பொருத்தவரை இது எம்.ஜி.ஆரின் திருநாளாக ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டு அதை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கும் வைபவம் நிகழவிருந்தது. லட்சக்கணக்கான எம்.ஜி.ஆர். ரசிகர்களும் அவரது கட்சித் தொண்டர்களும் இவ்வைபவத்தைக் காண தொலைதூரங்களிலிருந்து வந்து குழுமிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் காணக் கொடுத்து வைத்தது எம்.ஜி.ஆரின் பூத உடலைத்தான்; இறுதி யாத்திரையில் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்த முடிந்ததே என்று ஆறுதல் பெற வேண்டும்.

சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆரின் சாதனைகள் நிகரற்றவை. சினிமாவுக்கு ஒரு புதிய அர்த்தத்தையும் கொள்கையையும் வகுத்துக் கொடுத்தவர் அவர். நல்லவனுக்கு நல்லவனாக, பொல்லாதவனுக்கு பொல்லாதவனாக, ஏழைப் பங்காளனாக, வீரதீர சாகச புருஷனாக திரைவானில் வெற்றிக்குமேல் வெற்றியாகக் குவித்தார். அதுவே, அவரை மக்களின் இதயக்கனியாக்கியது. வாரிவாரி வழங்கினார். உண்மையிலேயே கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் அவருடையது.

திராவிட இயக்கம் அவரை வளர்த்தது. அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது. அண்ணாவின் உண்மைத் தொண்டனாக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். கடைசி வரை அண்ணாவின் கொள்கை வழியே நடக்க முயன்று வந்தார்.

மதிய உணவுத் திட்டமும், ஏழைகளுக்கான பல இலவசத் திட்டங்களும் அவரது ஆட்சியின் தனிச் சிறப்பான அம்சங்கள். கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு நிலையான ஆட்சியை அவரால் தர முடிந்தது. அதுவே ஒரு பெரிய சாதனை.

அவருடைய தற்காப்பு உணர்வு வியக்கத்தக்கது. தில்லி ஆட்சியை எதிர்த்துக் கொண்டு நிலை பெற முடியாது என்பதை அவர் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டு தனது வெற்றிகளை பிரதமர்களின் வெற்றிகளோடு இணைத்துக் கொண்டார். தமிழுக்கும் தமிழினத்திற்கும் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகளைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. இலங்கைத் தமழர்களின் பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் உண்மையிலேயே அவரால் முடிந்தவரை பாடுபட்டார். அவை பலனளிக்காமல் போனது எம்.ஜி.ஆரின் குற்றமல்ல.

தமிழ்நாட்டில் தமிழை அரியாசனத்தில் ஏற்றி வைத்து தமிழ்மொழி தொடர்பான அனைத்து முயற்சிகளுக்குமே ஆதரவும் ஊக்கமும் தந்து வந்தார்.

மூன்றாண்டு காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காலனுடன் போராடி வந்தார். ஆனால், வியக்கத்தக்க மனத்திட்பத்துடன் கடைசி மூச்சுவரை சோராது செயல்பட்டார். நேருவின் சிலைத் திறப்பு விழாவில் பிரதமருடன் அவர் காட்சி கொடுத்ததும், பேசியதும் மனதைவிட்டு நீங்குமுன்பே அவர் மூச்சு அடங்கிவிட்டது. தமிழக வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது!

சினிமாவிலும், அரசியலிலும் சாதனை படைத்த சரித்திர நாயகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி, அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூரும் தலையங்கம். (25.12.1987)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com