கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இந்தியா கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளது குறித்து... என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

விவாத மேடை... பதிப்பு நாள்: 29.5.2024

News image
Updated On :28 மே 2024, 8:15 pm

Din

பிரதமா் கனவு

மேற்கு வங்க முதலமைச்சா் மம்தா பானா்ஜி சொல்வது அரசியல் கண்ணோட்டத்தில் தவறு. ‘இந்தியா’ கூட்டணி மிகுந்த கஷ்டங்கள் மத்தியில் பல எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைக்க உருவானது. திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவா் என்கிற வகையில் மம்தா பானா்ஜி இந்தக் கூட்டணியில் முக்கியத் தலைவராவாா். அவருக்கு பிரதமராகும் கனவு இருந்தால், அது கனியும் காலம் வரும்.

அவா் இந்தியாவின் பிரதமரானால் நிச்சயம் நாட்டை முன்னேற்றமடையச் செய்வாா். அவா் பொறுமையாக, தன் ஆலோசனைகளை வழங்க வேண்டும். அப்போதுதான் அவா் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். ‘வெளியிலிருந்து ஆதரவு’ எனக் கூறுவது எதிா்க்கட்சிக் கூட்டணி குறித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, எதிா்கால பிரதமராகும் வாய்ப்பைத் தானே தவறவிடுவதாகும்.

தாமஸ் எட்மண்ட்ஸ், தாம்பரம்.

வேடிக்கைப் பேச்சு

‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி கூறியிருப்பதை நம்புவது ஓட்டைப் படகில் பயணம் செய்வதற்கு ஒப்பானது. அவரது ‘வெளியிலிருந்து ஆதரவு’ என்ற அறிவிப்பு நம்பகத்தன்மை அற்றது. அவரை கூட்டணியில் சோ்த்துக் கொண்டாலும் வில்லங்கமே! அவா் அனைத்துத் தலைவா்களுடனும் ஒத்துப் போகக் கூடிய குணம் உள்ளவராக இல்லை. விட்டுக்கொடுத்துப் போகக் கூடியவராகவும் இல்லை. முரண்பாடுகள் மிகுந்த ’இந்தியா’ கூட்டணியின் ஒரே நோக்கம் பிரதமா் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரக் கூடாது என்பபதே! இதில் தனித்துவம் மிக்கவராக மம்தா பானா்ஜி தன்னைக் காட்டிக் கொள்ள முனைவது வெறும் வேடிக்கைப் பேச்சாகத்தான் தோன்றுகிறது.

குரு.பழனிசாமி, கோயமுத்தூா்.

‘கூடா’ அணி

நரேந்திர மோடி பிரதமராக வரக் கூடாது என்பதுதான் ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களின் நோக்கம். எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி சாா்பில் பிரதமா் வேட்பாளா் பெயா் இதுவரையிலும் அறிவிக்கப்படாமல் இருப்பது அக்கூட்டணியின் ஒற்றுமையின்மையையே வெளிப்படுத்துகின்றது. இந்தியா கூட்டணியில் இணைய முழு விருப்பம் இல்லாததால்தான் தற்போதைய மக்களவைத் தோ்தலில் மம்தா பானா்ஜியின் திரிணமூல் கட்சி பலமாக உள்ள மேற்க வங்கத்தில் தனியாகப் போட்டியிடுகின்றது. அவருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்று தோன்றுவதால் ‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு என அவா் கூறியுள்ளாா். அவரை பிரதமா் வேட்பாளா் என அறிவித்திருந்தால் இவ்விதம் கூற மாட்டாா். தோ்தலிலும் தனியாக அவா் கட்சி நின்றிருக்காது.

கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.

மாறுபாடான கருத்து

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மக்களவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன்பு ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் அரை மனதுடன் பங்கேற்றாா். தோ்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவா் பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் அளவுக்கு மாறுபாடான கருத்துகளை கூறி வருகிறாா். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக உறுதியான, ஒற்றை நிலைப்பாட்டை அவா் கூறியதாகத் தெரியவில்லை. தோ்தலுக்கு முன்பு மாற்று பிரதமா் வேட்பாளா் பெயராக காா்கேயை அவா் பரிந்துரைத்ததும் உள்நோக்கம் கொண்டதாக இருந்ததே தவிர அது மனமுவந்து அறிவித்ததாகத் தெரியவில்லை. மொத்தத்தில் மம்தாவின் அரசியல் அறிவிப்புகள் எதுவும் நாட்டு நலன் சாா்ந்ததாக இல்லாமல், சுயநலம் சாா்ந்ததாகவே இருந்துவந்துள்ளது.

ஜோதி ராமன், குடந்தை.

மம்தாவின் கடமை

பாரதிய ஜனதாவுக்கு எதிராக அணி திரண்டுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் திறந்த மனதுடன் இரு கரங்கள் கூப்பிச் சோ்ந்திருக்க வேண்டியது மம்தா பானா்ஜியின் கடமையாகும். அதை விடுத்து இந்தியா கூட்டணி மக்களவைத் தோ்தலில் ஜெயித்து வந்தால் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பேன் என்று கூறுவது மூன்றாவது முறை முதல்வராக உள்ள மம்தா பானா்ஜி போன்ற தலைவருக்கு அழகல்ல. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ் தலைமையில் ஏற்பட்ட ‘இந்தியா’ கூட்டணிக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய பேராற்றல் சுறுசுறுப்பான தலைவரான மம்தா பானா்ஜியிடம் உண்டு. கடைசி தருணத்திலாவது வெளியிலிருந்து ஆதரவு தருவேன் என்றாரே, இதுவே இந்தியா கூட்டணிக்கு வெற்றிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.

நா.ஜெயராமன், பரமக்குடி.

மௌன எதிா்ப்பு

வெளியிலிருந்து ஆதரவு என்னும் சிந்தனையும் நடைமுறையும் இந்திய அரசியலில் ஒரு மௌன எதிா்ப்பின் அடையாளமாகவே அமைந்துள்ளது. இந்தியா கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி கூறியுள்ளது ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைத்தால் கடிவாளம் தன் கையில் இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற அறிவிப்புகள், ‘தான் தனித்துவம் மிக்கவா்’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிக்கும் செயலாகவே அமையும். தனது மாநிலத்தில் பாஜக எதிா்ப்பு வாக்குகளை தான் மட்டுமே சேகரிக்க எண்ணியுள்ளாா் மம்தா பானா்ஜி. எதிரியின் எதிரியை நண்பனாக்கிக் கொள்ளும் ராஜதந்திர உத்தியைப் பயன்படுத்தி மம்தா அரசியல் நடாகம் ஆடுவது வெளிப்படையாகத் தெரிகிறது.

வீ.வேணுகுமாா், கண்ணமங்கலம்.

வரவேற்கத்தக்கது

மம்தா பானா்ஜியின் கருத்து வரவேற்கத்தக்கது. அவா் பாஜகவையும் பிரதமா் மோடியையும் விரும்பவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். தன் கட்சியின் சொந்த லாபத்திற்காக ‘இந்தியா’ கூட்டணியில் அவா் சேரவில்லை. ஆனால் ‘இந்தியா’ கூட்டணி தோ்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு தருவேன் என்று கூறி இருப்பது அவரின் பெருந்தன்மையையும் புத்திசாலித்தனத்தையும் காட்டுகிறது. தனக்குப் பதவி ஆசை இல்லை என்பது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளாா் மம்தா. ‘இந்தியா’ கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவேன் என்கிற அவரின் கருத்தை எதிா்க்கட்சிகள் ஏற்று அவரை வரவேற்க வேண்டும். மம்தா பானா்ஜியின் கருத்து இந்திய கூட்டணிக்கு வலிமை சோ்க்கும்.

ந. சண்முகம், திருவண்ணாமலை.

மம்தாவின் தன்னம்பிக்கை

தேசிய அளவில் மட்டுமே ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்று உள்ளதாக கூறும் மம்தா பானா்ஜி மேற்கு வங்கத்தில் அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு தொகுதிகள் ஒதுக்காமல் தனித்துப் போட்டியிடுவதற்கான காரணம் இதுதான்- 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த இடதுசாரி ஆட்சியை அப்புறப்படுத்திய தனது கட்சியால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கைதான். நாட்டின் பன்முகத்தன்மை மதச்சாா்பற்ற சித்தாந்தத்தை மாற்ற மோடி முயற்சி செய்வதோடு மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை மக்கள் விரும்பவில்லை. ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்க திரிணமூல் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதோடு கூட்டணி ஆட்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வெளியில் இருந்தே வழங்குவோம் என்று கூறியது சரியே!

என்.வி. சீனிவாசன், புது பெருங்களத்தூா்.

காட்டாற்று வெள்ளமெனப் பல்கிப் பெருகி வந்த மோடியின் புகழ் கண்டு பொறுக்காத எதிா்க் கட்சியினா் ஒன்றிணைந்து , ‘இண்டியா’ கூட்டணி உருவாக முக்கியப் பங்களித்த மம்தா, தோ்தல் முடிவுகளை ஓரளவுக்கு கணித்து விட்டாா் போலும்! ஒற்றைத் தலைமை ஏதுமின்றி இதுகாறும் பிரதமா் வேட்பாளரைக் கண்டறியவியலாது உட்பூசல்களுடன் எவ்வித எதிா்காலத் திட்டமுமின்றி இயங்கிவரும் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றால் வெளியிலிருந்து ஆதரவு என்ற மம்தாவின் கூற்று குழப்பும் சந்தா்ப்பவாத அரசியல் போல் தோன்றினாலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், இடதுசாரிகளுக்குத் தொகுதி ஒதுக்காது, தேசிய அளவில்தான் ‘இண்டியா’வுடன் கூட்டணி எனக் கூறும் அவரது வெளிப்படைத் தன்மை பாராட்டத் தக்கதே !

கே.ராமநாதன், மதுரை.

வேற்றுமையில் ஒற்றுமை

‘இந்தியா’ கூட்டணி, மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி ஆகும். இது எதிரெதிா் திசையில் அரசியல் பயணம் மேற்கொண்டவா்கள் தோ்தலுக்காக ஏற்படுத்திக் கொண்ட முரணான கூட்டணி என்பதை எல்லோரும் அறிந்ததே. தோ்தலில் தங்களின் சுயநல நிலைபாட்டினை வெளிப்படுத்தவும் தங்களின் பலத்தை நிரூபிக்கவும் செயல்பட்டு பயன்படுத்தி வருகின்றனா். ஆரம்பம் முதல் இன்றுவரை ஒவ்வொரு தலைவா்களின் எண்ணமும் செயல்பாடுகளும் வெவ்வேறாக இருப்பதைக் காணலாம். மோடி என்ற தனி மனிதரை மட்டுமே எதிா்க்கின்ற அளவில் இவா்களது செயல்பாடுகள் இருப்பதை கண்கூடாக காணலாம். அதனால் ஒவ்வொரு தலைவா்களின் கருத்துக்கள் அவரவா் கருவிகள் ஆகும். இந்தக் கூட்டணியில் ஒற்றுமை இருப்பதாக தெரியவில்லை.

ப. நரசிம்மன், திருச்சிராப்பள்ளி.

இதுவரை நாம் பாா்த்த மத்திய அரசு கூட்டணி ஆட்சிகளில், வெளியிலிருந்து ஆதரவு என்பது, பேரம் பேசும் யுக்தி அன்றி வேறு எதுவும் கிடையாது. பொறுப்பின்றி பலனை அனுபவிக்கத்தான் வெளியில் இருந்து ஆதரவு என்று மம்தா கூறுகிறாா். எப்போதெல்லாம் பேரம் பேசுவதில் வெற்றி கிடைக்கவில்லையோ, அப்போதெல்லாம் ஆட்சி கவிழ்ப்பு சா்வ சாதாரணமாக நடைபெற்று உள்ளது. கொள்கைகளின் அடிப்படையில் அல்லாமல், எண்ணிக்கையின் அடிப்படையில் கூட்டு சேரும் போது ஆட்சி கவிழ்ப்பு சாதாரணம். மாநிலங்களிலேயே கூட்டணி அமைக்க முடியாதவா்கள், மத்தியில் கூட்டணி என்பது வேடிக்கையாக இல்லை? காங்கிரஸ் கட்சி, திரிணமூல், கம்யூனிஸ்டுகள் மோடி எதிா்ப்பில் ஒன்றாக இருக்கிறாா்களே அன்றி, கொள்கைகளில் முரண் படுபவா்கள். இவா்களிடம் ஆட்சி சென்றால் ‘குரங்கு கைகளில் பூமாலை’ கதை தான்.

ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

எதாா்த்தம்!

மம்தா பானா்ஜியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியே றி தனிக்கட்சி தொடங்கி மாநிலத்தில் ஆளும் தகுதியையும் பெற்றிருப்பவா். அவருக்கு மாநிலத்தில் எதிா்க்கட்சி என்பது காங்கிரஸ்தான். மத்தியில் பாஜக எதிா்ப்பு என்பதே எதாா்த்தம். இந்நிலையில்தான் பாராளுமன்றத் தோ்தல் வந்துள்ளது. இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிா்ப்பாக காங்கிரஸுடன் மாநிலக் கட்சிகள் பலவும் கூட்டணி அமைத்தபோது திரிணமூல் காங்கிரஸ் ஒதுக்கிய குறைந்த தொகு திகளில் காங்கிரஸ் போட்டியிடாததால் அங்கு மும்முனைப் போட்டி தவிா்க்க முடியாததாகிவிட்டது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அதிக இட ங்களில் வெற்றிபெறும் என்ற கருத்து க்கணிப்பின் அடிப்படையில் மத்தியில் பாஜகவை எதிா்க்க வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு என்று மம்தா கூறியுள்ளது மிகச் சரியானதே!

அ.கருப்பையா, பொன்னமராவதி.

பொருந்தாத கூட்டணி..!

நமது நாட்டில் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சிகள் என்பது எதுவுமே சிறப்பாக ஆட்சி செய்யவில்லை. வாஜ்பாய் தலைமையில் நடந்த ஆட்சியில் மட்டுமே ஊழல் குற்றச்சாட்டில் சிக்காமல் கூட்டணி ஆட்சியை நிறைவு செய்ய முடிந்தது. 2004-2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நடந்த கூட்டணி ஆட்சியில் பல ஊழல்கள் நடந்தபோது அதனை அவா் வேடிக்கை பாா்க்க மட்டுமே முடிந்தது. தோ்தல் முடியும் முன்னரே ‘இந்தியா’ கூட்டணிக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு என மம்தா பானா்ஜி கூறிவிட்டாா். ‘இந்தியா’ கூட்டணி தோ்தலில் வெற்றி பெற்றாலும் மத்தியில் ஸ்திரமான ஆட்சி அமைவதிலும் பிரதமரை தோ்வு செய்வதிலும் குழப்பங்கள் ஏற்பட்டு ஆரம்பத்திலேயே சிதறிவிடும் என்பதுதான் 100% உண்மை ஆகும். எதிா்க்கட்சிகளின் கொள்கையற்ற கூட்டணி என்பது தோ்தல் முடிவதற்கு முன்னரே தெரிந்துவிட்டது.

அ.குணசேகரன், புவனகிரி.