முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். தத்து, சந்திரமௌலி குமார் பிரசாத், மதன் பி. லோகுர், எம்.ஒய். இக்பால் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணை ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாக தமிழக அரசு வழக்குரைஞரும்
அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தினால் அணை வலுவிழக்கும் என கேரள அரசு வழக்குரைஞரும் கடந்த சில வாரங்களாக முன்வைத்த வாதங்கள் தொடர்பாக நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வினோத் பாப்டேவிடம், "அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தாவிட்டாலும்கூட, அணை அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து அணை நிரம்பினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது?' என்று கேரளம் கவலைப்படுகிறதே என்று நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு பாப்டே, "கற்பனையான ஒரு தோற்றத்தை உருவகப்படுத்திக் கொண்டு கேரளம் அச்சப்படுவது தேவையற்றது.
ஒருவேளை தொடர்ச்சியாக மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்தால், அணையைத் திறந்துவிட்டதும் அந்த நீர் தமிழகத்துக்குதானே வரப்போகிறது. அதை நாங்களே பார்த்துக் கொள்வோம்.
அப்படியும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் நீதிமன்றத்தில்தான் கேரளம் முறையிட வேண்டுமே தவிர தன்னிச்சையாகச் செயல்படக்கூடாது' என்றார்.
அப்போது நீதிபதிகள், "அணையைத் திறந்தால் அதைச் சுற்றியுள்ள மக்களுக்குத்தானே பாதிப்பு ஏற்படும்.
அவர்களைக் காக்க உடனே நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்றத்தை ஒரு மாநில அரசு நாட வேண்டும் என எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள்?' என கேள்வி எழுப்பினர்.
கேரளம் வாதம்: அதையடுத்து, கேரள அரசு வழக்குரைஞர் ராஜீவ் தவான் முன்வைத்த வாதம்: 1979-இல் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை பலவீனமாக இருப்பதாக மத்திய நீர் ஆணையம் கூறியது. அதன் பிறகு சில மேற்பார்வை, பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவும், மத்திய நீர் ஆணையமும் முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் உள்ளது' என்று கடந்த ஆண்டு கூறின. ஆனால், எதிர்காலத்தில் அந்த அணை வலுவாக இருக்கும் என அவற்றால் உறுதிபட கூற முடியாது.
மாநில மக்களின் நலன் கருதியே அணைப் பாதுகாப்புச் சட்டத்தில் கேரள அரசு திருத்தம் செய்தது. முல்லைப் பெரியாறு அணை வழக்கில் 2006-இல்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அணைப் பாதுகாப்புச் சட்டத்தை 2003-ஆம் ஆண்டிலேயே கேரள அரசு கொண்டு வந்துவிட்டது.
இதன் மூலம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் கேரளம் தனிச் சட்டம் கொண்டு வந்ததாகத் தமிழகம் கூறுவதில் அடிப்படை இல்லை. சூழ்நிலையின் தேவை கருதி, முன்பு கொண்டு வந்த சட்டத்தில் 2006-இல் திருத்தம் மட்டுமே செய்யப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள அணை என்பதால் அதைச் சுற்றியுள்ள மக்களைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் செய்வதற்கு கேரள அரசுக்கு உரிமை உண்டு என்று ராஜீவ் தவான் வாதிட்டார்.
தமிழகம் வேண்டுகோள்: அதற்கு ஆட்சேபம் தெரிவித்து வினோத் பாப்டே வாதிட்டார். "முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் தன்னிச்சையாக சொந்தம் கொண்டாட முடியாது.
அந்த அணை இரு மாநிலங்களுக்கும் சொந்தமானது என்பதை பல்வேறு கால கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் கேரளம் ஒப்புக் கொண்டுள்ளது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் 1991-இல் பிறப்பித்த இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்பட்ட போது உச்ச நீதிமன்றம் அந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த மாநில அரசைக் கண்டித்தது.
நடுவர் மன்ற உத்தரவின்படி தண்ணீர் திறக்கவும் உத்தரவிட்டது. அதே நடைமுறையை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் பின்பற்ற வேண்டும்' என்று பாப்டே கேட்டுக் கொண்டார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு: அதையடுத்து, நீதிபதிகள் கேட்டுக் கொண்டபடி, தன்வசம் வைத்திருந்த காவிரி தொடர்புடைய உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை பாப்டே தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து, இரு மாநில அரசுகளின் வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், "இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறோம்.
தமிழக, கேரள அரசுகள் தரப்பில் முன்வைக்கத் தவறிய வாதங்கள் ஏதேனும் இருக்குமானால் இரு வாரங்களுக்குள் அதை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு தீர்ப்பு வழங்கப்படும்' என்று கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

