வங்கதேச ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாக காங்கிரஸ் கருதுகிறது- அமைச்சர் அமித் ஷாவின் குற்றச்சாட்டு குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ஓர் அரசுக்கு,ஊடுருவல்காரர்களைக் கண்டறியும் திறமை உண்டு. ஊடுருவல்காரர்கள் வாக்கு வங்கி இல்லை என்பதை பொது மக்களுக்கு மிகத் தெளிவாக புரிய வைக்கவே அமைச்சர் அமித் ஷா காங்கிரஸின் பார்வை தவறானது என்று குற்றஞ்சாட்டுகிறார்.
Updated on
3 min read

புரியவைக்கவே...

ஓர் அரசுக்கு,ஊடுருவல்காரர்களைக் கண்டறியும் திறமை உண்டு. ஊடுருவல்காரர்கள் வாக்கு வங்கி இல்லை என்பதை பொது மக்களுக்கு மிகத் தெளிவாக புரிய வைக்கவே அமைச்சர் அமித் ஷா காங்கிரஸின் பார்வை தவறானது என்று குற்றஞ்சாட்டுகிறார். ஊடுருவல்காரர்கள் என்று தெரிந்தாலே அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்துதல் முக்கியம் என்று காங்கிரஸுக்குப் புரிய வைக்கவே அவர்களின் இந்தச்செயல் ஒரு குற்றம் என்று துணிச்சலாக அமைச்சர் அமித் ஷா சொல்லியிருப்பதைப் பாராட்டலாம்.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

மாற்றுக்கருத்து இல்லை

அமித் ஷாவின் குற்றச்சாட்டு உண்மையே. ஏனெனில், ரோஹிங்கயா முஸ்லிம்கள் உள்பட வங்கதேசத்தினர் மேற்கு வங்கத்தில் பல காலமாக ஊடுருவி உள்ளனர். அவர்களில் பலர் இந்திய ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இப்படிப்பட்டவர்களை எதற்காக காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸும் ஆதரிக்கின்றனர் என்றால், நிச்சயமாக அவர்களை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தப்படுத்தலாம் என்பதால்தான். வங்கதேசத்தவர் மட்டுமல்ல, பிற அந்நிய தேசத்தவரும் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஜே.கே.என்.பழனி, குடியேற்றம்.

வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன

பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு இப்போது நடைபெறும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) முடிந்தபின் ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கதேச ஊடுருவல்காரர்கள் உள்பட போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்ட பிறகே எவ்வளவு வங்க தேச ஊடுருவல்காரர்கள் குறித்தும், போலியான ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு இந்திய மக்களின் வாழ்வாதார வாய்ப்புகளைப் பறித்து வந்துள்ளது தெரியவரும். அமித் ஷாவின் குற்றச்சாட்டு சரிதான்.

எஸ்.பாலாம்பாள்,சென்னை.

உள்நோக்கம் உள்ளது

வங்கதேச ஊடுவல்காரர்களை வாக்கு வங்கியாக காங்கிரஸ் கருதுவதாக அமைச்சர் அமித் ஷாவின் குற்றச்சாட்டு குறித்து வியப்படைய ஒன்றுமில்லை. மதம் -மொழி -இனம் என்ற மூன்றினை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேடுவோர், அவரவர் கோணங்களில் தனது அரசியல் பயணங்களை நிச்சயித்துக் கொள்வார்கள். அமித் ஷாவின் குற்றச்சாட்டை மாற்றி யோசித்தால், வங்கதேசக்காரர்கள் மீதான எச்சரிக்கைத் தீயை மூட்டி ஹிந்துக்களின் வாக்கு வங்கியைத் தங்களுக்குச் சாதகமாக்கும் உள்நோக்கம்தான் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

ஆர்.ஜி .பாலன், திசையன்விளை.

ஏற்றுக்கொள்ள முடியாது

கடந்த 10 ஆண்டுகளாக, பாஜக ஆட்சி செய்துவரும் நிலையில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை குறை சொல்லி கொண்டே இருப்பார்களோ தெரியவில்லை. எங்கள் ஆட்சியில் இந்தியா இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது, பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்கிறது என்று பேச முடியாமல், காங்கிரஸ் செய்த தவறு அதனால் ஊடுருவல்காரர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள் என்றெல்லாம் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மவ்லவீ எம். முஹம்மது ரபீக் ரஷாதீ,

விழுப்புரம்.

இயல்புதான்...

உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் குற்றச்சாட்டை ஒரு முறை யோசிக்க வேண்டும். அண்டை நாட்டிலிருந்து வந்தவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு இந்திய அரசாங்கம் வெளியேற்றிக் கொண்டுதான் இருக்கிறது. இதைப் பார்க்காமல் வங்கதேச ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கி என்று காங்கிரஸ் விமர்சனம் செய்வது நியாயமில்லை. இதனால்தான் அமித் ஷா குற்றஞ்சாட்டி இருக்கிறார். அரசு செய்யும் எல்லா செயலையும் எதிர்க்கட்சி இப்படிப் பேசுவது இயல்புதான். புரியாதவர்களுக்குப் புரிய வைக்கவே அமித் ஷா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

உஷாமுத்துராமன், மதுரை.

ஆப்பிரிக்காவுக்குப் போய்விடலாமா?

அரசியல் களமாக இருந்தாலும்கூட அப்பட்டமாக பிற கட்சி மீது பழி சுமத்துவது சரியல்ல. சில லட்சம் ஊடுருவல்காரர்கள் உள்ளே வந்துவிட்டதால் மட்டுமே நாட்டை பிடித்துவிட முடியுமா? முகமதியர்கள் வரலாற்றுக் காலம் முழுமையும் இங்கு வந்து குடியேறி இருக்கிறார்கள். வழிபாட்டைத் தவிர பிற அம்சங்களில் அவர்கள் நம் கலாசாரத்தோடு முழுமையாகக் கலந்து விட்டனர். நாம் எல்லோருமே அறுபதாயிரம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள்தான் என்பதால் அங்கேயே போய்விடலாமா?

கரு. பாலகிருஷ்ணன், தேவகோட்டை.

ஆட்சி செய்பவர்களின் பொறுப்பு

நாடு முழுவதும் பரவலாக ஊடுவல்காரர்கள் ஊடுருவியிருப்பது எப்படி என்கிற கேள்வி எழுகிறது. எல்லை தாண்டி அவர்களை வர விடாமல் தடுக்க வேண்டியது நாட்டை ஆளும் அரசின் கடமை. காங்கிரஸ் வாக்கு வங்கியாக ஊடுருவல்காரர்களைக் கருதும்போது, பல மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சி செய்யும் பாஜகவின் வெற்றிக்கு ஊடுருவல்காரர்களின் பங்கும் உண்டல்லவா? ஊடுருவல் காரர்களை அப்புறப்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஊடுருவலைத் தடுத்தாலே பயங்கரவாதம்முதல், வாக்கு வங்கி அரசியல்வரை உள்ள அனைத்து தீய சக்திகளையும் கட்டுப்படுத்த முடியும் !

கே.ராமநாதன், மதுரை.

முற்றிலும் உண்மை

வங்கதேச ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாக காங்கிரஸ் கருதுகிறது என்று அமித் ஷா குற்றம் சாட்டியிருப்பது உண்மை. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) என்பது சுதந்திர இந்தியாவில் பலமுறை நடந்தேறியுள்ளது. வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்த இத்திருத்தம் பெரிதும் உதவுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்டியல் திருத்தும் பணியை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். தீவிர திருத்தம் செய்யப்படும் போது ஊடுருவல்காரர்கள் பெயர்கள் நீக்கப்படுவது உறுதி. தங்கள் வாக்கு வங்கியின் பாதுகாப்புக்காகவே காங்கிரஸ் பட்டியல் திருத்தும் பணியை எதிர்த்து வருகிறது.

வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.

அரியணைதான் நோக்கம்

வங்கதேச ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாக காங்கிரஸ் கருதுவது உண்மையே. காங்கிரஸ் மட்டுமல்ல, மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது வாக்குகளுக்காக மட்டுமே. இவர்களுக்கு எப்படியாவது அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் மூலம் முதலில் ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, அவர்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதே சரியான நடவடிக்கையாகும்.

தி.ரெ.ராசேந்திரன், திருநாகேச்சரம்.

மதம்தான் காரணம்...

வங்கதேச ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் மட்டுமேவாக்கு வங்கியாகக் கருதவில்லை. திரிணமூல் காங்கிரஸும்அவர்களை நம்பித்தான் இருக்கிறது. இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவளிக்கின்றன. அதற்குக் காரணம் மதம்தான். காங்கிரஸின் அடிப்படை பலமே சிறுபான்மையினர்தான். அவர்களைப் பகைத்துக் கொள்ள அந்தக் கட்சி எப்போதும் விரும்புவதில்லை. காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருக்கும் மாநிலங்களிலும் அதே நிலைதான். மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்வதற்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதும் இதற்காகத்தான்.

வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.

அரசியலாக்குகிறார்கள்

ஊடுருவல்காரர்களின் புகலிடமாக மேற்குவங்கம் மாறி உள்ளது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. இது தேசிய பாதுகாப்பு பிரச்னை எல்லைகளை மூடி கண்காணிக்கக் கூடிய அரசு தேவை. இது திரிணமூல் காங்கிரஸôல் முடியாது என்கிறார் அமித் ஷா. எல்லைப் பகுதிகளில் பெட்ரா போல், சக்ரா பந்தாவில் வேலி அமைப்பதற்காக ஏற்கெனவே நிலம் வழங்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் நிலம் கொடுத்துள்ளோம். எந்தப் பணியும் நடக்கவில்லை என்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. இருவரும் இதை அரசியலாக்குகிறார்கள். தேச நலனே முக்கியம், அரசியல் அப்புறம்.

க.அருச்சுனன்,செங்கல்பட்டு.

எத்தனை காலம்தான்...

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை காங்கிரஸ் கட்சியும், ஆட்சி அதிகாரமும் ஏறத்தாழ நேருவின் குடும்பத்தினரால்தான் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. ஆட்சிக்கு வந்ததுமுதல் இன்றுவரை மோடியும், அமித் ஷாவும் உலக அரங்கில் இந்தியாவின் பின்னடைவுக்கு நேருவும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என்று தொடர்ந்து குற்றம் கூறிவருகின்றனர். அவற்றுள் ஒன்றுதான் வங்கதேச ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாக காங்கிரஸ் கருதுவதாகக் கூறியுள்ளதும். இந்த ஊடுருவல் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது?அவர்கள் நிலையை பாஜக அரசு எப்படிக் கையாள்கிறது? இதற்கெல்லாம் அவர்களிடம் பதில் இல்லை.

அ.கருப்பையா,பொன்னமராவதி.

மதச்சாயம் பூசக் கூடாது

உள்துறை அமைச்சரின் வார்த்தைகள் அரசியல் நாகரிகத்துக்குப் புறம்பானதாகக் கருதப்பட வேண்டிய ஒன்று என்றாலும், நம் நாட்டைச் சாராதவர்களை பெரிய அளவில் ஊடுருவ விட்ட மெத்தனப் போக்குக்கு முந்தைய காங்கிரஸ் அரசு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். வங்கதேசத்திலிருந்து ஊடுருவல் என்பது ஒரிரு நாளில் நிகழ்ந்த ஒன்றல்ல. இவை கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெறுகின்ற ஓர் அத்துமீறல். இவர்கள் நமது நாட்டுக்கு வந்து நமது சலுகைகள் அனைத்தையும் அனுபவித்து வருவது வேதனையிலும் வேதனை. இதில் மதச்சாயம் பூசிப்பார்ப்பதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என்பதே அமித் ஷாவின் கருத்தாகும்.

சோ.உலகநாதன், ராமேசுவரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com